உணவை நீ உண்கிறாயா ? அல்லது உணவு உன்னை உண்கிறதா?
அன்று ஒரு காலம் இருந்தது. அனைத்திலும் உயிரிருந்தது. இன்று அனாவசியத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் நமது வாழ்வியல் முறைகளில் பல்வேறு செயற்கை இடர்பாடுகளை நாமே உருவாக்கி ஒவ்வாத சமூகசூழலுக்குள் அடைபட்டு கட்டுண்டு கைதியாகி தவிக்கின்றோம். நம் உடல் ஆரோக்கிய நிலையிலும் எதிர்மறையான விளைவுகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.
நம் முன்னோர்கள் இதைச் செய்தார்கள் அதைச் செய்தார்கள் என்று நாமாக சொல்லிக்கொண்ட ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளையும், காலம் காலமாக தொன்று தொட்டு வரும் பழக்கவழக்கங்களையும் இடைவிடாது பிடித்துக் கொண்டு கண்மூடித்தனமாய் பின்பற்றி வருகிறோமே தவிர உண்மையிலேயே அது ஏன் எதற்கு என்ற காரணத்தை நாம் ஒருபோதும் அறிவதில்லை, அறிய முற்படுவதும் இல்லை. காலப்போக்கில் அவை பல அவதாரங்கள் எடுத்து நமக்குத் தவறான உண்மைக்குப் புறம்பான தகவல்களை மட்டும் தந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் உணருவதில்லை.
கல்வி இன்றியமையாததாகிப் போனது என்பது உண்மைதான். ஆனால் அதன் உண்மையான பலன் எதுவாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல், கல்வியால் வரும் பேரும், புகழும், பொருளும், ஆடம்பரமான வாழ்க்கையும் இவைகள் தான் இன்று நமது ஒவ்வொருவரின் கனவாகி, அதை அடைந்தே தீர வேண்டும் என்ற கட்டாயத் தேடலில் உள்ளோம்.
வங்கிக் கடன் கணக்கில் (EMI – யில் ) வாங்கிக் குவித்த பொருட்களையும் அனுபவிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஓடிக் களைத்து எதிர்வரும் மருத்துவ செலவுகளுக்காகவும் சேர்த்து உழைக்கத் தயாராக இருக்கும் நாம் மருத்துவமனைக்கு செல்லாமல் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் சிறிதளவும் சிந்திப்பதில்லை. உடலையும் மனதையும் ஆன்மாவையும் ஒருசேர கவனித்து பலப்படுத்திக் கொண்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையே உண்டாகாது.
உணவை நீ உண்கிறாயா ? அல்லது உணவு உன்னை உண்கிறதா?
நமது உடலின் இயல்பையும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் இயல்பையும் தெரிந்து கொண்டு உண்ணுதல் வேண்டும். உடல் உழைப்புக்கேற்ற அல்லது உடற்பயிற்சி மேற்கொண்டு, பசி அறிந்து, புதிதாக சமைத்த உணவை, உமிழ்நீர் சேர்த்து, நிதானமாக உட்கொண்டால் நீ முறையான உணவு உட்கொள்வதாக அமையும். உமிழ்நீர் சேராத உணவு உடலால் நிராகரிக்கப்படும். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட உணவு உனக்கு உகந்த உணவாகாது, அது உடலில் சேரும் கழிவு, நாளடைவில் சர்க்கரைக் குவியலாக மாறி உணவு உன்னை உண்ண நேரிடும்.
உடலில் ஒவ்வொரு பாகமும் அதன் தனித்தன்மையில் இயங்குவது நாம் அறிந்தது தான். ஆனாலும் உடலின் மொழி என்பதை ஒவ்வொரு பாகமும் அறிந்து வைத்துள்ளது அதன் பலம். பாகங்கள் ஒவ்வொன்றும் தனக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டும் பேசிக்கொண்டும் மொத்த கட்டமைப்பும் ஒன்று என்ற ஓர்மை நிலையில் இயங்குகிறது. ஆக உடலில் அமைந்துள்ள ஒவ்வொரு செல்லும் தனித்துவம் வாய்ந்தது. இப்படிப்பட்ட உடலுக்கு நாம் மிகுந்த கவனத்துடன் உயிர்ச்சத்துள்ள உணவு அளித்தல் வேண்டும்.
உயிர் சத்துள்ள உணவை எப்படித் தேடுவது? எப்படித் தேர்ந்தெடுப்பது?
இங்குதான் இறைவனின் பெருந்தன்மையை நாம் உணர முடியும்.
நாம் தேடிப் பெறும் அளவில் இது கடினமான காரியமாக படைக்கப்படவில்லை. இறைவனின் அருளால் பெற்ற ஞானம் நமக்குள் பறந்து விரிந்து விசாலமாக இயங்கும்போது, இது பற்றிய அறிவை வெளியில் எங்கும் தேட அவசியமில்லை. இது ஏன் எதற்கு என்ற கேள்விகளை நமக்குள் எழுப்பி அந்த சிந்தனையில் பெறவேண்டிய பதிலை பெற்றுக் கொண்டால் போதும். உனது மூளையின் வயது அது தரும் ஆற்றல் உன்னுடைய வயதை ஒத்ததாக இருக்காது. காலம் காலமாக மனித இனத்தில் கடத்தப்பட்டு வந்த ஜீன்களின் மொத்த தகவல்களின் ஆற்றலை ஒத்ததாக இருக்கும்.
