அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதியே போற்றி!
ஆதியும் அந்தமும் அற்ற நல்ஜோதி!
சுத்தவெளி, பரவெளி பரவும் நல்ஜோதி!
சன்மார்க்கம் தழைத்திட எழுந்த நல்ஜோதி!
திசைகள் அற்று விரிந்திடும் நல்ஜோதி!
மனிதனின் சிரசினிலே நடனமாடும் நல்ஜோதி!
மகரமும் சிகரமும் இணைத்திடும் நல்ஜோதி!
ஜீவன் அது சுகம் பெற ஒளி தரும் நல்ஜோதி!
ஏழேழு பிறப்பும் நீங்கிட பிறப்பிலி அருளும் நல்ஜோதி!
அன்பும் தயையும் ஜீவகாருண்யமுமே இறை என பறைசாற்றும் ஆனந்த நல்ஜோதி!
தயை கண்டு உணருங்கால் பரம் காண உதவிடும் நல்ஜோதி!
சிற்சபையும் பொற்சபையும் ஏகாந்தம் உணர்த்திடும் நல்ஜோதி!
மருவியே நிலைத்தாலும் மாயைகள் சூழ்ந்தாலும் சத்தியமான நல்ஜோதி!
கதியென்று சரணம் அடைவோர் கரம் பற்றும் நல்ஜோதி!
தன்னிலை மாறாத தனிப்பெருங்கருணையான அருட்பெருஞ்ஜோதியே போற்றி!
வள்ளல் பெருமானே போற்றி போற்றி..!

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்த ஜகத்தினரைத் திருத்தி, சன்மார்க்க நெறியில் செலுத்துவதற்காகவும், இந்த உலக உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழவும், பாரெல்லாம் பசிப்பிணி, மரணப்பிணி தீர்ந்து மனிதகுலம் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று உய்வு பெறவும், எல்லாம் வல்ல தனிப்பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கி.பி.1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள் வள்ளல் பெருமானார் அவர்கள் வருவிக்கவுற்றார்.
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் என்று வையகத்தோரால் அறியப்படுபவரும், சிதம்பரம் இராமலிங்கம் என்று தன் பெயரிலேயே சமய நல்லிணக்கம் கண்டவருமான வள்ளல் பெருமானார் சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் பிறந்து, சென்னையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து, பிறகு வடலூரில் வசித்து மேட்டுக்குப்பத்தில் 1874 ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி தம்முடைய 51-ஆம் வயதில் தைப்பூசத்தினத்தன்று என்றும் இறவா நிலையெனும் மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்றார்.
மாபெரும் செய்தவத்தால் வந்துதித்த பிறவிப்பிணி தீர்க்க வந்த கருணைக் கடலான வள்ளலாரின் 202 ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரின் பன்முகச் சிறப்புகளைப் பார்ப்போம்.
பதிப்பாசிரியராய் வள்ளற்பெருமானார்
திருஅருட்பிரகாச வள்ளற் பெருமானார், சென்னையில் வாழ்ந்த காலத்தில் தனது 28 வது அகவையில் ஒழிவில் ஒடுக்கம் (1851), தொண்டமண்டல சதகம் (1855), சின்மய தீபிகை (1857) ஆகிய மூன்று அரிய ஞான நூல்களைப் பதிப்பித்தார்கள். சிறந்த ஞான நூல்களை எல்லாம் ஆராய்ந்து பதிப்பிக்கும் ஆற்றலைப் பெற்றுப் பதிப்பு ஆசிரியர்களுக்கு எல்லாம் வழிகாட்டும் தலைச்சிறந்த பதிப்பாசிரியராய்ப் பெருமானார் திகழ்கின்றார்கள்.
உரையாசிரியராய் வள்ளற்பெருமானார்
*காழிக் கண்ணுடைய வள்ளலால் அருளப் பெற்ற ‘ஒழிவிலொடுக்கம்’ என்னும் சிறந்த ஞான நூலுக்கு வள்ளற்பெருமானார் சிறப்புப்பாயிரச் செய்யுளுக்கு உரையும், அதற்கான விருத்தி உரையும் செய்தருளினார்கள்.
*தொண்டமண்டல சதகம் – நூற்பெயர் இலக்கணம், வழிபடு கடவுள் வணக்கப்பாட்டுரையும் பெருமானார் அருளியுள்ளார்கள்.
*தமிழின் ஞானச் சிறப்பை விளக்கி பெருமானார் செய்த உரை ‘சித்தாந்த தீபிகை’ என்னும் திங்களிதழில் ‘தமிழ் – ஶ்ரீ ராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது’ என்று வெளிவந்தது.
