பூ மதலையருக்கு, பூப்படையும் வயதிலுள்ள மங்கையருக்கு, பருவங்கடக்கும் மாதருக்கு, முதியோருக்கு என்று தனித்தனி நிவாரணிகள் ஹோமியோபதி முறையில் உள்ளன. நோய் தோன்றும், மிகுதியாகும், அல்லது தணியும் நேரங்கள் இந்த மருத்துவமுறையில் மிகமிக முக்கியம். மருத்துவரைக் கண்டாலே அவரது பெயரைக் கேட்டாலே குழந்தைகள் அலறும். ஏனெனில் அவர் ஊசி போடுகிறாரே! ஹானிமானின் நாட்களில் உடலை வருத்தும் கொடுமை இன்னும் மிகுதியாக இருந்தது. உதிரத்தை வெளிப்படுத்தி, சூட்டுக்கோல் இட்டு, நோயாளிகளை வதைத்தெடுத்து விடுவார்கள்.
இந்த முறை மருத்துவத்தில் எல்லா வகை நோய்க்கும் இனிப்புருண்டைகள்தாம். ‘டாக்டர் அங்கிள், எனக்கு இன்னும் ஐந்து பொட்டலம் மருந்து கொடுங்கள். என்று வேண்டும் குழந்தைகளே அதிகம் கேட்டுப்பெறுவர்.
டாக்டர் ஹானிமான் தன்னுடைய மருத்துவ சாத்திரத்திற்கு ஆதாரமாக ஆர்கனான் என்ற அடிப்படை அறநூலை எழுதினார். அதன் முதல் சுலோகம் (Aphorism) கூறுகிறது.
“ஒரு மருத்துவனின் தலையாயத் தொண்டு நோயுற்றவனைக் குணப்படுத்துவதாகும். விரைவாக, துயரமின்றி, நிரந்தரமாக’. தொடர்ந்து வள்ளுவரைப் போல் அவரும் பேசுகிறார். ஒரு நோயாளியை எவ்வகையில் குணப்படுத்த வேண்டும் என்பதை அவன் ஆராய வேண்டும்.
மருந்தின் தன்மை குறித்து அவன் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் அவன் மருந்தைச் சரியான வகையில் பிரயோகிக்க முடியும்.
கூடவே மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முறையும் மருத்துவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பணிபுரியும் சூழ்நிலை இன்னொரு முக்கியமான தகவலை இங்கு தரவேண்டும். ஹோமியோபதி மருத்துவமுறையில் இரு நோயாளிகளின் குறிகள் ஒரே மாதிரி இருந்தாலும், அவரவர் பணிபுரிகிற சூழ்நிலைக்கு ஏற்ற மருந்துகளைத் தரவேண்டும் என்றே விதிக்கப் பட்டுள்ளது. சலவைத் தொழிலாளிக்கும், கருமானுக்கும் ( இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூச்சு வேலை செய்யும் – கொல்லர் எனப்படும் தொழிலாளர் ) வெவ்வேறு மருந்துகள். ஒருவன் எப்போதும் நீரிலேயே நிற்பவன். மற்றவன் தீயிலே வேகிறவன். நோய் வரும் காரணங்கள் இருவருக்கும் வெவ்வேறு. இப்படிப் பாகுபாடு செய்ததனால்தான் இந்த மருத்துவ முறையில் குறிப்பிட்ட பெயருள்ள நோய்க்கு, குறிப்பிட்ட மருந்து என்று ஒன்றுமே கிடையாது. ‘உன் நோயின் பெயர் எனக்குத் தேவையில்லை. அறிகுறிகளை மட்டும் கூறு. அவை போதுமானவை’ என்று ஹானிமான் உறுதி கூறுகிறார்.
பக்க விளைவுகள்
இந்த விவரத்தை ஆராயும்போது மருத்து வனைக் கண்டாலே பதறும் நிலை வருகிறது. இடுப்பிலோ, முழங்கை மூட்டிலோ ஏற்படும் வலிகளுக்கு அந்தந்த இடங்களிலேயே ஊசி மருந்தைச் செலுத்துவார்கள். வலி குறைந்து விடும். ஆனால் தொடர்ந்து காதிலிருந்து சீழ் வடியும், அல்லது நாவு உலர்ந்து போகும். அவாஸென்னா என்று புகழ்பெற்ற பாரசீக மருத்துவர் கூறுகிறார். எந்த மருந்தும், நோய்ப்பட்ட பகுதியைச் சீராக்கிய போதிலும், மற்றோரிடத்தில் புதிய வியாதியைத் தோற்றுவிக்கும். அந்த மருந்தின் மீதிப்பகுதி கழிவுப் பொருளாக வெளியேறும் வரை நோயாளிக்குக் சுகவீனம் இருப்பது கண்கூடு’.
