விவசாயம் Oct – 2025

விவசாயம்

விவசாயத்தைப் பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறையில் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.
*ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றைச் சாகுபடி செய்வார்கள்.
*மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.
தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள் :

*வைகாசி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெங்காயத்தைப் பயிரிடலாம். சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், எள் போன்றவற்றைப் பயிரிடலாம்.

*சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி மாதங்களில் அவரையைப் பயிரிட்டு வளர்க்கலாம். ஆடி, மாசி மாதம் கத்தரி பயிரிடுவதற்கு ஏற்ற பட்டமாகும்.

*மாசி, பங்குனி மாதங்கள் வெண்டை பயிரிடுவதற்கு ஏற்ற பட்டமாகும். வைகாசி, ஆனி, மார்கழி, கார்த்திகை மாதங்கள் மிளகாய், கொத்தவரை போன்ற காய்கறி செடிகளைப் பயிரிடலாம்.

*ஆடி, கார்த்திகை, மாசி மாதம் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சுண்டலைப் பயிரிடலாம்.

*புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நெல் பயிரைப் பயிரிடலாம். ஆடி, மாசி மாதம் உளுந்து விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும்.

*மாசி, பங்குனி மாதங்கள் கம்பு விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும். சித்திரை, மாசி, கார்த்திகை மாதங்கள் சோளம் விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும்.

*ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் தென்னை நடவிற்கு ஏற்ற பருவங்களாகும். கார்த்திகை, மார்கழி மாதங்கள் வாழை நடவிற்கு ஏற்றது.

*ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்கள் பருத்தி சாகுபடிக்கு ஏற்றது. ஆடி மாதத்தில் பயிறு வகைகளான தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை போன்ற தானியங்களை விதைவிக்கலாம்.

*ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு போன்றவை ஆண்டு முழுவதும் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களாகும்.

*எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். இந்த எலுமிச்சை விதைகளுடன் சாம்பலைச் சேர்த்துப் பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் விதைகள் தாக்குப்பிடிக்கும்.

*நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும், கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் வைத்து நடவு செய்யலாம்.

நன்றி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top