ஆன்ம ஒழுக்கம்
விதி – 5:
உணவைப் பொறுத்தவரை வள்ளலாரின் வாக்கும், வாழ்க்கையுமே நமக்கு வழிகாட்டிகள். வாக்கு என்ன சொல்கிறது?
ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்
என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
ஊரமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ
ஊழி தோறூழியும் உலவாமை நல்கும்
ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து
என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

அறுசுவை உணவு என்ற ஊரமுது உண்டால் மரணம் நிச்சயம் என்பதை மிகத் தெளிவாக இப்பாடலில் வள்ளலார் கூறிவிடுகிறார். ‘உண்ணாமை உள்ளது உயிர்நிலை’ என்று ஆதியில் திருவள்ளுவரும் இந்த உண்மையைக் கூறிவிட்டார். மைதுனத்தை விட உணவால்தான், பத்தில் ஒன்பது பாகம் உடல் நஷ்டம் அடைகிறது என்பது வள்ளலாரின் வாக்கு.
ஏன் அவ்வாறு சொல்கிறார்? விஞ்ஞான உண்மை என்ன?
‘நீவீர் உண்டதெலாம் மலமே’ (ஞானசரியை). ஊரமுது அனைத்தும் முடிவில் மலமாகவே ஆகிறது. அதில் உள்ள அமுது பாகத்தைக் குடல் உட்கிரகித்து எடுத்துக்கொண்டு சக்கையை, மலத்தை வெளியே தள்ளிவிடுகிறது. அதனால்தான் வள்ளலார் புழுக்காத வஸ்துக்களை உண்க; அழுகிப்போகாத பொருட்களை உண்க என்று கூறுகிறார்.
உணவுக்கு மாற்று என்ன?
ஈரம் – அதாவது ஜீவகாருண்யம், மற்றும் அன்பு -அதாவது கடவுள் மேல் அன்பு என்ற பக்தி.
இவ்விரண்டின் அதி தீவிர தவத்தால் அண்ணாக்கில் ஆரமுது ஊறும். அப்போது உணவு தேவைப்படாது. இதை வள்ளலார் தன் உடலில் செய்து காட்டினார். அவருடைய முதல் மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுதனார் 1885-ம் ஆண்டு சென்னை அடையாறிலுள்ள பிரம்மஞான சங்கத்தாருக்கு அளித்த அறிக்கையில் தன் குருவின் உணவுப் பழக்கத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். என் குருநாதர் இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறையே உண்பார். அதுவும் சில கவளங்களே. தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் உண்ணாதிருப்பார். அக்காலங்களில் சிறிது சர்க்கரை கலந்த வெந்நீரை மட்டுமே அருந்துவார். ஆனால் மிக விரைந்து நடப்பார். ஓய்வு கொள்வதே இல்லை. பார்ப்பதற்கு எலும்புக்கூடு எனவே தோன்றும் மெலிந்த மேனியராக இருப்பார். ஆயினும் வலிமையுடையவர்.
ஓரிரு கவள உணவில் இவ்வளவு ஆற்றல் வருமா?
வரும். ஐன்ஸ்டீனின் சார்புநிலைத் தத்துவப்படி, அவருடைய சூத்திரம் E = MC² அதாவது சக்தி = பொருளின் எடை x ஒளியின் வேகமாகிய விநாடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் x 3 லட்சம் கிலோ மீட்டர். இதன் பொருள் என்ன? அணு உலையில் 1 கிராம் யுரேனியம் அணுசக்தியாக மாற்றப்படும்போது எவ்வளவு சக்தி கிடைக்கிறது. தெரியுமா? 10 இலட்சம் டன் வெடிமருந்தை TNT வெடித்தால் எவ்வளவு ஆற்றல் வெளிப்படுமோ, அவ்வளவு ஆற்றல். இந்த அணு விஞ்ஞானத்தை யுத்தத்தில், உலக அழிவுக்குப் பயன்படுத்துகின்றனர் விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும்.
வள்ளலார் உலக நன்மைக்காகப் பயன்படுத்திக் காட்டினார் தன் உடலில். அதாவது வயிறும் அணு உலையே. யுரேனியத்துக்குப் பதில் புழுக்காத உணவு. 1 கிராம் உணவு ஒரு மனிதன் தன் ஆயுள் ‘வேலை செய்தாலும் முழுதும் ஓய்வில்லாமல் அவ்வளவுக்கும் போதுமான சக்தியைத் தரும். தற்போது எந்திரகதியில் (Mechanical reaction) மற்றும் ரசாயன மாற்றம் (Chemical reaction) நடைபெறுகிறது ஜீரணம் என்ற பெயரில், அதனால் கோடியில் ஒரு பங்கு கூட உணவு சக்தியாக மாற்றம் பெறுவதில்லை. அதனால் வயிற்றை அணுஉலையாக மாற்றி, அணுசக்தியை உற்பத்தி செய்யும் மாற்றமாகத் (Atomic reaction) தன் ஜீரண சக்தியை மாற்றி அமைத்துக் கொண்டார். யுரேனியத்துக்குப் பதிலாகக் கரிசாலை, தூதுவளை. 5 படி தண்ணீரை 2 படி தண்ணீராகச் சுண்ட வைத்தால் கிடைப்பது கனநீர். ஆபத்தில்லாதது.
கனநீர் (Heavy water) இல்லாமல் அணுஉலையில் அணுசக்தி மாற்றம் ஏற்படாது. உலகின் பசியைப் போக்குவதற்கு ஒரே வழி வள்ளலார் என்ற விஞ்ஞானி சொல்வதே. அதிக உணவை உற்பத்தி செய்து, உண்டு, அதிகக்கழிவை உற்பத்தி செய்து, வீணாக்குவதல்ல. ஜீரண சக்தியை ஆயிரம் மடங்கு, இலட்சம் மடங்கு கூட்டுவதே. நிற்க. விரிக்கின் ‘வள்ளலார் கண்ட அணு விஞ்ஞானம்’ என்ற தனி நூலாக விரியும். வள்ளலார் சொன்னதை வேதவாக்காக நம்பிக் கடைப்பிடித்தாலேயே போதும்; அமுதம் ஊறும்; மரணமிலாப் பெருவாழ்வு கிட்டும்.
-தொடரும்
தயவுடன் சேலம் இரா. குப்புசாமி

