பொதுவாக நோக்குமிடத்து திரிதோஷங்கள் ஊட்டப் பொருள்களாகவும், மலங்கள் கழிவுப் பொருள்களாகவும் விளங்குகின்றன. இம்மூன்றின் மிகுதி குறைகளால் ஏற்படுவதே நோய் எனப்படும்.
ஒரு மருந்து, ஆரோக்கியமான உடல் நிலையிலும், நோயுற்றவனின் தன்மையிலும் எப்படிப் பணி புரிகிறது என்று கண்டுபிடித்து வரைந்த முதல் மருத்துவர், மேதை ஹானிமான். இதைச் சோதனை முறை மருத்துவம், (Experimental Pharmocology)) என்று அழைப்பார்கள். உயிரற்ற பொருள்களான மணல், மரம், கரி ஆகியவற்றின் மருத்துவக் குணங் களைக் கூட அவர் ஆராய்ந்தார். சாதாரணமாகக் கரையாது என்று கருதப்படும் எந்தப் பொருட்களையும். உரைத்து, பொடித்து, ஆல்கஹாலில் கலந்து மருந்தாக்கிவிட்டார்.
நோயாளி, மருந்தை உண்ட பிறகு அவனுடைய உடலில் ஏற்படும் முதல், இரண்டாவது மாற்றங்களைக் குறித்து அவர் ஆராய்ந்தார். முதலாவது துயரம் விளைவிப்பது. செயற்கை நோயையே அது உண்டாக்குகிறது. இரண்டாவது நோயை மட்டுப்படுத்திச் சமநிலைக்குக் கொண்டு வரும் செய்கை,
தீவிர நோய்கள், நெடுங்காலப் பிணிகள் என்று அவர் பாகுபாடு செய்தார். தீவிரமான வியாதிகள் தொடக்கமும், முடிவும் உடையவை. நெடுங்காலப் பிணிகள் உடற்கூற்றுடன் தொடர்புடையவை. தற்காலிகமாக அவை மறைந்திருக்கலாம். ஆனால் உடலின் உயிராற்றல் குறையும்போது மீண்டும் தலைதூக்கும். அவற்றைப் போக்குவது எளிதன்று.
தவறான சிகிச்சை முறைகள், பக்க விளைவுகளை உண்டாக்கி, நீடித்த நோயாகி, உடலோடு ஒன்றிப் போகிற விவரத்தை அவர் உணர்ந்து கொண்டார். அதன் காரணமாகவே அவர் அலோபதி முறையினின்று மாறுபட்டார்.
மனநோய் உடையவர்களுக்கு அளிக்கப் பெறும் கொடிய மருத்துவமுறைகளை அவர் எதிர்த்தார். பல மனநோயாளிகளை எளிய முறை மூலம் அவர் குணப்படுத்தவும் செய்தார்.
ஒரு மனிதன் வாழும் சூழ்நிலை அவனுடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்ற பேருண்மையை அவர் தெளிவாகக் கண்டார். ஆகவே மக்கள் அடிப்படைச் சுகாதார நெறிகளுடன் வாழ்வது இன்றியமையாததாகும் என்று அவர் வலியுறுத்தினார். ஹானிமானின் காலத்தில் உருப்பெருக்கி ஆடிகள் புழக்கத்திற்கு வரவில்லை. அதனால் நோய்க்கிருமிகள் குறித்து அவர் ஆராய்ச்சி புரியவில்லை. ஆனால் அந்தக் கொள்கையை அவர் தமது எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்கனான் Organon of Medicine) என்ற தமது மருத்துவச் சித்தாந்த நூலை அவர் ஆறுமுறை திருத்தி வெளியிட்டார். ஒவ்வொன்றிலும் புதிய அனுபவங்கள் சேர்க்கப்பட்டன.
ஹானிமான் வாழ்ந்த காலத்தில் அவர் பல நாட்பட்ட, மனமுடைந்து போன நோயாளிகளையும் குணப்படுத்தினார். அது காரணமாகவே பல ஐரோப்பிய நிபுணர்கள் அவரை அணுகி இந்தப் புதிய முறையில் அனுபவம் பெற்றார்கள்.
மருந்து
நோய்வாய்ப்பட்டவர்கள் பிணியை நீக்கும் மருந்திற்குச் சில அடிப்படைத் தன்மைகள் அவசியம். அது எப்படி இருக்க வேண்டும்?
அ. மருந்து நோயாளியின் உடற்கூற்றுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
ஆ. நோயாளியின் ஆற்றாமையை விரைவில் தீர்ப்பதாக இருத்தல் அவசியம்.
இ. பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது.
ஈ. எளிதில் உட்கொள்ளத் தக்கதாக இருத்தல் முக்கியம்.
உ. சுலபமாகக் கிடைக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
ஊ. அனைவருக்கும் கிட்டக்கூடிய விலையில் இருத்தல் தேவை.
எ. நீண்ட நாள் பாதுகாக்கத்தக்கதாகவும் இருப்பதுடன், அதன்பொருட்டு அதிகச் செலவு ஏற்படுதலும் கூடாது.
மறைச்சொல்
நமது தமிழ்மறை இந்தக் கொள்கைகள் அனைத்தையும் ஆதரிக்கிறது என்பதும் ஒரு சிறப்பான செய்தி.
நோயுற்றவன், நோயைத் தீர்க்கும் மருத்துவன், மருந்து, பின்னும் அதை அருகிலிருந்து கொடுப்பவன் என்று இந்த மருத்துவமுறை நான்குவகைப் பாகுபாடு உடையது என்கிறார் செந்நாப்போதார். அடுத்தாற்போல் இன்னொரு விதி முறை.
உற்றான் அளவும், பிணி அளவும், காலமும் கற்றான் கருதிச்செயல். நோயாளியின் வயது, நோயின் அளவு, காலம் முதலியவற்றையும் ஆராய்ந்து ஒரு மருத்துவன் செயல்பட வேண்டும்.

