அமெரிக்காவில் வள்ளலார் யோகசாலை Oct – 2025

வணக்கம் அருளன்பர்களே!

என் பெயர் இரமா ஆறுமுகம். நான் அமெரிக்காவில் டெலவர் மாநிலத்தில் வசிக்கிறேன். வள்ளலாரைப் பின்பற்றும் யோகா ஆசிரியராகிய நான் கடந்த நான்கு வருடங்களாக வள்ளலார் யோக சாலை என்ற பெயரில் இலவசமாக இணைய வழியில் யோகா/பிரணாயாமம்/தியான வகுப்புகளை நடத்துகிறேன். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த வகுப்பு தொடங்கப்பட்டது. இடையில் சிறிது காலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு அருட்கஞ்சி போன்ற அமைப்புகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. யோகாவைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்திற்குப் பிறகு, சில ஆசனங்களைக் கற்றுக் கொள்ளலாம். இன்று பெரும்பாலானவர்கள் யோகம் என்னும் சொல் யோக ஆசனங்களை மட்டுமே குறிப்பதாகக் கருதுகிறார்கள். ஆசனங்கள் யோகக் கலையின் ஒரு பகுதி மட்டுமே. யோகம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. யோகக் கலையின் முன்னோடியான பதஞ்சலி சித்தர் மனதில் எழும் எண்ணங்களை நெறிப்படுத்துவது தான் யோகம் என்றும் இதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்று குறிப்பிடுகிறார்.

சித்தர்கள் பதஞ்சலி மற்றும் திருமூலர் குறிப்பிடும் அட்டாங்க யோகத்தில் எட்டு நிலைகள் உள்ளன. அட்டம் என்பது எண் எட்டைக் குறிக்கும். அங்கம் என்பது உறுப்பு அல்லது பகுதியைக் குறிக்கும். அட்டாங்க யோகப் பயிற்சிகள் உடலையும், மனத்தையும் பண்படுத்தி, பயிற்சி செய்பவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்றன.

திருமந்திரப் பாடல் 552 அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்களைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறுகிறது.

இயமம் நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே

1. இயமம்: இயமம், நாம் சமுதாயத்தில் ஒழுக்கமாக வாழ, தவிர்க்க வேண்டிய குணங்களை விளக்குகிறது. கொல்லாமை, பொய் கூறாமை, பிறர் பொருள் திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஐந்தும் இயமம் என்று பதஞ்சலி சித்தரின் யோக சூத்திரத்தில் கூறப்பட, திருமூலர் தன் திருமந்திரப் பாடல் 554 ல் மேலும் ஐந்து குணங்களைச் சேர்த்துக் கூறுகிறார்.

திருமந்திரம் – 554

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துஉண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே      

விளக்கம்: கொல்லாமை, பொய் கூறாமை, பிறர் பொருள் திருடாமை, எதையும் எண்ணிப் பார்த்து ஆராய்ந்து அறியும் குணம், நற்பண்புகள் உடைமை, அடக்கமுடைமை, நடுநிலை தவறாமை, பிறர்க்குப் பகிர்ந்து உண்ணல், மனதில் குற்றம் இல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்து குணங்களை உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

2. நியமம்: ஐந்து நியமங்களாக மனத்தூய்மை, மனநிறைவால் வரும் சந்தோசம்,  தன்னறிவும் ஆன்மீக நூலறிவும், தவம் மற்றும் இறைபக்தியில் சரணடைதல் என்பன பதஞ்சலி சித்தரால் கூறப்பட்டுள்ளன.

3. ஆசனம்: யோகப் பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்வது. தியானம் செய்வதற்கு உடலைத் தயார் செய்வது.

4. பிராணாயாமம்: சுவாசப் பயிற்சிகள் மூலம் மூச்சை உள்ளிழுத்து, அடக்கி, வெளிவிடுவதைக் கட்டுப்படுத்துவது. மூச்சே உடலையும் மனதையும் இணைக்கும் பாலமாகும். மூச்சைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்வின் போக்கையே மாற்றலாம்.

5. பிரத்தியாகாரம்: புலன்களை உள்நோக்கித் திருப்புவது, புற உலக சிந்தனைகளிலிருந்து விடுபடுவது

6. தாரணை: ஒரு குறிப்பிட்ட பொருளில் மனதை ஒருநிலைப்படுத்துவது, ஒருமுகப்படுத்துவது.

7. தியானம்: தாரணை செய்த பொருளின் மீது தொடர்ந்து மனதை நிலைநிறுத்துவது, அதன் தன்மைகளை ஆராய்வது.

8. சமாதி: தியானத்தின் உச்சநிலை, மனம் ஒருமைப்பட்டு இறை நிலையை அடைவது.

இந்த எட்டு நிலைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மேலே கூறப்பட்ட யோகப் பயிற்சிகள் ஒருவரது மனதையும், உடலையும் மேம்படுத்த உதவுகின்றன

ஆசிரியர் 
இரமா ,அமெரிக்கா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top