தமிழர் வாழ்வியல் – வைகை ஆற்றங்கரை நாகரிகம் Oct – 2025

பாகம்  – 2

சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளும் மணிமேகலையை இயற்றிய கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும் நெருங்கிய நண்பர்கள். இளங்கோவடிகள் பிறந்ததோ சேர நாடு. சாத்தனார் பிறந்ததோ மதுரையம்பதி பாண்டிய நாடு. ஆனால் சிறந்த நண்பர்களாக இருவரும் விளங்கினார்கள்.

    இளங்கோவடிகள் அரச குலத்தைச்  சார்ந்தவர். சீத்தலைச் சாத்தனாரோ வணிகர் குலத்தைச் சார்ந்தவர். இளங்கோ சமண சமயத்தைச் சார்ந்தவர். சாத்தனார் புத்த சமயத்தைச் சார்ந்தவர். எனினும் ஒத்தத் தமிழ் உணர்ச்சியால் இருவரும் நண்பர்களாகத் திகழ்ந்தார்கள். பாண்டிய மன்னர்கள் தம் குடிகளை தம் உயிர் போலப் பேணிக் காத்தார்கள் என்பது வடநாடு வரை பரவியுள்ளது.  எப்படி என்றால் ஒருமுறை வடநாட்டில் பஞ்சம் வந்தபோது அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகம் நோக்கி, அதுவும் குறிப்பாகப் பாண்டியநாடு நோக்கித் தஞ்சமடைந்தார்கள். அவர்களுக்கு அன்றைய பாண்டிய மன்னர் ஆதரித்து உதவி புரிந்தான். அதன் மூலம் பாண்டியனின் பெருந்தன்மையை அறிந்து கொள்ள முடிகிறது.  மன்னனின் மதிப்பை மேலும் பெற விரும்பிய மக்கள், சமணத்தைத் தழுவியவர்கள் எட்டு மலைகளிலே வாழத் தலைப்பட்டனர்.

அந்த எட்டு மலைகளைப் பற்றிய பழைய பாடல் ‘பெருந்தொகை’  என்ற நூலில் இவ்வாறு பாடப்பட்டுள்ளது.

“பரம்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி

அருங்குன்றம் பேராந்தை ஆனை இருகுன்றம்

என்று எட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்கு

சொற்றொற்றுமோ பிறவி தீங்கு”

மேலும் அவர்கள் இயற்றிய பாடல்கள் நாலடியார் என்ற 400 பாடல்கள் ஆகும்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி“ என்ற சொற்றொடர் மூலம் நாலடியாரின் சிறப்பு விளங்கும்.

பாண்டிய மன்னர்கள் சமயப் பொறுமை உள்ளவர்கள். மதுரை மாநகரம் எல்லா சமயங்களும் கலந்து வாழும் நகரமாக விளங்கியுள்ளது சிறப்பாகும் உண்மை சிலப்பதிகாரத்தில் மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது. சிவன், விஷ்ணு, பலராமன், முருகன், புத்தன் என்ற பல கடவுள்களுக்கும் கோயில்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அதுபோல சிறந்த அமைச்சர்களைப் பெற்ற பாண்டிய மன்னர்கள் நடுநிலைமை தவறாமல் ஆட்சி செய்துள்ளார்கள். ஒவ்வொரு துறையிலும் முறையோடு ஒழுகினால் நடு நிலைமை என்னும் அறம் தவறாமல் தானே அமையும் என்பதை அவர்களின் கோட்பாடாகக் கொண்டு இருந்தார்கள். நடு நிலைமை உடையவர்களது செல்வம் அழிவுறாது என்பதெல்லாம் பாண்டியர்களின் அடிப்படைக் கொள்கையாக இருந்துள்ளது. அதுபோல அறக்கூழ்ச் சாலைகள் அதாவது வறியவர்களுக்குப் பசியாற்றிட அறக்கூழ்ச் சாலைகள் மதுரை மாநகரத்தில் இருந்ததாக நம் சங்க நூல்கள் கூறுகின்றன. அதில் பலா, வாழை, முந்திரி போன்ற பழங்களையும், பாகல், வாழை, வழுதுணங்காய் போன்ற இலைக் கறிகளையும், இறைச்சி கலந்த சோற்றையும், கிழங்கு வகைகளையும், பால் முதலியவற்றையும் சேர்த்து வறியவர்களுக்கு வழங்கி பசியாற்றினார்கள் என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன.

அதுபோல மகளிரும், செல்வந்தர்களும் வளமோடும் நலமோடும் எவ்வித அச்சமும் இன்றி மதுரை மாநகரில் வாழ்ந்தார்கள் என்று நம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. முழவும், முரசும், கலையும், இசையும், நடனமும் நிறைந்த ஒரு கலை நகரமாகத்தான் மதுரை விளங்கி உள்ளது. பலவித தெய்வங்களுக்கான நிகழ்ச்சிகளும் நடந்ததாக நம் இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்குக் காரணம் இந்த வைகை ஆறு ஆகும்.  நாகரிகம் என்னும் சொல் ஒரு நாட்டு மக்களின் அறிவு, ஆற்றல், கல்வி, ஒழுக்கம் என்ற அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் சொல்லாக விளங்கியுள்ளது. இத்தகைய நற்பண்புகள் பெரும்பாலும் நீர்வளம் நிறைந்த மருத நிலத்தில் தான் அமையும். ஆக எல்லா நாடுகளிலும் ஆற்றங்கரைப் பகுதிகளில் தான் அரசுகள் தோன்றியுள்ளன என்று உலக வரலாறும் சொல்கிறது. பெரிய வல்லரசுகளுக்கு ஆற்றங்கரையில் அமைந்த நகரங்களே தலைநகரமாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக பண்டைய தமிழகத்தில் காவிரி நதி பாயும் காவிரி ஆற்றங்கரையில் இருந்த  காவிரிப்பூம்பட்டினம் சோழர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. அதுபோல பேரியாற்றங்கரையிலே வஞ்சிமா நகரம் சேரர்களின் தலைநகரமாக அமைந்திருந்துள்ளது. அவ்வாறே வைகை  ஆற்றங்கரையில் இருக்கும் மதுரை மாநகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக அமைந்திருந்தது

– தொடரும்

தொகுப்பு
தயவுடன் வானதி வெங்கடாசலம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top