அன்புக்குரியவர்களிடம் தீவிரமாக வெறுப்பை வெளிப்படுத்தும் செயலைச் சீர்படுத்தும் நிவாரணிகள் குறித்து மீண்டும் படிக்கிறேன். ஒரு பொட்டலம் ஸெபியாவை மடித்துக் காத்துநின்ற காசிராமிடம் கொடுக்கிறேன். “இன்றிரவு ஆஷா இதைச் சாப்பிடட்டும். நாளை மாலை அவளை என்னிடம் அழைத்துவா, தேநீர் தராதே” என்று கூறி அனுப்பி வைக்கிறேன். மறுநாள் மாலை தன் மனைவியுடன் வந்தான் காசிராம். மனைவியைப் பக்கத்தறையில் அமரச் சொல்லி விட்டு அவனை மட்டும் அழைத்தேன். காசிராமினால் ஒன்றுமே பேச இயலவில்லை.
‘எப்படி இருக்கிறாள் உன் மனைவி?’ தணிந்த குரலில் வினவினேன். ‘ஆச்சரியம் சார்!’ எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. நேற்றிரவு மருந்தைச் சாப்பிட்ட பிறகு முணுமுணுத்தவாறே உறங்கிவிட்டாள். ஒருமணி நேரத்திற்குப் பிறகு அவளுடைய உடலைத் தொட்டுப்பார்த்தேன். ஒரேயடியாகச் சூடாகியிருந்தது. காலையில் எழுந்திருந்து பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டாள். ‘நேரமாகிறதே, இன்னும் பால்காரன் வரவில்லையா?’ என்று கேட்டாள்.
பாலைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். அதைக் காய்ச்சி சர்க்கரையிட்டுக் குழந்தைக்குப் புகட்டினாள். அடுத்து, தேநீர் தயாரித்து எனக்குக் கொடுத்தாள். ‘நீயும் சாப்பிடு’ என்று கூறினேன். ‘கூடாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறாரல்லவா?’ என்பது அவள் பதில். இன்று முழுதும் நேராகவே இருந்தாள். ‘இந்த நிலை நீடிக்குமா ஐயா?’ என்று வினவினான். மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கினாலும், அதை மறைத்துக் கொண்டு ‘உன் மனைவியை அழைத்து வா’ என்று அவனிடம் கூறினேன்.
நாற்காலியில் உட்கார்ந்திருந்த மங்கையை ஏறிட்டு நோக்கினேன். குறிப்பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு அவளைக் கேட்டேன். ‘ஆஷா இல்லையா உன் பெயர்?’.
‘ஆஷா காசிராம் யாதவ்’. அவள் வெட்டிப் பேசினாள். களுக்கென்று சிரித்தாள். அது இயற்கையாக இல்லை. அப்போது அவளுடைய நாவைக் கவனித்தேன். மஞ்சள் படிந்த வெள்ளை நிறம். ‘ஆஷா, இதோ பார், உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். உன்னைப் பார்த்தால் அவள் நினைவு வருகிறது. நீ காலையிலிருந்து என்னவெல்லாம் செய்தாய் என்று எனக்குச் சொல்லுப் பார்ப்போம்’. அவள் கூரையைப் பார்த்தாள். சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை நோக்கினாள். நம் வீட்டில் ‘ஏன் விசிறி இல்லை?’ கணவனைக் கேட்டாள். ‘அடுத்த வாரம் வாங்கி வருகிறேன். ஆஷா! இப்போது டாக்டரின் கேள்விக்குப் பதில் சொல்லேன்.’ காசிராம் அவளைக் கடிந்து கொண்டான்.
அவள் என்னைப் பார்த்துப் பேசினாள். ‘என் அம்மாவைப் போலத்தான் நானும் காலையிலேயே குளித்துவிட்டுப் பூஜை செய்ய நினைக்கிறேன். ஆனால் வீட்டில் துளசி இல்லையே!’
‘காசிராம், நமது யூனிட் மந்திரிலிருந்து ஒரு துளசிச் செடியை எடுத்துப்போய்ப் பூச்சட்டியில் வை. ஆஷா தினமும் பூஜை செய்யட்டும்.’ அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். ‘ஆமாம், நீங்களும் என் அப்பாவைப் போலத்தான் பேசுகிறீர்கள். எங்கள் வீட்டில் துளசி பூஜை செய்த பிறகுதான் எந்த வேலையும் துவங்குவோம். டாக்டர், இவருடைய வீட்டில் துளசி பூஜையே கிடையாது.’
நான் ஆஷாவின் தலையைத் தடவிக் கொடுக்கிறேன். ‘கவலைப்படாதே ஆஷா, எல்லா விவரமும் காசிராமிடம் சொல்லியிருக்கிறேன். மின்விசிறி, துளசிச் செடி எல்லாம் கொண்டு வருவார். குழந்தை எப்படி இருக்கிறான் என்று எனக்குத் தெரிவிக்கவே இல்லையே?’
ஆஷாவின் கண்கள் கலங்கின. ‘அவனை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது டாக்டர். குழந்தை அடிக்கடி அழுகிறான். வயிற்றுப்போக்கு குறையவே இல்லை. ஆனால் வயிறு உப்புசமாகவே உள்ளது. இருமல், சளி, கபம். எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து திருப்பி அனுப்பி விட்டார்கள். அதற்கும் நான்தான் காரணம்.’ அவள் பெரிதாக அழத் துவங்கினாள். ஆஷாவைச் சமாதானப்படுத்தி, இரு வெற்று உருண்டைகளைக் கொடுத்துத் திருப்பி அனுப்புகிறேன். வெராட்ரம்ஆல்பம், பெல்லடோனா, ஹயாஸ்மஸ், ஜெல்ஸிமியம், பூஃபோ, எல்லாவற்றையும் பற்றி ஆழ்ந்து படிக்கிறேன். சமயச் சடங்குகளை அனுஷ்டிக்கும் தன்மை, ரெலிஜியஸ் மானியா, அவளிடம் கடுமையாக இருக்கிறது உண்மைதான். ஆனால், மற்ற குணம் குறிகள் ஒத்துவரவில்லையே என்று கவலை கொள்கிறேன். ‘ஒரு மருந்து குணமளிக்கத் துவங்கினால் தொடர்ந்து மருந்து கொடுப்பதை நிறுத்தி விடு’ என்கிறார் டாக்டர் கெண்ட். அதையும் நோயாளி அறியாமல் இருப்பதற்காகவே பல உருவங்களிலும், நிறங்களிலும், சர்க்கரை உருண்டைகள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் சாதாரண மட்டத்திலுள்ள மருத்துவனுக்கு இது நிறைவைத் தருவதில்லை. அவன் உடனடியாக நோயாளியைப் பூரணமாகக் குணப்படுத்த விரும்புகிறான்.

