அன்பும் கருணையும் தயவும் நிறைந்த சன்மார்க்க சம்பந்திகளுக்கு வந்தனம் வந்தனம். நம் வள்ளற் பெருமான் திருக்கரத்தால் எழுதிய கடிதங்களை ‘மாதம் ஒரு கடிதம் (திருமுகம்)’ என்ற தலைப்பில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் நம் பெருமான் தம் கைப்பட தனது நண்பர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு வரைந்த திருமுகம் (கடிதம்).
உ
சிவமயம்
சிரஞ்சீவி ரத்ன முதலியாரவர்களுக்கு நடராஜானுக்கிரகத்தால் சிவக்கியானமும் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. தங்கள் மணக்கோலத்தை காணக் கொடுத்து வையாதவனாகவிருந்தாலும் கேட்டு மகிழும்படி பெற்றேன். தங்கள் சுபசரித்திர விவரங்களை அடிக்கடி தெரிவிக்க வேண்டும். தாங்கள் சிவசிந்தனையை விடாமல் சர்வ சாக்கிரதையோடு லௌகீகத்தை நடத்தி வரவேண்டும். அசலார் யாராவது இவ்விடம் வருகின்றவர்களிடத்தில் ஒன்று அல்லது இரண்டு லாங் கிளாத் பீசு வாங்கி அனுப்பினால் அதன் கிரயத்தைப் பின்பு செலுத்திவிடலாம். இதற்கு பிரயாசம் வேண்டாம். இதற்குள் வைத்த கடிதங்களில் ஒன்று மகாராஜ ராஜ ஸ்ரீ சூரி செட்டியார் சோமு செட்டியார் வசம் கொடுக்க வேண்டும். தாங்களே போய்க் கொடுக்க வேண்டும். கேட்டால் மனிதர் மூலமாக வந்ததாகச் சொல்ல வேண்டும். மற்றொன்று நாயக்கர்வாள் தாயார் இருக்கிற ராணிப்பேட்டைக்குத் தபால் மூலமாக அனுப்பவேண்டும். நான் இன்னும் சில நாள் பொறுத்து வருகிறேன். வேணும் இது ரகசியம்.
ஆடி மாதம் 16ஆம் நாள்
இங்ஙனம்
சி. ராமலிங்கம்.

ஆறுமுகப் பிள்ளை அத்தான் கடிதம் – கிருஷ்ணப்ப நாயக்கன் அக்கிராரம் ராமாஞ்சு கட்டடத் தெருவு கீழண்டை வாடை செல்லப்ப முதலியார் கடிதம் சேர்க்கவேண்டும். இஃது நல்லண்ண முதலியார் தெருவு சுப்பராய பிள்ளை வீட்டுக் கெதிர்வீடு மஹாராஜஸ்ரீ ரத்தன முதலியாரவர்களுக்கு.

