நம் நாட்டில் உள்ள ஊர்கள் உருவான கதையும் அதன் பெயர் காரணங்களையும் ஆராய்ந்தால் அது மிக சுவாரசியமான தகவலாக இருக்கும்.
அணை
முற்காலத்தில் தமிழ் மன்னர்கள் ஆற்றுநீரை அணைக்கட்டுகளால் தடுத்து கால்வாய்களின் வழியாக ஏரிகளிலும் குளங்களிலும் நிரப்பினார்கள். இவ்விதம் பாசனத்திற்கு பயன்பட்ட அணைகளின் அருகே சில ஊர்கள் எழுந்தன. தென்னார்க்காட்டில் கரடி அணை என்பது ஓர் ஊரின் பெயர். கண்ணனை ராமநாதபுரத்திலும் வெள்ளியணை திருச்சிராப்பள்ளி யிலும் காணப்படுகின்றன.
கால்
அணைகளைப் போலவே கால்வாய்களின் அருகே எழுந்த ஊர்களும் உண்டு. நெல்லை நாட்டில் கால் பள்ளக்கால் முதலிய ஊர்கள் உள்ளன. தலைக்கால் என்னும் ஊர் ராமநாதபுரத்தில் காணப்படுகின்றது. இன்னும் மணக்கால் திருச்சிராப் பள்ளியிலும், குவளைக்கால் தஞ்சை நாட்டிலும், மாங்கால் வட ஆற்காட்டிலும் விளங்குகின்றன. கால்வாய் என்னும் சொல்லே நெல்லை நாட்டின் ஒரு ஊரின் பெயராக வழங்குகின்றது.
ஓடை
இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடை என்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும், பாலோடை ராமநாதபுரத் திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.
மடை
கால்வாய்களிலும் குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடை என்று பெயர் பெறும். மடையின் வழியாகவே தண்ணீர் வயல்களில் சென்று பாயும். இத்தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டில் உள்ள பத்தமடை என்னும் பத்தல்மடையும், பாலாமடையும், மதுரையில் உள்ள மேலமடை முதலிய ஊர்களும் இதற்குச் சான்றாகும்.
ஏரி
ஏர் தொழிலாகிய பயிர்த்தொழிலுக்குப் பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிலையம் ஏரி எனப்படும். இத்தகைய ஏரியின் மருங்கே எழுந்த ஊர்கள் தமிழ்நாட்டில் பலவாகும். சில ஏரிகள் பண்டைய அரசர் பெயரால் இன்றும் அழைக்கப்படு கின்றன. சித்தூர் நாட்டில் பல்லவனேரி என்பது ஒரு ஊரின் பெயர். அது பல்லவ மன்னனால் ஆக்கப் பட்டதாகும். பாண்டியநாட்டில் மாறனேரி என்று பெயர் பெற்ற ஊர்கள் பல உண்டு. மாறன் என்னும் சொல் பாண்டியனைக் குறிக்கும். தொண்டை நாட்டில் உள்ள தென்னேரி என்னும் ஊரும் ஏரியின் அருகே எழுந்ததாகும். அது திரையன் என்னும் குறுநில மன்னனால் உண்டாக்கப்பட்டது.
திரையனேரி என்பது சிதைந்து தென்னேரி ஆயிற்று. கொங்கு நாட்டில் வீரபாண்டியன் என்னும் அரசனால் ஓர் ஏரி உண்டாக்கப்பட்டது. அதனருகே எழுந்த ஊர் வீரபாண்டிய பேர் ஏரி என்று பெயர் பெற்றது இப்பொழுது ஏரி என்று வழங்குகின்றது.
தெய்வப் பெயர் தாங்கிய ஏரிகளும் தமிழ்நாட்டிலே பல உண்டு. திருச்செந்தூரில் உள்ள ஆறுமுகச் செவ்வேளின் பெயரால் அமைந்தது ஆறுமுகநேரி. நாங்குனேரி வட்டத்தில் மலையாள மன்னனால் வெட்டப்பட்ட ஏரி ஒன்று பத்மநாபன் ஏரி என்று பெயர் பெற்று இப்பொழுது பதுமனேரி என வழங்குகின்றது.