*‘பொன் வண்ணத்தந்தாதி 22-ம் செய்யுள்’ – வியாக்கியான உரை செய்துள்ளார்.
*வேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றனுக்கு உரையும் அருளியுள்ளார்கள்.
வியாக்கியான கர்த்தராய் வள்ளற்பெருமானார்
*உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம், தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை போன்று பல அருள் உரைகள் அருளப்பட்டு சிறந்த வியாக்கியான கர்த்தராயும் போற்றப்படுகின்றார் வள்ளற்பெருமானார்.
நூலாசிரியராய் வள்ளற்பெருமானார்
ஓதாமல் சன்மார்க்க நெறியை முற்றும் உணர்ந்த வள்ளற் பெருமானார் அருளிய அன்னை அருந்தமிழ்மொழியின் உரைநடை நூல்களான ‘மனு முறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகிய இரு நூல்களும் சன்மார்க்க உலகின் ஒப்பற்ற நூல்களாகும்.
‘மனு முறைகண்ட வாசகம்’ படிப்போர் மனதில் உயிர் இரக்கத்தைப் பொழியச் செய்வதாக இருக்கும் இந்நூல் நல்லொழுக்கத்தையும், சமூக நீதியையும், வாழ்வியல் நியாய தர்ம ஒழுக்க நெறிகளை வலியுறுத்துவதோடு, மனிதநேயத்தையும், ஜீவகாருண்யத்தையும் உணர்த்துவதாகும். “நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ?” என்று அவர் பட்டியலிடும் 42 நல்லொழுக்க வாசகங்களை ஒரு மனிதன் கடைப்பிடித்தாலே அவன் தெய்வமாகிவிடலாம்.
‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ பகுதியானது சன்மார்க்க அருள் கலைக் களஞ்சியமாகும். அதனைக் கற்று, உணர்ந்து, அதன் வழி நிற்க, அருட்பெருஞ்ஜோதியின் அன்பும் அறிவும் உடனாக விளங்கும்.
இவையன்றி, “திருவருட்பா உரைநடைப் பகுதி” என்ற தொகுப்பில் அவரது உரைநடை ஆக்கங்கள் அடங்கியுள்ளன. சன்மார்க்க சாதகர்களுக்கு ’திருஅருட்பா’ உயிர் எனில், அந்த உயிருக்கு உடலாக இருப்பது உரைநடைப் பகுதியாகும். உரைநடைப் பகுதியில் ஏறா நிலைமிசை ஏறுவதற்குரிய வழிவகைகளாகச் சன்மார்க்க விண்ணப்பங்களும், உபதேசங்களும், மருத்துவக் குறிப்புகளும், திருமுகங்களும், அறிவிப்புகளும், கட்டளைகளும் ஊன் பெறும் ‘உயிர் வளர்கலை இரகசியங்களாக’ உள்ளது.
பத்திரிகையாசிரியராக வள்ளற்பெருமானார்
*சன்மார்க்க விவேகமானது சமுதாயத்தில் சென்று சேர்ந்து விருத்தியாக வேண்டும் என்று ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் பத்திரிகையைத் தொடங்கி பத்திரிகையாசிரியராகவும் வள்ளற்பெருமானார் பரிமளித்தார்கள்.
சீர்திருத்தவாதியாய் வள்ளற்பெருமானார்
19 ஆம் நூற்றாண்டில் சாதி, சமய பேதங்களாலும், ஆதிக்க ஒடுக்கத்தினாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த மக்களை மீட்க வந்துதித்த விடிவெள்ளியான இராமலிங்க அடிகள் ‘ஆன்மநேய ஒருமைப்பாடு’ என்னும் மிகப் பெரிய சத்திய உண்மையைப் போதித்த சமூக, ஆன்மீக சீர்திருத்தவாதி ஆவார். 1865இல் சாதி, சமய பேதங்கள் இல்லாத, அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், கருணையும் செலுத்தும் பொது நெறியை வகுத்து, ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை’ நிறுவினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் போதித்தார். பல்வேறு மதங்களுக்கிடையே இருந்த பேதங்களை நீக்கி, அனைத்து உயிர்களும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தினார். சாதி, சமய, மத, வர்க்க வேறுபாடுகளற்ற ஒரு நல்சமூகத்தை உருவாக்கப் பாடுபட்டார்.
