எண்ணித் துணிக சமையல்! Oct – 2025

கல்லீரலைப் பலப்படுத்தும் கொத்தமல்லித் தழைச்சாறு பானம்

“எண்ணித் துணிக சமையல்” பகுதியில் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, உடலைக் கவனத்துடன் பொன்னே போல் போற்றி வளர்ப்பதற்கு எந்த ஒரு நல்ல விதமான உணவையும் (கீரை, காய், பழம், பருப்பு) ஒதுக்காமல் அவைகளைச் சரிவர பக்குவமாக சமைத்தோ அல்லது பச்சையாகவோ முக்கியமாகப் பசி உணர்வு வெளிப்பட்டதும் உண்ண வேண்டும். ருசியை மட்டுமே முக்கியமாக எண்ணி உணவை உட்கொள்ளாமல், அதன் முழுப் பலனை அடையும்  எண்ணத்துடன் எடுத்துக் கொண்டுள்ள உணவுப் பொருளின் தன்மை அறிந்து, அதன் எந்த பாகங்களும் வீணாகாமல் உண்ண வேண்டும்.

கொத்தமல்லி பானம்

எடுத்துக்காட்டாக, நுங்கு உண்ணும் போது நம்மில் பெரும்பாலானோர் அதன் சதைப்பகுதியை மட்டுமே உண்பது வழக்கம். அது மிகுந்த ருசி உடையதாக இருக்கும். ஆனால் ருசியை மட்டும் முக்கியமாகக் கருதாமல், ஆரோக்கிய நலனையும் கருத்தில் கொண்டு, அதன் மேல் துவர்ப்புச் சுவை உடைய தோலுடன் சேர்த்து உண்பது மிகவும் ஆரோக்கியமானது இவ்வாறு உணவையே மருந்தாக உட்கொண்டால், மருந்தாக உணவை உண்ணும் நிலையைத் தடுக்கலாம். இது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. மிகவும் எளிதாகச் செயல்படுத்திக் கொள்ள முடியும். சுலபமான சில விசயங்களை நாம் உற்றுக் கவனிப்பதில் கோட்டை விட்டு விடுகின்றோம். ஒரு எளிதான தயாரிப்பு, எத்தனை அருமையான ஆதாயத்தை நமக்கு ஈட்டித் தருகிறது என்று இன்றைய சமையல் குறிப்பில் காண்போம்.

மார்க்கெட்டில் மல்லித்தழை,புதினா, கருவேப்பிலை எங்கும் காணக் கிடைக்கிறது. வருடம் முழுவதும் கிடைக்கும். இருப்பினும், என்னைப் போன்ற குடும்பஸ்திரிகளுக்கு சிறு பிள்ளைத்தனமான பழக்கம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், மல்லித்தழை, கருவேப்பிலை, புதினா தழைகளைச் சிறுகச் சிறுக சமையலில் உபயோகித்து, இயன்றவரை விரைவில் தீர்ந்து விடாமல் கட்டிக் காப்பாற்றிக் கொள்வது. அது என்னவோ கிடைக்காத பொருள் போன்று நினைத்துக் கொள்வது.

சில நேரங்களில் காய்கறி கடைக்காரர் இவைகளை நமக்கு இலவசமாகக் கூட தருவதற்குத் தயங்குவதில்லை. இருந்தும் இந்த சிறு புத்தி. ஆனால் அந்தத் தழைகளின் பலனை  முழுவதுமாக அறிந்து கொண்டால், நாம் இப்படி புத்தி கெட்ட வேலை செய்ய மாட்டோம். மல்லித்தழை எத்தனை பெரிய வித்தை செய்யும் தெரியுமா? நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, அத்தனை உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்க, பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பணியை இந்த கல்லீரல் தான் செய்கின்றது. நமது நலனுக்கு ஆதாரமாய் விளங்கும் கல்லீரலை நோயின்றி காக்கும் அருமருந்தாக வேலை செய்கிறது. இதில் சேர்க்கப்படும் பூண்டு உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, கல்லீரலைச் சுத்தப்படுத்தும். அதில் உள்ள சல்ஃபர் கல்லீரலில் என்சைம்ங்களின் உற்பத்திக்கு உதவுகிறது. உடலில் கொழுப்பைக் குறைக்கும், சர்க்கரையைக் கட்டுப்படுத்தும், பற்கள், நரம்பு, எலும்பு, தசை இவற்றை வலுப்படுத்தும். கண் பார்வையைப் பாதுகாக்கும்.

கல்லீரலைப் பலப்படுத்தும் கொத்தமல்லித் தழைச் சாறு தயாரிக்கும் முறை பற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள்:

மல்லித்தழை – ஒரு கைப்பிடி
பூண்டு – 2 பல்
எலுமிச்சம்பழம் – 1/2
சிறிதளவு உப்பு
ஒரு கைப்பிடி மல்லித் தழையை எடுத்து, கல் உப்புப் போட்டுக் கலந்த நீரில் நன்கு கழுவி, அதனுடன் இரண்டு பல் பூண்டு, சிறிதளவு உப்பு இவற்றை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொண்டு அதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, அந்த பானத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் முதலில் 1/2 டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் அருந்திவிட்டு, பிறகு இந்த சாறு குடித்து வர வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது இப்படி மல்லித்தழைச் சாறு பருகும் வழக்கத்தைப் பின்பற்றி வர நோயில்லா வாழ்வை நாம் வாழலாம்.

மூத்தோர் சொல்லில் ஒரு வழக்கம்  உண்டு. உண்ணும் உணவு சேறும் சகதியுமாக இருக்க வேண்டும் என்று. தினந்தோறும் ஒரே வகையான சமையலைத் திரும்பத் திரும்பச் சமைத்துத் தந்து உண்ணுவது உடலையும் மனதையும் சோர்வடையச் செய்யும். ஆனால் இது போன்ற உணவு,  செய்வதற்கு எளியதாக இருப்பதோடு, உடலை இலகுவாக்கி புத்துணர்வைத் தரும்.

நம் சமையல் அறைகளில் இனி இது போன்ற சமையல் முறைகளும் இடம்பெறும் என்பதை நம் குடும்பத்தாருக்கு பிரகடனப்படுத்தி ‘எண்ணித் துணிக சமையல்!’

நன்றி!
தயவுடன் இராணி வள்ளியப்பன், பெங்களூரு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top