சாமானியனின் கேள்வியும், சன்மார்க்க மாணவரின் பதிலும் Oct – 2025

-பெண்ணாடம் தயவு மு. முத்துஜோதி

சாமானியனின் கேள்வி: ஐயா வந்தனம், இது சென்ற மாதக் கேள்வியுடன் தொடர்புடையது. அதே சமயம் சற்று சிக்கலானதும், நீளமானதும் மற்றும் ஆழமானதும் கூட. பல கோணங்களில் நாம் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. வீட்டுச் செல்லப்பிராணிகள் என்பது எப்படியோ மனிதர்களுடன் வாழப் பழகிவிட்டது. அதன் சுதந்திரத்தில் நம் சுயநலத்திற்காகக் குறுக்கிடுவது என்பது பாவம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே சமயம் இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. இந்த நாய்கள் யாருக்கும் சொந்தமானது இல்லை என்பதால் அவை உணவுக்குப் பெரும் போராட்டத்தைச் சந்திக்கின்றன. அவை பல நேரங்களில் குழந்தைகள், பெரியோர்கள் என்று பலரையும் தாக்கும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. பல நாய்களுக்கு ரேபிஸ் போன்ற கிருமிகளால் பரவும் வெறிநோய் தாக்குதலுக்கு உள்ளாகி எல்லோரையும் கடித்து நோயைப் பரப்பி மனிதர்கள் இறக்கவும் செய்கிறார்கள். முன்பு எல்லாம் நகராட்சியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அவற்றைப் பிடித்துச் சென்று கொன்றுவிடுவார்கள். அப்போது நம் மனம் பதறவும் செய்கிறது.

இப்பொழுது அரசாங்கம் நோயுற்ற நாய்களை கருணைக்கொலை செய்யலாம் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது. மனிதர்கள் நாய்களை வீட்டில் வளர்ப்பதால் அதன் சுதந்திரம் பறிக்கப்பட்டாலும் அதற்குக் கிடைக்கவேண்டிய உணவு, பாதுகாப்பு, நோயிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு அந்த மனிதரிடமே வந்துவிடுகிறது. அதனால் உயிர் காப்பாற்றப்படுகிறது. தெரு நாய்கள் பல குட்டிகளை ஈன்றுகிறது. அவை மனித சமூகத்துடன் வாழ்வதால் அதனைக் கட்டுப்படுத்தும் உணவுச்சங்கிலி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.  இது ஒரு சமூக சிக்கலையும் உண்டாக்குகிறது . இது நாய்க்கு மட்டும் அல்ல மனிதனை அண்டிப்பிழைக்கும் வீட்டுப்பிராணிகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

ஏனெனில் மனிதனை நம்பி வந்ததால் அவைகளைக் கட்டுப்படுத்தும் (உண்டுவாழும்) உணவுச் சங்கிலித்தொடர் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆக அந்த இனத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அதனால் பல சிக்கலை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் நாம் தெருநாய்களைக்  காண முடிவதில்லை. அங்கு எல்லாம் மனிதர்களைப் போன்று நாய்களுக்கும் பிறப்புச் சான்றிதழ், காப்பீடு, சிலர் தனக்குப் பின் தன் சொத்தையும் தன் செல்லப் பிராணிகளுக்கு எழுதி வைத்துள்ளனர்.  இது போன்று மனிதனை நம்பி வந்த ஜீவர்களிடம் ஜீவகாருண்யத்தை நாம் எவ்வாறு கடைப்பிடிப்பது? தங்களின் மேலான கருத்து எங்களுக்குத் தெளிவைக் கொடுக்கும் என நம்புகிறோம்.
தயவுடன் ஒரு சாமானியன்

தயவு முத்துஜோதி ஐயா பதில்: அன்புள்ள ஐயா, வணக்கம்.

சென்ற வார வினாவின் நீட்சியாக, நாய்கள் வளர்ப்பு தொடர்பான வினாவை வினவியுள்ளீர்கள். மகிழ்ச்சி. சென்ற முறை மொழிந்த அடிப்படைக்  கருத்தான “எந்த உயிரின் வாழ்வையும்  கட்டுப்படுத்தும் உரிமை எந்த  மனிதர்க்கும் இல்லை” என்பதை மறத்தல் கூடாது.

மாட்டை வைத்துத்தான் அன்று தமிழனின் வேளாண்மை செழித்தது. இதுவும் ஒருவகை அடிமைப்படுத்துதல் தான், மறுக்க முடியாது. மாடுகளின் சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்பட்டது தான். ஆனாலும் ஒன்றைச் சிந்திக்க  வேண்டும். பெருமான் எழுதிய ‘ஜீவகாருண்ய ஒழுக்கம் – ஒன்றாம் பகுதியில்’, மனித தேகம் மற்ற உயிரினங்களை விட உயர்வானது என்பதை நிறுவ ஐந்து காரணங்களைச் சொல்லுவார். அதில் ஐந்தாவது காரணம், “இந்த மனித தேகம் மாத்திரமே முதல் சிருட்டி தொடங்கிக் கடவுள் அருளால் உருவாக்கப்பட்ட உயர்ந்த அறிவுடைய தேகம்” என்பது தான் அது. ஆக, இந்த அரிய மனித இனத்தை எவ்வகையிலும் காப்பாற்ற வேண்டும் என்பது கடவுள் நோக்கமாக இருப்பதால், உண்ணும் உணவை அறம் தவறாது விளைவிக்கவேண்டி இருந்ததால், மாடுகளை ஜீவகாருண்யத்தோடு பயன்படுத்தினார்கள்; அவற்றைத் தெய்வங்களாகவே பாவித்தார்கள்; அவைகளுக்கு நன்றி சொல்ல ‘மாட்டுப் பொங்கல்’ போன்ற விழாக்களை எடுத்துப் பெருமைப்படுத்தினார்கள். தமிழில் மாடு என்றாலே செல்வம் தான். பிற்காலத்தில், வேளாண்மையில், உயிர் இரக்கத்தோடு மாடுகள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் உண்மை தான். நல்வாய்ப்பாக, உழவு இயந்திரம் (டிராக்டர்) போன்ற பல இயந்திரங்கள் வந்ததால், காளை மாடுகள் வேளாண்மையில் பட்ட துன்பங்கள் தொலைந்து போயின. ஆனாலும் பாலுக்காக மனிதன் பசுக்களைத் துன்புறுத்துவது இன்றும் தொடர்கிறது. இது என்று ஒழியும்?