“அறிவுநிலைத் தெளிந்தோர்க்கு உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு”
எதிலும் பரந்த, பொது நோக்கம் வேண்டும். எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. எந்த உயிரையும் கொலை செய்யக் கூடாது. புலால் உண்ணக் கூடாது. உயிர் பலியிடுதல் கூடவே கூடாது என்று மிகவும் ஆணித்தரமாக வள்ளலார் வலியுறுத்தினார்.
மக்களை மயக்கப் பிடியிலிருந்து விடுவிக்க வள்ளலார் செய்த சீர்திருத்தங்களில் மற்றொன்று, மக்களைக் கள் குடியிலிருந்து சீர்திருத்துவதாகும். கள் உண்ணுவது ஒருவரை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை “கள், காமம், கொலை, களவு, பொய் இவையனைத்தும் கொடிய துன்பத்தை உண்டு பண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேட பாவம், எனினும் கள் உண்டவருக்குக் காமம் உண்டாகாமல் இருக்காது, கொலை செய்யத் துணிவு வராமல் இராது. அவன் களவு செய்யாமல் இரான். பொய் பேசவும் அஞ்சான், ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடராமல் இரா” எனத் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தினார்.
இராமலிங்க அடிகள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார். உயிர் நேயம், தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாய சீர்திருத்தும் கருத்துகளை ஆழமாக எடுத்துரைத்தவர் வள்ளலார்.
‘வேதம், ஆகமம், புராணம், சாத்திரம், இதிகாசம் எதையும் நம்பவேண்டாம். அது எதுவுமே உண்மையைச் சொல்லவில்லை, ‘உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு’ என்று மிகத் தைரியமாக உண்மையை உரைத்துச் சொன்னவர் வள்ளலார்.
பசித்தோருக்கு அன்னமிடும் அன்னையாய் வள்ளற்பெருமானார்
‘பசியை ஒரு பிணி’ என்று சொன்னவர் வள்ளலார். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஓர் உயிர், ஈருயிர் என்றில்லாமல் அனைத்து உயிர்களையும் வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்கும் பிணி பசி. அதைப் போக்குவதே மாபெரும் தருமம், எல்லா அறங்களுக்கும் மேலானது என்ற சத்தியம் உரைத்தார்.
அதற்குத் தானே முன்னுதாரணமாக, 1867 ஆம் ஆண்டு பஞ்சம், பட்டினி, வறுமை என எங்கும் ஒலித்த ஏழை மக்களின் பசிப்பிணியின் அவலக்குரலை நீக்க, அருள் அன்னையாய் பசித்தோரின் துயர் துடைக்க வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி அவர் கையாலே மூட்டப்பட்ட நெருப்பு தான் இன்று வரை பசித்தவர்களின் பசி என்னும் கொடும் நெருப்பை அணைத்துப் பசியாற்றி, அன்பையும், அருளையும், தருமத்தையும் இன்றும் பரிமாறிக் கொண்டிருக்கிறது.

அந்த அருள் அணையா அடுப்பை மூட்டியபோது, ”உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரைத் தருமம் அணையாது” என்று சொன்னவர் வள்ளலார். அவரின் சத்திய வாக்கிற்கிணங்க கோவிட் தொற்று ஊரடங்கு காலத்தில், உலகின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடி இருந்த நிலையிலும் கூட, பசித்தோரின் பசித்த வயிற்றுக்கு உணவளித்துப் பசியாற்றியது வடலூர் ‘வள்ளலார் சத்திய தருமச்சாலை’.
அன்று அவர் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலையின் அணையா அடுப்பானது இன்றளவும் பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி, நிறம், தேசம் முதலிய வேறுபாடுகள் பாராது லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி ஆகார, தரும விருத்தி செய்து வருகிறது.
ஞானாசிரியராய் வள்ளற்பெருமானார்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இறைமையை ஒளி வடிவில், ஜோதி உருவமாகப் பாகுபாடின்றி அனைத்து மக்களும் வழிபடுவதற்காகவே வடலூரில் ‘சத்திய ஞான சபையை’ நிறுவினார். ஆனால் இறைவன் அருளும் சத்திய ஞான சபைக்குள் உள்நுழைய ‘புலை, கொலை தவிர்த்தோர் மட்டுமே உட்புகுதல் வேண்டும்’ என்ற அறக்கட்டணம் மட்டுமே அதற்கான முதற்படியாய் வகுத்துள்ளார் வள்ளலார்.