வாருங்கள்! சிறியதாக ஒரு ஒத்திகை பார்ப்போமா?
உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக்கொள்வோம்.
உலகிலேயே பெரிய விதை தேங்காய். அது விதையாகிய தகுதியிலும் காய் என்றே கருத்தில் கொள்ளப்பட்டு அதே பேரை தாங்கி நிற்கிறது. பழம் என்று நாம் மறந்தும் அதைக் குறிப்பிடுவதில்லையே, ஏன்?
தேங்காய் ஏன் தரையை விட்டு உயரச் சென்று இத்தனை உயரத்தில் உண்டாகிறது? தேங்காய் ஓடு ஏன் நாம் உபயோகிக்கும் தலைக்கவசத்தைப் போன்று அத்தனை கடினமானதாக உறுதியாக இருக்கிறது? மண்ணுக்குள் மட்க இது நீண்ட எடுத்துக்கொள்கிறது. இத்தகைய கடினமான ஓட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் அதன் பருப்பு, அரை மணி நேரத்திற்குள் கெட்டு அழுகும் பாலைக் கொண்டதாக இருக்கிறதே ஏன்? பருப்பு தரும் பாலுக்கு ஏன் இந்த கால இறுக்கம்?
தாய்ப்பாலுக்கு இணையான இந்த தேங்காய்ப் பாலை பிறந்த குழந்தைக்கும் புகட்டலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்ணுக்குள் நேரடியாக இட்டு கண்நோயைப் போக்கலாம். இது தரும் பூவிற்கு என்ன குணம்? பாலையில் வடியும் பதநீருக்கு என்ன குணம்? ஓலைக்கு என்ன குணம்? பருப்பாகும் முன் இளநிலையில் தரும் இளநீருக்கு என்ன குணம்? என்று நாம் ஒவ்வொன்றாக சிந்தித்துப் பார்த்தால் இது தரும் செய்தியே நமக்கு அரிய வகை இயற்கை ரகசியங்களை அறிவிப்பதாக விளங்கவில்லையா?
இப்படிப்பட்ட தேங்காயை சமைத்து உண்ணுதல் என்பது நமது அறிவீனம். உப்பு,புளி,மிளகாய் என்று பிற பொருட்களுடன் சேரும் போதும் அல்லது நெருப்பில் ஏற்றி சமைக்கப்படும் போதும் தன் இயல்பை இழந்து 10 சதவீத பலனைக் கூட நமக்களிக்க அருகதையற்ற பொருளாகி வீணாகி விடுகிறது. வறுவல், பொறியல் என்று காய்களுடன் சேர்க்கும் போது அடுப்பை விட்டு இறக்கி மிதமான சூட்டில் தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியில் தேங்காயை இட்டு அரைக்கும் போது ஏற்படும் சூட்டின் அளவில் கூட, தேங்காய் அதனுடைய இயல்பை இழக்கும் நிலை உண்டாகிறது. ஆகையால் எந்த ஒரு நிலையிலும் தேங்காய்க்கு மிகுந்த சூடு ஆகவே ஆகாது. அதில் பொதிந்துள்ள நல்ல கொழுப்பு சூட்டில் வெந்து கெட்ட கொழுப்பாக மாறிவிடுகிறது.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், 50 கிராம் அளவு உள்ள ஒரு தேங்காய் கீற்றை சமைக்காமல் பச்சையாக ஒருவர் உட் கொண்டால் அது தரும் பலன், மிக முக்கியமாக மனித மூளைக்கு அது தரும் ஆற்றல் அதற்கான அத்தியாவசிய அதிகபட்ச தேவையைப் பூர்த்தி செய்து விடும். மூளைக்குத் தேவையான ஒரு விதமான கொழுப்புப் பொருள் தேங்காயிலிருந்து நேரடியாகக் கிடைக்கிறது.
ஆகையால் தினமும் தேங்காய்க் கீற்றை பச்சையாக உட்கொள்ளும் பழக்கத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். தேங்காய்க்கு ஒரு ஒத்திகை பார்த்தது போல் நாம் உண்ணும் உணவில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் இப்படி ஆராய்ந்து பார்த்து, நம்முள் எழும் கேள்விகளுக்கு விடை கண்டு அதன்படி செயல்பட்டால் என்றும் நலன் உண்டாகும்.
நாக்கிற்கு ருசி தேடியே நாம் நலிவடைந்து விட்டோம். ருசி என்னும் பெயரில் இடைப்பட்ட காலத்தில் மாறிப்போன பழக்கவழக்கங்களால் ஏற்பட்ட குளறுபடிகளுக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம்.
இயற்கையில் இயற்கை நமக்குத் தரும் பாடம் முற்றிலும் வேறுபட்டது என்பதை நாம் நாமாக சிந்தித்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். சமையல் என்றாலே சமைத்துத்தான் உண்ண வேண்டும் என்பதில்லை. சிந்தித்து, இயற்கையை உணர்ந்து, நாம் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களில் உள்ள உண்மைப் பொருளை அறிந்து,
உகந்தவைகளை மட்டும் வைத்துக் கொண்டு, தேவையற்ற இடையூறுகளை துணிந்து களைந்து, நமது ஒட்டு மொத்த வாழ்வியல் முறையை மீண்டும் எளிமைப்படுத்தி வாழ முற்படுவோம். இதை நடைமுறைப்படுத்துவதும் ஒரு துணிவான காரியம்தான்.
—தயவுடன் ராணி வள்ளியப்பன்.