இவ்வாறு மாடுகளைத் தமிழன் பயன்படுத்திய நோக்கம், உயர் தேகங்களான மனிதர்களைக் காப்பாற்ற உணவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், நாய்கள் இந்த நோக்கத்திற்குத் தொடர்பில்லாதவை. எனவே, நாய்கள் வளர்ப்பு என்பது ஒரு பொழுதுபோக்கிற்கானது தான். பொழுதுபோக்கிற்காக, அந்த உயிர்களின் விடுதலையை முடக்க எவருக்கும் உரிமை இல்லை. நீங்கள் எவ்வளவு சீராட்டி வளர்த்தாலும், அதன் விடுதலை உணர்வை நீங்கள் பறிக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியாது. 

அடுத்து தெருநாய்களுக்கு வருவோம். இன்று தெரு நாய்கள் பெருகி, உணவுக்கு அலைந்து, உணவு கிடைக்காமல் வெறிபிடித்து, மனிதர்களைக் கடிக்க ஆரம்பித்துவிட்டன. மனிதர்கள் மாள வேண்டியும் வருகிறது. பெருகிவிட்ட நாய்களின் எண்ணிக்கைக்கு நம் பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலை நாடுகளில் தெருநாய்களைக் காணவே முடியாமைக்கு அவர்கள் பழக்கவழக்கங்கள் தான்  காரணம்.  அங்கே, நாய் வேண்டுபவர்கள் வீட்டில் வளர்க்கிறார்கள், தெருவில் விடுவது இல்லை. இங்கு, இரவில் பசுவின் பாலை கறந்துவிட்டு, பகல் முழுவதும் எல்லா மாடுகளையும்  சாலையில் விட்டுவிடுகிறார்கள். இதனால் போக்குவரத்து விபத்துகள் பெருகி வருகின்றன. இதுதான் நம் பண்பாடா?.

விலங்குகள் காட்டில் வாழ வேண்டியவை. மனிதர்களோடு வாழ்வதாய் இருந்தால், மனித உயிர்களுக்கு ஊறு செய்தல் கூடாது. செய்யும் பட்சத்தில், அந்த  உயிர்களைக் கொல்லாது, அவற்றைக் காட்டுப் பகுதிகளுக்கு அப்புறப்படுத்த வேண்டும். அல்லது அவற்றின் இனப்பெருக்கத்தைக்  கட்டுப்படுத்த வேண்டும். கொல்லுதல் கூடாது. மலடாக்கினாலும், அவைகளின் இன்பப் புணர்ச்சிக்குத் தடை வராது.  மனிதர் உயிருக்கு இன்னல் செய்வோரை நம் சட்டங்கள் மூலம் உயிரையே பறிக்கிறோம்.  இதை ஜீவகாருண்யத்திற்கு விரோதம் என்போமா? உயிருக்கு இன்னல் செய்தானைக் கொல்லுவது நியாயம் என்கிறது மனுமுறை கண்ட வாசகம்!

ஆனால், மனிதர்களுக்கு இன்னல் செய்யும் தெரு நாய்களைக் கொல்லாமல்,  மலடாக்குகிறார்கள். இதுவும் அரிதான மனித தேகங்களைக் காப்பாற்றும் ஒரு முயற்சியில் தான். உயிர்க்கொலையைத் தவிர்த்தல் முயற்சி தான். தெரு நாய்களை  வனப்பகுதிக்கும்  கொண்டுபோய்  விடலாம். ஆனால், அவற்றுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதால், அவை மீண்டும் நம் வாழ்விடங்களுக்கே திரும்பி வந்துவிடும்.  நாய்த் தொல்லைகள் தொடரும்.

தெரு நாய்களை மலடாக்கினாலும், அவை வாழும் வரை மற்ற மனிதர்களுக்கு  நோயையும் மரணத்தையும் கொடுத்துக்கொண்டேதான் இருக்கும். எனவே, அது வரை அவைகளை ஆங்காங்கே நாய்கள் காப்பகம் அமைத்து அடைத்து உணவு முதலியன கொடுத்துப் பார்க்க வேண்டும். இதற்குக் கணிசமாக நம் வரிப்பணம் செலவாகும் தான், காருண்யத்தைக் காக்க வேறு வழி இல்லை. திரண்ட கருத்து யாதெனில், மனித தேகங்கள் காப்பாற்றப்பட, உணவு உற்பத்தி தேவை, அதற்கு மாடுகள்  இன்றியமையாததாய் அன்று இருந்தன. ஆனால் உணவு உற்பத்திக்கு மாடுகள் இன்று தேவை இல்லை. ஆனால், நாய்கள் என்றுமே மனித தேகங்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது அல்ல, பொழுதுபோக்கிற்கானது மட்டுமே. பொழுதுபோக்கிற்காக அவைகளின் சுதந்திரத்தை முடக்குதல், உயிர்க் கருணைக்கு முரணானது என்பதை உணரவேண்டும்.

நன்றி. வந்தனம்.

தயவுடன் எளியேன் முத்துஜோதி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top