தமிழ்மொழியே இறைவன் அருளைப் பெறும் வழியாகும். தமிழ்மொழியே தரணிக்கு அருள் ஆற்றல் அளிக்கும் ஆணிவேராகும். தமிழ்மொழியே மரணமில்லாப் பெருவாழ்விற்கும் வித்திடும் ஞான மொழியாகும். மெய்ஞ்ஞானிகள் எழுதி வைத்துள்ள தமிழ் நூல்களின் மறைபொருள் சூட்சுமம் என்ன? என்பதற்கான விடை தான் ‘திருஅருட்பா’.
“வான் கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
வள்ளல் எலாம் வல்லவர் நன்மலர் எடுத்தென் உளத்தே
தான் கொடுக்க நான் வாங்கித் தொடுக்கின்றேன்”
என்ற வள்ளலாரின் மெய்ம்மொழியால், திருஅருட்பாவின் அருள் ஆற்றலின் சிறப்புகளைப் பற்றிக் கூற இந்த வரிகளே போதும். வள்ளலார் தான் அடைந்த மரணமில்லாப் பெருவாழ்வை அடையும் அருள் வழியாக, ஞான மார்க்கத்தைப் போதிக்கும் திருஅருட்கொடையாக திருஅருட்பாவைத் தந்தருளினார். ஞானப் பொக்கிஷமான இந்நூல் நமது வாழ்வியல், அருளியல், இப்பிரபஞ்ச இரகசியங்கள், அக ஞான அனுபவங்கள் மற்றும் எல்லாவற்றிற்குமான ஞானத்திறவுகோல். மரணமில்லாப் பெருவாழ்வை அடையப் புலால் மறுத்து, நித்திய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து, ‘ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்’ என்ற அருள்நெறியோடு, அன்பு, தயவு, கருணை, மனிதநேயம், ஆன்மநேயத்தோடு, எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் காக்க வேண்டும் என்பதே வள்ளலார் வகுத்த சமரச சுத்த சன்மார்க்கமாகும்.
போதகாசிரியராய் வள்ளற்பெருமானார்
மக்களின் அறியாமையை நீக்க ஞானமார்க்கத்தின் முக்கிய ஆதாரமான ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வையும், ஜீவகாருண்யத்தையும் போதித்தார் வள்ளலார். ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உயிர்களின் நேயம் போதித்த வள்ளலாரின் அறநெறிகள்…
- கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
- எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
- சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைத் தவிர்த்தல்.
- சிறு தெய்வ வழிபாட்டினையும், பலியிடுதலையும் விலக்குக.
- புலால் உண்ணர்க்க, எவ்வுயிரையும் கொலை செய்யர்க்க.
- ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
- இறந்தவர்களை எரிக்காது, சமாதி வைக்க வேண்டும்.
- கருமாதி, திதி, முதலிய சடங்குகள் வேண்டாம்.
- இந்திரிய, கர்ம, ஜீவ, ஆன்ம, நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்திடுக.
- உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க
சித்த மருத்துவராய் வள்ளற்பெருமானார்
உலக ஜீவர்களின் அனைத்துப் பிணிகளுக்குமான மருந்துகள் அத்தனையும் ஒருங்கே உள்ள மருந்துப்பெட்டி தான் வள்ளலார் அருளிய திருஅருட்பாவும், அருட்பெருஞ்ஜோதி அகவலும், உரைநடையும்.
உடலை வதைக்கும் உடற்பிணிகள், உயிரை வதைக்கும் உயிர்ப்பிணிகள், உளத்தைச் சிதைக்கும் உளப்பிணிகள், உயிரைப் பறிக்கும் மரணப்பிணிகள் என அனைத்தையும் தீர்க்கும் அருள் வைத்தியராகவும், உலகில் உள்ள அனைத்து மூலிகை வைத்தியங்களையும், இரசவாதம் போன்று அனைத்து வித வைத்தியங்களையும் ஒரு சேரக் கற்றறிந்த சிறந்த சித்த வைத்தியராகவும் நம் வள்ளற்பெருமானார் திகழ்கிறார்.
