-பெண்ணாடம் தயவு மு. முத்துஜோதி
சாமானியனின் கேள்வி: ஐயா வந்தனம் , நானும் என் குடும்பத்தினரும் சுத்த சன்மார்க்க வாழ்வியலில் இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ளோம். எனக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, காதல் பறவைகள் மற்றும் கண்ணாடி தொட்டியில் வளர்க்கும் வண்ண மீன்கள், இப்படி எங்கள் வீட்டில் வளர்த்து வருகின்றோம் .
நாங்கள் அவைகளை எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் கருதுகின்றோம். மகனைப் போன்று, மகளைப் போன்று தான் வளர்த்து வருகின்றோம். எங்களுடன் தான் படுத்து உறங்கும். செல்லப் பெயரை சொல்லி அழைப்பது தான் வழக்கம். அதனை யாரேனும் நாய் என்று சொன்னால் கூட எங்களுக்கு கோபம் வந்து விடுகிறது ஏனெனில் அதனை விலங்காக கருதவில்லை. நாங்கள் மாமிச உணவு உண்ணும் பழக்கத்தை விட்டுவிட்டோம். வள்ளலாரின் நெறிகளை வாசித்து அதன்படி வாழ முற்சிக்கிறோம். இந்த சூழலில் சில சந்தேகம் மற்றும் குழப்பம் நிலவுகிறது .
மனுமுறை கண்ட வாசகத்தில் வரும் பின்வரும் வரி “பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!” என்ற வரி. நாங்கள் வளர்க்கும் காதல் பறவைகள் என்பவை கூண்டில் தான் வளர்கிறது. எங்களைப் பொறுத்தவரை அது கூண்டில் இருப்பது தான் அதன் உயிருக்கு பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது.
அதே சமயம் அதன் சுதந்திரம் பாதிக்கப்பட்டாலும் அது இந்த சூழலுக்கு தகுந்தாற்போல் வாழப் பழகிவிட்டது. நாங்களும் அதனை சிறந்த முறையில் கவனித்தும் வருகிறோம். கூண்டிலிருந்து வெளியில் விட்டால் மற்ற பருந்து போன்ற பறவைகளால் அதன் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதன் அன்பிலிருந்து எங்களால் பிரிவதும் கடினமாக உள்ளது. சன்மார்க்கத்தில் பயணிப்பவர்கள் இது போன்று காதல் பறவைகளைக் கூண்டில் வளர்க்கலாமா?’
தங்களின் மேலான கருத்து எங்களுக்கு தெளிவைக் கொடுக்கும் என நம்புகிறோம்.
தயவு முத்துஜோதி ஐயா பதில்:
விடை: அன்புள்ள ஐயா, வணங்குகிறேன். வீட்டில் வளர்ப்பு விலங்குகளை வளர்க்கிற சன்மார்க்கிகளுக்கு இயல்பாக எழக்கூடிய ஐயம் தான் இது. எனவே என் பதிலையும் சன்மார்க்கிகளை மனதில் வைத்தே சொல்கிறேன்.
முதலில், எந்த உயிரின் சுதந்திரத்திலும் தலையிட நமக்கு உரிமை இல்லை என்பதை அடிப்படையாகக் கொள்ளவேண்டும். அது வளர்ப்பு விலங்குகளுக்கும் அல்லது பறவைகளுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, வளர்ப்பு நாய் அல்லது பூனையை வீட்டில் வளர்க்கும் போது, அவை சுதந்திரமாக உலாவ விட வேண்டும். சில நாய்கள் சீற்றம் மிகுந்தது என்று சங்கிலியால் பிணைத்தோ, கூண்டுக்குள்ளோ அடைத்து வைப்பார்கள். அவைகளை வெளியே சங்கிலியோடு அழைத்து வரும்போது, அழைத்து வருபவரையும் மீறி அவை அங்குமிங்கும் ஓட முயற்சிப்பதைப் பார்க்கிறோம். இது, அவை தங்கள் சுதந்திரத்திற்காக எவ்வளவு ஏங்குகின்றன என்பதைக் காட்டுகிறது.
நம் மகிழ்ச்சிக்காக அவற்றின் சுதந்திரத்தைப் பறிப்பதில் நமக்கென்ன உரிமை இருக்கிறது? இது ஜீவகாருண்யத்திற்குப் புறம்பானது அல்லவா?
நீங்கள் அதை நாய் என்று சொல்லாது குடும்ப உறுப்பினராகக் கூடக் கருதலாம். ஆனால் குடும்ப உறுப்பினரை சங்கிலியால் பிணைத்து தெருவில் அழைத்துச் செல்வீர்களா?. அது ஐந்தறிவு விலங்கு தானே, தெருவின் பொது விதி அதற்குத் தெரிய வாய்ப்பில்லையே என்றால், ஐந்தறிவு விலங்கை விலங்கென்று எண்ணி தெருவில் விட்டுவிட வேண்டியது தானே, வீட்டில் மனிதர்களோடு ஏன் வளர்க்க வேண்டும்?
