கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் நாள் முதல் தமிழக அரசு வள்ளல் பெருமானின் 200வது வருவிக்கவுற்ற நாள், சத்திய தருமச்சாலை தொடங்கிய 156வது ஆண்டு, சத்திய ஞானசபை தொடங்கிய 152வது ஆண்டு ஆகிய மூன்று விழாக்களையும் ஒன்றுசேர்த்துக் கொண்டாடும் விதமாக வள்ளலார் முப்பெரும் விழா என்ற பெயரில் ஒவ்வொரு ஞாயிறுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரத்தில் மிக விமர்சையாகக் கொண்டாட வழிவகை செய்திருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் நாள் சென்னையில், தமிழக முதல்வர் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கிவைக்கப்பட்ட வள்ளலார் முப்பெரும் விழா வருகிற அக்டோபர் 5ம் நாள் இனிதே நிறைவு பெறுகிறது. தமிழக அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிற வள்ளலார் முப்பெரும் விழா வள்ளலாரையும், சுத்த சன்மார்க்கத்தையும் பெருவாரியான பொதுமக்களிடத்தில் கொண்டுசேர்த்திருப்பதில் சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
ஒவ்வொரு வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்விலும் சுத்த சன்மார்க்க அன்பர்களின் கொள்கை விளக்கப் பேரணி மக்களிடத்தில் வள்ளாலார் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்குவகித்தது. விழாவினில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும, அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறந்த வகையில் செயல்பட்டுவந்த சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் செய்வித்தது போற்றுதலுக்குரியது.
வள்ளலார் முப்பெரும் விழா மூலம் கடந்த ஓராண்டாக தமிழக அரசும், சுத்த சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களிடம் ஏற்படுத்தியிருக்கிற விழிப்புணர்வு வரும் காலங்களிலும் சுத்த சன்மார்க்க சங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஓராண்டாகச் (52 வாரங்கள், 52 நகரங்கள்) சிறப்பாக நடைபெற்று வருகிற வள்ளலார் முப்பெரும் விழாவின் நிறைவு விழா சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமணக்கூடத்தில் அக்டோபர் 5ம் நாள் மாலை 7 மணியளவில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த நிறைவு விழாவில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவினைச் சிறப்புறச் செய்வோம்.இதுகாறும் வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புற நடைபெறக் காரணமாயிருக்கிற தமிழக முதல்வர் அவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் தனிப்பெருங்கருணை குடும்ப இதழின் நெஞ்சார்ந்த நன்றிகள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ கொல்லா நெறி உலகெங்கும் ஓங்கி சுத்த சன்மார்க்க அருள் நெறி எங்கெங்கும் விளங்க விளங்கட்டும்.