அருள் ஞானியாய் வள்ளற்பெருமானார்
காலம் காலமாக ஆன்மீகவாதிகள், யோகிகள், தவசிகள், மேலோர்கள் எல்லாம் கடவுளைக் காண வேண்டும் என்றும், கடவுளின் அருளைப் பெற வேண்டும் என்றும், யாகம், யோகம், தவம், தியானம் செய்ய வேண்டி
காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும், ஆலயங்களிலும் அலைந்து திரிந்து பெற்றதை விட, ஜீவகாருண்யத்தின் மூலம் ஓர் உயிர் படும் பசியின் வேதனையை நீக்கினாலே கூட இறைவன் அருளைப் பெற முடியும் என்ற பேருண்மையை வள்ளற்பெருமானார் அவர்கள்
‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’,
‘ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்’, என்று உலகிலுள்ள உயிர்களை எல்லாம் தம்முயிர் போல் எண்ணி, அவைகளுக்குத் துன்பம் தராமல், துன்பம் வந்தால் அத்துன்பங்களைப் போக்குவதற்கு உண்டான வழிவகைகளைக் கண்டுபிடித்து அவைகளை நீக்குவது தான் ‘உண்மைக் கடவுள் வழிபாடு’ என்றார்.
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே கடவுள் அருளைப் பெறக் கூடுமல்லாது, வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாதென்று உறுதியாக அறிதல் வேண்டும்.
“உயிர்கள் மேல் அன்பு செலுத்துவதே உண்மைக் கடவுள் வழிபாடு”
“உயிர்க்கொலை செய்யாமல் இருப்பது தான் உண்மைக் கடவுள் வழிபாடு”
“ஆன்மநேய ஒருமைப்பாடு தான் உண்மைக் கடவுள் வழிபாடு”
“கடவுள் ஒருவரே! அவர் அருட்பெரும்ஒளியாக இருக்கிறார் என்பதை, அறிவுசார்ந்த தெளிவுடன் உணர்வதே உண்மைக் கடவுள் வழிபாடு”
“உலகினில் உயிர்களுக்குறும் இடையூறெல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க”
“உயிருள் யாம் எம்முள் உயிர் இவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே”
“உயிரெலாம் பொதுவில் உளம் பட நோக்குக செயிரெலாம் விடுகெனச செப்பிய சிவமே”
“பயிர்ப்புறு கரணப்பரிசுகள் பற்பல உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே” கடவுள் படைப்பினால் தோன்றிய உயிர் இனங்களை வாழ வைப்பதே பெரும் தவமாகும் என்கிறார் வள்ளலார். யாகம், யோகம், தவம், தியானம் செய்யும் சித்தர்களும், முத்தர்களும் கூட ஜீவகாருண்யம் செய்யாமல் இறை அருளைப் பெற முடியாது என்கிறார் வள்ளலார். ‘ஜீவகாருண்ய ஒழுக்கமும், அற்றார் அழி பசி தீர்த்தலும், புலால் மறுத்தலும், சத்விசாரமுமே’ இறைவனை அடையும் ஞானவழியான சமரச சுத்த சன்மார்க்கம் என்றும் வள்ளலார் உணர்த்துகிறார்
அருட்கவிஞராய் வள்ளற்பெருமானார்
*ஆண்டவர் கருணையால் வள்ளலார் அருட்கவிஞராய் இளமையிலேயே ஓதாமல் உணர்ந்து கவி பாடும் அருள் ஆற்றல் பெற்றவர். வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பே திருவருட்பா. தமிழ்மொழியின் செய்யுள் இலக்கணத்தில் எத்தனை வகை யாப்புகள் உண்டோ அத்தனை வகையாலும் திருஅருட்பா பாடல்களும், இசைக் கீர்த்தனங்களும் பாடப்பெற்றுள்ளது. திருஅருட்பா மெய்ஞ்ஞானச் சுரங்கம் மட்டுமல்லாது தீந்தமிழின் தெய்வீகப் பாக்களும் ஆகும்.
*திருஅருட்பா ஒன்று முதல் ஐந்து திருமுறை வரை சுத்ததேகம், பிரணவதேகத்தில் எழுதியதாகவும், ஆறாம் திருமுறை மட்டும் சுத்த, பிரணவ, ஞானதேகத்தில் எழுதியதாகவும் அறியப்படுகிறது.
*மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 1873ல் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வள்ளற்பெருமானார் ‘பேருபதேசம் (மகா உபதேசம்) செய்கிறார். அதில் கடவுள் உண்மையும், ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அசுத்த, சுத்த, மாயத் திரைகளும், அவற்றை விலக்கும் வழிமுறைகளும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடும் வழிமுறைகளையும், ஆண்டவரை எவ்வாறு ஓதி துதிக்க வேண்டும் என்ற *அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தையும்* வெளிப்படுத்துகின்றார்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமானது உலகில் உள்ள எல்லா மந்திரச் சொற்களுக்கும் முதன்மையானதும், முக்கியமானதும், தலைமையானதும் ஆகும். இம்மகாமந்திர மகா வாக்கியத்தை ஆண்டவர் கட்டளைப்படி வெளியிடுகிறார்.