பேரேரி
இன்னும் பேரி என்னும் சொல்லை இறுதியாக உடைய ஊர் பெயர்கள் சில உள்ளன. நெல்லை நாட்டில் சீவலப்பேரி, கண்டியப்பேரி, அலங்காரப் பேரி, விஸ்வநாதப்பேரி முதலிய பேரிகள் உண்டு. பேரி என்பது பேரேரி என்பதன் சிதைவாகும். பெரிய ஏரிகள் பேரேரி என்று பெயர் பெற்றனர். இதற்குச் சான்று சாசனங்களில் காணலாம். மதுராந்தகன் என்னும் மன்னன் ஆக்கிய பேரேரி மதுராந்தகப் பேரேரி என்றும் ஆற்காட்டில் சுந்தரசோழன் கட்டிய ஏரி சுந்தர சோழப்பேரேரி என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ளனர். திருநெல்வேலியில் உள்ள சீவலப் பேரியின் பழம்பெயர் முக்கூடல் என்பதாகும். அஃது அவ்வூருக்கு இயற்கையாக அமைந்த பெயர். பிற்காலத்தில் ஸ்ரீவல்லவன் என்னும் பாண்டியன் அவ்வூரில் பேரேரி ஒன்று உண்டாக்கி, சீவல்லபப் பேரேரி என்று அதற்குப் பெயரிட்டான். அப்பெயர் சிதைந்து சீவலப்பேரி ஆயிற்று.
கன்னட நாட்டு செல்வன் ஒருவன் நெல்லை நாட்டில் புகுந்து தாமிரபரணி ஆற்றில் ஒரு அணைகட்டி அதன் நீரை கால்வாய்களின் வழியாகக் கொண்டு சென்று பயிர்த் தொழிலைப் பேணினான் என்று பழங்கதை ஒன்று வழங்குகின்றது. அவ்வாற்றில் மூன்றாம் அணைக்கட்டு, கன்னடியன் அணை என்று இன்றும் வழங்குவது அதற்குச் சான்றாகும். அக்கன்னடியன் நெல்லை நகரத்தின் அருகே பெரியதோர் ஏரியும் கட்டி அதற்கு கன்னடியப் பேரேரி என்று பெயரிட்டான். நாளடைவில் அவ்வேரியும் அதை சார்ந்த ஊரும் கண்டியப்பேரி என்று மருவி வழங்கலாயின. அலங்காரப்பேரி என்பது மற்றொரு ஊரின் பெயர். தண்ணீர் பெருகி நிறைந்து, தெள்ளிய அலைகள் எழுந்து, அலைந்து வரும் அழகு அலங்காரப்பேரி என்னும் பெயரிலே விளங்குகின்றது.
கோட்டகம்
கோட்டகம் என்பதும் பெரிய ஏரியின் பெயர். காவிரி நாட்டில் பல கோட்டகங்கள் உண்டு. தஞ்சை நாட்டில் உள்ள புதுக்கோட்டகம், மானங்காத்தான் கோட்டகம் முதலிய ஊர்கள் இதற்குச் சான்றாகும்.
குளம்
ஏரிக்கு அடுத்தபடியாக வேளாண்மைக்கு உதவுவது குளம். குளம் என்னும் முடிவு உடைய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் காணப்படும். குளங்கள் நிறம் பற்றியும் அளவு பற்றியும் பல பெயர்களை பெற்று வழங்கும். நெல்லை நாட்டிலுள்ள கருங்குளமும், திருச்சி நாட்டிலுள்ள செங்குளமும், அவற்றில் உள்ள நீரின் நிறத்தைக் காட்டுகின்றன. மதுரையில் உள்ள பெருங்குளம் என்னும் ஊர் பெரியதொரு குளத்தின் அருகே எழுந்ததாகும். தஞ்சை நாட்டுப் பூங்குளமும், தென்னாற்காட்டுப் புதுக்குளமும் அக்குளங்களின் தன்மையை புலப்படுத்துகின்றன.
-தயவுடன் தனிப்பெருங்கருணை ஆசிரியர் குழு.
