திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை Oct – 2025

வணக்கம், திருஅருட்பா பதிகங்களையும், அதன் சிறப்புகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் இம்முயற்சியில், இந்த மாதம் நாம் காண இருக்கும் திருவருட்பாப் பதிகம், இரண்டாம் திருமுறையின் நான்காம் பதிகமாகிய ‘நமச்சிவாய ஸங்கீர்த்தன லகிரி’.

பதிக அமைப்பு:

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால், வள்ளல் பெருமானால் அருளிச் செய்யப்பட்ட 10 பாடல்கள் கொண்ட பாமாலை இது. இப்பதிகத்தின் அனைத்து பாடல்களிலும் இறைவனுடைய பேரருள் பெருமைகளைப் பேசி, அத்தகைய சிறப்புகள் பொருந்திய இறைவனையும், அவனுடைய திருநாமமாகிய ‘நமச்சிவாய‘ என்கிற மந்திரத்தையும் ‘நான் மறக்க மாட்டேன்’ என உறுதி கூறுகிறார் வள்ளல் பெருமான்.
”நமச்சி வாயத்தை நான்மற வேனே” என மகுடம் பெற்றுப் பாடல்களின் ஈற்றடி நிறைவுறுகின்றது.

பதிப்புகள்:

திருஅருட்பாவின் முதல் பதிப்பாசிரியரான வள்ளல் பெருமானின் முதல் மாணவர், உபய கலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுதனார், இப்பதிகத்தை இரண்டாம் திருமுறையில்  நான்காவதாக வைத்துச் சிறப்பித்தார்.
திருஅருட்பா பதிப்புச்செம்மல் ஆ.பாலகிருஷ்ணர் அவர்களின் பதிப்பிலும், இந்நூல் இரண்டாம் திருமுறையில் நான்காவது பதிகமாகவே உள்ளது.
சன்மார்க்க தேசிகன் தவத்திரு ஊரன் அடிகளார் காலமுறைப் பதிப்பில், இவ்வரிய பதிகம் இரண்டாம் திருமுறையுள் 23 வதாக இடம் பெற்றுள்ளது.

ஏட்டுச் சுவடிகள்:

இம்மாலைக்கு வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திரு ஏடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, ஏடுகளின் எண்கள் 93, 94 என ஆ.பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்பதிகத்தின் தொடக்கத்தில் முறையே இறைவனைச் சிந்தித்து, “உ- நமச்சிவாயம். ஒற்றியூர்” என்றும்,  உ-சிவநம” எனப் பெருமான் குறிப்பித்துள்ளார்கள் எனவும் ஆ. பாலகிருஷ்ணர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பதிகப் பொருண்மை:

‘நமச்சிவாய ஸங்கீர்த்தன லகிரி’ என்னும் இந்தப் பதிகம், வள்ளற்பெருமான் அவர்களின் இளமைக் காலத்தில் இயற்றப்பட்டது. முதல் ஐந்து பாடல்களில், இறைவன் கொண்ட பெரும் புகழ்களை நினைவுபடுத்திய வள்ளலார், அத்தகைய பெருமைகளை உடைய இறைவனையும், அவனது திருநாமமாகிய நமச்சிவாய என்னும் மந்திரத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று குறிப்பிடுகிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தனக்கு எந்த நிலை ஏற்பட்டாலும், இந்த உலகமே தலைகீழாக மாறினாலும், எத்தகைய துயரங்கள் வந்தாலும், அல்லது என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்க மாட்டேன் என்று கூறுகிறார். மேலும், அவற்றின் காரணமாக நமச்சிவாய என்னும் இறைவனின் திருநாமத்தை மறந்து விடவும் மாட்டேன் என்று உறுதியாகக் கூறுகிறார்.

இந்த பாடல்களில், இறைவன் மீது தான் கொண்ட அன்பின் காரணமாக அவரது திருநாமத்தின் மீதும் தான் கொண்டுள்ள உறுதியை வள்ளலார் வெளிப்படுத்துகிறார்.

“பெற்ற தாய் தனை மக மறந்தாலும்” என்று தொடங்கும் அருட்பாவின் புகழ்பெற்ற பாடல் இப்பதிகத்தின் 7வது பாடலாக அமைந்துள்ளது.

சில பாடல்களும் விளக்கமும்:

இந்த உலகில் மறக்கவே முடியாத சில விஷயங்கள் கூட மறக்கப்படலாம், ஆனால் தான் “நமச்சிவாய” என்னும் இறைவனின் திருநாமத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று மிக உறுதியாகக் கூறுகிறார்.