*சன்மார்க்கத்தவர்களால் என்றென்றும் மணிமகுடமாய் போற்றப்படும் ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ ஓர் இரவிலேயே வள்ளற்பெருமானாரால் இறை அனுபவத்தின் பரிபூரணத்தின் வெளிப்பாடாக எழுதப்பட்டது. 1596 அடிகளைக் கொண்ட இப்பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அருள் ஆக்கினையைப் பெற்றுத் தரவல்ல வல்லப சக்தியைப் பெற்றுள்ளது.
அருட்பெருஞ்ஜோதி அகவல் பற்றி ஊரன் அடிகள்,
“திருமுறை ஆறனுள்ளும் சிறந்தது ஆறாம் திருமுறை.
அதனுள்ளும் சிறந்தது அருட்பெருஞ்ஜோதி அகவல். திருஅருட்பா ஒரு ஞான உடம்பு எனின், அதன் தலை (முகம்) ஆறாம் திருமுறை. அம்முகத்திற் கண் அருட்பெருஞ்ஜோதி அகவல்.
அக்கண்ணுள் மணி அருட்பெருஞ்ஜோதி மந்திரம்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை ஆயிரம் முறை ஓதுவது அருட்பெருஞ்ஜோதி அகவல்.” என்று குறிப்பிட்டுள்ளார். திருவருட்பாவும், அருட்பெருஞ்ஜோதி அகவலும், உரைநடை குறிப்பு உபதேசங்களும் உருகாத மனதையும் உருகவைக்கும். மனம் தூய்மை பெறும். இல்லத்திலும் உள்ளத்திலும் இருக்கும் குழப்பங்களும் அமைதியின்மையும் விலகும். சந்தோஷமும் வெற்றியும் நிறைவும் இல்லத்தில் ததும்பிப் பொங்கி வழியும்.
அருட்பெருஞ்ஜோதியராய் வள்ளலார்
வடலூர் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் ஒளியுடல் பெறுவதற்கு முன்பாக பெருமானார் ஶ்ரீ முக வருடம் கார்த்திகைத் திங்களில் தன்னுடைய அறையில் உள்ளே இருந்த அகல் விளக்கை ஒளியேற்றி எடுத்து வந்து வெளியில் வைத்து, தனது இறுதி உபதேசமாக ‘இறைவன் தீப முன்னிலையில் விளங்குவதால், அதனைத் தடைபடாது ஆராதியுங்கள். ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் காலத்தை வீணில் கழிக்காமல், ‘நினைந்து நினைந்து’ என்னும் 28 பாசுரமடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். இனி எல்லோர் உடம்பிலும் புகுந்து கொள்வேன்’ என்ற சத்திய வார்த்தைகளைக் கூறினார்.
ஶ்ரீ முக ஆண்டு தைத்திங்கள் 19ஆம் நாள் (30-01-1874) வெள்ளிக்கிழமை இரவு 15 நாழிகைக்கு (12 மணிக்கு) அருட்பெருஞ்ஜோதியரோடு ஒளியாகிக் கலந்தார்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு ஒன்றெனக் கலந்து ‘நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்’ என்று அனைத்து உயிர்களிலும் ஒன்றெனக் கலந்து இன்றளவும் அவரே சன்மார்க்கம் நடத்துகின்றார்.
‘நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை’ என்ற வள்ளலாரின் வாக்கிற்கு ஏற்ப அருட்பெருஞ்ஜோதியராய்த் திகழும் வள்ளலாரின் சுத்த சத்திய சன்மார்க்க நெறிகளை நாமும் பின்பற்றி பக்குவம் அடைந்து மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறும் அருளியல் வாழ்வில் பயணிப்போம். அந்த அதி அற்புத தெய்வத்தின் சன்மார்க்கத்தைப் பாரெங்கும் எடுத்துச் செல்வோம்.

பெருநூல்களைத் தக்கார்க்குப் பாடஞ்சொல்லும் போதகாசிரியராக விளங்கிய பெருமானார் வழி நின்று, நாமும் அடுத்த தலைமுறையினருக்கு அறம் சார்ந்து ஒழுகும் வாழ்வியல் நீதி நூல்களைப் பயிற்றுவித்து, நம் குழந்தைகளை இவ்வையகத்தினில் சத்தியமான அறவழியில் வாழ்ந்திட வழி நடத்துவோம்.
– தயவுடன் சிநேகலதா