நீங்கள் வீட்டில் பாலுஞ்சோறும் ஊட்டி, குளிர்சாதன அறையில் உங்கள் செல்ல நாயை வளர்க்கலாம். ஆனால் தெருவில் திரியும் ஒரு நாயின் சுதந்திரம் அதற்கு மறுக்கப்படுகிறதே, அது நியாயமா? தெருவில் திரியும் நாய்களுக்கு, இயற்கை அவற்றுக்கு பாலுணர்வு ஊட்டுகிறபோது, அவை சுதந்திரமாக பாலின்பத்தை அனுபவிக்கின்றனவே, உங்கள் வளர்ப்புப் பிராணிகளின் பாலின்பத்தை, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறீர்களே, உங்களுக்கு அந்த உரிமையை யார் கொடுத்தார்கள்?
நீங்கள் செயற்கையான உணவுகளைக் கொடுத்து, செயற்கையான சூழலில் வளர்க்கிறீர்கள். ஆகையினால் அவைகளுக்கு நோய்கள் வந்து, அதற்கான மருத்துவரிடம் ஓட வேண்டி இருக்கிறது. மருத்துவம் என்ற பெயரில் ஊசி, மருந்து என்று அவற்றை மேலும் இம்சிக்கிறீர்கள். தெருவில் ஓடும் நாய்களுக்கு எந்த நோய் வருகிறது? யார் மருத்துவம் பார்க்கிறார்கள்? இயற்கை பார்த்துக் கொள்கிறது அல்லவா?
சுதந்திரமாய் தம் இனத்தோடு இயற்கையாய் வாழும் அந்த நாய்களுக்கு நோயும் வருவது இல்லை, சிகிச்சையும் அவசியப்படுவது இல்லை. நம் மகிழ்ச்சிக்காக அவைகளின் உரிமையைப் பறித்து வீட்டில் செயற்கைச் சூழலில் அடைத்து வைத்து, பின்பு அவைகளுக்கு சொகுசு வாழ்க்கை என்ற பெயரால் நோயையும் வரவழைத்து, மருத்துவமும் பார்க்கிறோம். இது எவ்வாறான செயல்?
பறவைகளுக்கும் இதே நியாயம் பொருந்தும். காதல் பறவைகள் என்றால் அவைகளுக்குப் பறக்க இறக்கைகள் இல்லையா? அந்த இறக்கைகள் நீங்கள் அடைத்து வைத்திருக்கும் கூண்டுக்குள் பறக்க மட்டும்தான் என்று யார் சொன்னது? விரிந்த வானம் அவைகளுக்குண்டானது இல்லையா?
சிங்கப்பூர் பூங்காவில் பெரிய மரங்களை எல்லாம் உள்ளடக்கி, நூறு இருநூறு அடி உயரத்தில் மிகப் பெரிய வலை போட்டுள்ளார்கள். என் கேள்வி, அந்தப் பெரிய வலைக்கு அப்பால் விரிந்து பரந்து கிடக்கிறதே வானம், அது அந்த ஏழைப் பறவைகளுக்கு இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? கூண்டுப் பறவைகளை வெளியே விட்டால், அவைகளை பருந்து போன்றவைகள் கொன்று தின்றுவிடும் என்பது, எவ்வளவு விசித்திரமான பார்வை? கூண்டுப் பறவைகள், உலகின் பறவை எண்ணிக்கையில் ஒரு விழுக்காடு கூட இருக்காது. அப்படியாயின், மீதமுள்ள 99 விழுக்காடு பறவைகள் எப்படி இலட்சக்கணக்கான ஆண்டுகளாக உயிர் வாழ்கின்றன? இயற்கை படைத்த உயிர்களை, இயற்கை பார்த்துக் கொள்ளும். அதற்கு நாம் ஏன் பொய்யாக கவலைப்பட வேண்டும்?
மொத்தத்தில், செல்ல விலங்குகளை அல்லது பறவைகளை மனிதன் சுய மகிழ்ச்சிக்காகத் தான் வளர்க்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதில் அவைகளின் சுதந்திரம் பறி போகிறது என்பதும் உண்மை.
நாய்களுக்கும் பறவைகளுக்கும் உயிர்க்கருணை செய்ய விரும்புகிறவர்கள், அதைத் தெருவில் ஓடுகிற நாய்க்கும் பூனைக்கும் பறவைகளுக்கும் செய்யலாமே, என்னத் தடை? எனவே, செல்லப் பிராணிகளை, அவைகளின் சுதந்திரத்தைப் பறித்து நம் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது தயவு செயலாக இருக்க முடியாது.
நன்றி. வந்தனம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! படிப்படியாய் முன்னேறுவோம், வாருங்கள், அன்பரே! வள்ளற்பெருமான் கைப்பிடித்து நம்மை அழைத்துச் செல்வார்.
-தயவுடன் எளியேன் முத்துஜோதி.