‘ஒரு பிள்ளை தன்னைப் பெற்ற தாயை மறந்தாலும், ஒரு தாய் தான் ஈன்றெடுத்த பிள்ளையை மறந்தாலும், உடலுக்குள் இருக்கும் உயிர் அந்த உடலை மறந்தாலும், உடலுக்கு ஆதாரமான உயிர் அந்த உடலை மறந்துவிட்டாலும், பல கலைகளைக் கற்ற மனம் அந்தக் கலைகளை மறந்தாலும், கண்கள் இமைப்பதை மறந்துவிட்டாலும் கூட ‘நமச்சிவாய’ என்ற திருநாமத்தை நான் மறக்கவே மாட்டேன்.

  • மேற்கண்ட அனைத்து விஷயங்களும் இயல்பாக நடக்க முடியாதவை, அவை மறக்கப்படவே முடியாதவை. ஆனால், ஒருவேளை அவை மறக்கப்பட்டாலும், சிறந்த தவத்தைச் செய்பவர்களின் உள்ளத்தில் நிலைத்து ஓங்கும் ‘நமச்சிவாய என்ற திருநாமத்தை நான் மறக்கவே மாட்டேன்’ என்று வள்ளலார் உறுதியாகச் சொல்கிறார். அப்பாடல் வருமாறு:
பெற்ற தாய்தனை மக மறந்தாலும் 
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
(02:04:07)

(Even if a son forgets his own mother, Even if a mother forgets the child she bore, Even if the soul within the body forgets that body, Even if the body forgets the soul that sustains it, Even if a mind that has learned many arts forgets those arts, Even if the eyes forget to blink— All the things mentioned above are impossible to happen naturally and cannot be forgotten. But Vallalar, with great conviction, says, “Even if all those things are forgotten, I will never forget the holy name of Namaccivaya, which is enshrined in the hearts of great ascetics.”)

இறைவனின் பல்வேறு நிலைகளையும் பெருமைகளையும் கூறி, அத்தகைய சிறப்புமிக்க ‘நமச்சிவாய’ என்னும் திருநாமத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று வள்ளலார் உறுதியாகச் சொல்கிறார்.

“நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா என எட்டு வடிவங்களாக (அட்ட மூர்த்தங்களாக) விளங்கும் பரம்பொருள். தேவர்களும், முனிவர்களும் கூட முழுமையாக அறிய முடியாத ஆற்றல் கொண்டவன். ஆசைகளைத் துறந்த ஞானியர்களுக்கு, உள்ளங்கையில் கிடைத்த கனி போல, எளிமையாக அருள்பவன், வேதங்களின்  மூலக்காரணமானவன். ஞானத்தால் உண்டாகும் அற்புதமான பயன் போன்றவன். எட்டுவதற்கு அரியதும், எல்லையற்றதும் ஆன பேரானந்தத்தின் முழு நிறைவாக இருப்பவன். எங்கும் பரவி, ஒளிர்ந்து நிற்கும் ஜோதி வடிவானவன், உயிர்களின் பொருட்டாய் திருநடனத் திருச் செய்கையை என்றும் இடைவிடாது  செய்யும் பரம்பொருள்” இத்தனை சிறப்புமிக்க இறைவனின் திருநாமமான நமச்சிவாயத்தை, நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று தனது இறை அன்பை வள்ளலார் இப்பாடலில் உறுதிப்படக் கூறுகிறார். அப்பாடல் வருமாறு:

அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை 
அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை
வேத மூலத்தை வித்தக விளைவை
எட்ட அரும் பரமானந்த நிறைவை
எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடன நாயகத்தை
நமச்சிவாயத்தை நான் மறவேனே. (02:04:02)

(The Supreme Being who manifests in eight forms (Ashtamurti): earth, water, air, fire, sky, the sun, the moon, and the soul, One whose power cannot be fully understood even by the celestial beings and sages, The one who bestows grace upon ascetics who have renounced desires, appearing to them as easily attainable as a fruit in the palm of one’s hand, The ultimate source of the Vedas, The wonderful result of enlightenment and wisdom, The embodiment of a supreme and boundless bliss that is difficult to attain, A divine light that spreads and shines everywhere, The Supreme Being who ceaselessly performs the sacred cosmic dance for the benefit of all living beings. Vallalar declares with absolute certainty that he will never forget the name of this exceptionally glorious Lord.)

இந்த அருமையான பதிகத்தை ஓதி, இறைவனை மறவாத ஒழுக்கத்தைப் பின்பற்றி, நாம் பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம்.

  • துணை நூல் பட்டியல்: திருஅருட்பா முதல் பதிப்பு (1867) – தொழுவூர் வேலாயுதனார்.
  • திருஅருட்பா செம்பதிப்பு – 8- ஆம் புத்தகம் – ஆ. பாலகிருஷ்ணன்
  • திருஅருட்பா காலமுறைப் பதிப்பு – ஊரனடிகள்
  • Thiruvarutpa English Translation – Loga. Anandha Bharathi
    வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
ஆனந்த பாரதி

-தயவுடன் ஆனந்த பாரதி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top