நன்னூல் கூறும் ஆசிரியர் இலக்கணம்

“எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்கிறார் அதிவீரராம பாண்டியர். இறைவனாகப் போற்றப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அந்த ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துக் கூறியுள்ளது தமிழ் இலக்கண நூலான நன்னூல். கிபி 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட நூல்தான் “நன்னூல்”. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட வழிநூலே நன்னூல் ஆகும். அந்நூலானது ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்துள்ளது. அந்நூற்பா கூறும் இலக்கணப்படி உலகில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் வாழ்ந்தால் இந்த உலகில் அணு அளவு கூட அறியாமை இருக்காது.
“குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்
அமைபவன் நூல்உரை ஆசிரியன்னே!”

நன்னூலில் உள்ள இந்நூற்பாவானது ஆசிரியர் களுக்குரிய பத்து வகை இலக்கணங்களை எடுத்தியம் புகிறது.

குலன்
ஒழுக்கமுடைய சிறந்த குடும்பத்தில் பிறந்திருத்தல் வேண்டும். இதையே உயர் குடிப்பிறப்பு என்கிறார்கள். இப்படிப்பட்ட நற்குடும்பத்தில் பிறந்தவரே நல்லாசிரிய ராக விளங்க முடியும்.

அருள்
அனைத்து உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

தெய்வம்
அருட்பெருஞ்ஜோதியே உண்மையான ஆண்டவர் என்று உணர்ந்து உலகிற்கு உணர்த்திய வள்ளல் பெருமானைப் போல உண்மையான தெய்வத்தை உலகிற்கு உணர்த்துபவராக இருக்க வேண்டும்.

கொள்கை
கொள்கைப் பிடிப்பு உடையவராக இருத்தல் வேண்டும். தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியோடு நிற்க வேண்டும்.

மேன்மை
ஆசிரியர் என்பவர் எப்போதும் பெருந்தன்மை உடையவராக இருக்க வேண்டும். சிறு சிறு இடர் களுக்கு எல்லாம் இடம் கொடுத்தால், அது எண்ணிலடங்கா இன்னல்களைக் கொண்டு வந்து சேர்க்கும். சில்லறை செய்திகளுக்கு இடம் கொடுக்காமல் கற்பித்தல் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பெருந்தன்மையையே மேன்மை என்று கூறுவர்.

கலைப்பயில் தெளிவு
பல் நூல்களில் தேர்ச்சி உடையவராகவும், தெளிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும். பல கலைகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியரால் தான் மாணவர்களின் அறிவுப் பசிக்கு தீனி போட முடியும். எனவே கையளவு கற்ற கல்வியோடு நின்று போகாமல் கடலளவு கல்வியை பருகும் தாகத்தோடு, வாழ்நாள் முழுவதும் தெளிந்த அறிவோடு ஆசிரியர் விளங்க வேண்டும்.

கட்டுரை வன்மை
மாணவர்களுக்கு இலகுவாக விளங்கும் வண்ணம் பாடப்பொருளை எடுத்துக் கூறும் சொல்வன்மை உடையவராக ஆசிரியர் இருத்தல் வேண்டும். தான் கற்றதையும் பெற்றதையும் விரித்துரைக்கும் சொல்வன்மைக்கு சொந்தக் காரராக ஆசிரியர் விளங்கும்போது தான் கற்பித்தல் பணி சிறப்புடையதாக இருக்கும்.

நிலம், மலை, துலாக்கோல், மலரை ஒத்த குணங்கள்:
நிலத்தின் இயல்பு: தோண்டுதல் முதலிய குற்றங்களைச் செய்தாலும் பொறுமையுடன் விளங்கும் நிலம் போல, தன்னுடைய மாணாக்கர்கள் இகழ்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவனே ஆசிரியன்.

மலையின் இயல்பு: மழை பெய்யாது வறண்ட காலத்திலும் நீர் வளத்தைக் கொடுக்கும் மலையைப் போல தனக்கு பொருள் வருவாய் இல்லாத காலத்திலும் தன் மாணவர்களுக்கு கல்விப் பொருளைக் கொடுக்கும் மனம் படைத்தவர் தான் ஆசிரியர்.

நிறைகோலின் இயல்பு: தராசு முள் நடுநிலையில் நின்றால்தான் பொருளின் உண்மைக் கனம் தெளிவாகும். அதுபோல நூல்களை தாம் ஆராய்ந்தாலும் கற்பித்தாலும் நடுநிலையில் நின்று நூற்பொருளில் தம் கருத்தை நுழைக்காமல் இருப்பவரே சிறந்த ஆசிரியர்.

மலரின் இயல்பு: இந்த சமூகம் மரம் என்றால் அதில் ஆசிரியர்கள் தான் மலர்கள். மலர் மென்மையானது. அது போல ஆசிரியர்களும் மென்மையானவர்களாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி முகமலர்ச்சியோடு பாடம் சொல்லித் தர வேண்டும்.

உலகியல் அறிவு:
உலக ஒழுக்கத்தை அறியும் அறிவு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். உலகமே ஒரு பெரிய புத்தகம். அதைப் படிக்காவிட்டால் வேறு எந்தப் புத்தகங்களைப் படித்தும் என்ன பயன்? ஆகையால் ஆசிரியர்களிடத்தில் உலகியல் அறிவு நிரம்பி இருக்க வேண்டும்.

உயர்குணம்:
அறிவால், அன்பால், அருளால், கருணையால் கனிவால், பண்பால், பாசத்தால் உள்ளிட்ட எவ்வகை வழியிலேனும் மாணவர்களை உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்குணம் உள்ளவரே நல்ல ஆசிரியர்.

இந்த பத்து வகை இலக்கணமும் அமையப் பெற்றவரே உண்மையான நல்ல ஆசிரியர்.
“ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் தான் தீர்மானிக்கிறது” என்பார்கள். உள்ளார்ந்த நூல் அறிவும், உலகத்துப் பொது அறிவும் கொண்ட ஆசிரியர்களே வளமான வையகத்தைக் கட்டமைக்க முடியும். ஆதலால் அறிவார்ந்த ஆசிரியர்களை உருவாக்க வேண்டியது இந்த சமூகத்தின் கடமை என்பதை யாரும் மறக்கக் கூடாது. ஆசிரியர்களின் வாக்கு சரியாக இருந்தால் தான் இந்த சமூகத்தின் போக்கு சரியாக இருக்கும். ஆகவே நன்னூல் கூறும் இலக்கணப்படி ஆசிரியர்களை உருவாக்குவோம். செப்டம்பர்-5 தேசிய ஆசிரியர் தினம். முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் இராதா கிருஷ்ணன் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறோம்.

ஆண்டுக்கொரு முறை ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதை விட ஆண்டு முழுவதும் ஆசிரியர்களைக் கொண்டாடுங்கள்!

இவ்வுலக ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

-தயவுடன் தமிழ் ஆசிரியர் ஆ.தி.பகலன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top