சில அடிப்படை
ஹோமியோபதி மருத்துவத்தில் குறைந்த வீரியங்களைப் பயன்படுத்தும் வரையில் பக்க விளைவுகளே நிகழா. ஏனெனில் மருந்தின் அளவு அவ்வளவு குறைவு. ஒரே மருந்து, மிகக் குறைவான அளவில், (Single remedy, minimum dose) என்பது இந்த நெறியின் அடிப்படைத் தத்துவங்கள். மருந்தை உட்கொண்டபின் சில வேளைகளில் நோய்க்குறிகள் மிகும், பிறகு தணியும், அடுத்துப் பழைய நோய்கள் திரும்பும், என்று மருத்துவர் ஹெர்ரிங் தமது அனுபவங்களை எழுதி வைத்திருக்கிறார். தற்போது உள்ள மருத்துவம் நோய்க்கு முன்பாகக் கடைசியில் எந்த வியாதி வந்ததோ, அது மீண்டும் தலைகாட்டும். அப்படி வந்தால் மருத்துவன் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஏனெனில் நோயாளி குணம் அடைகிறான்’ என்று ஹெர்ரிங் உறுதி அளிக்கிறார்.
அடுத்ததாக மருந்தின் விலை. இன்று இருபது ரூபாய் செலவில் ஒரு நோயாளியின் வயிற்றுப் போக்கு, அல்லது சொறி சிரங்கைக் குணப்படுத்த முடியும் என்றால், மக்கள் குலத்திற்கு இதைவிடச் சிறந்த தொண்டு வேறு என்ன இருக்க முடியும்? நமது நாடு ஏழ்மை மிக்கது. மக்களில் பாதிப்பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறவர்கள். அவர்களுக்கு இந்த முறை மிகவும் ஏற்றதாகும்.
வேறு எந்தக் காரணத்திற்காக இல்லாவிட்டாலும் இதைவிட மலிவான மருத்துவ முறையே உலகில் இல்லை என்ற நோக்கத்தைக் கொண்டு பார்த்தால் இதனினும் சிறந்த மருத்துவ முறையே கிடையாது. எல்லாப் பொருளாதாரப் பண்டிதர்களும் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
இறுதியாக ஓர் அடிப்படை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.
மனித உடல் தனக்கு வேண்டாதவற்றைக் கழிவாக மாற்றித் தன்னுடைய பலவீனமான சந்துகளின் வழியாக வெளித்தள்ள முயலுகிறது. இதைத்தான் நோய் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நோயை ‘ஒத்தவை’ முறையில் குணப்படுத்தலாம். இது ஹிப்பாக்ரேடஸின் கூற்று : டாக்டர் ஹானிமான் இந்த எல்லையை இன்னும் விரிவாக்கி அந்தக் கொள்கைக்கு செயல்வடிவம் அளித்தார்.
உடல் தனக்கு வேண்டாதவற்றை வெளித் தள்ளும் போது ஏற்படும் மாறுதல்களையே நோய்க்குறிகள் என்று கூறுகிறோம். இதற்குக் காரணம் உடலில் உறையும் ஜீவசக்தி பலவீனப் படுத்துவதே, ஒரு மருந்தின் மூலமாக இதே நோய்க்குறிகளை ஒத்த செயல்முறையை உடலில் ஏற்படுத்துவது சாத்தியம்.
ஐஸக் நியூட்டனின் தத்துவப்படி இரண்டு இயல் நிகழ்ச்சிகள் (றிலீமீஸீஷீனீமீஸீணீமீ) ஒரே இடத்தில் உறைவது இயலாது. இதன் காரணமாக முதலில் தோன்றிய நோய்க்குறிகள் விலகிவிடுகின்றன.
உட்செலுத்திய மருந்தின் மூலமாக விளைந்த புதிய நோய் அடையாளங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தணிந்து விடுகின்றன. ஏனெனில் அவற்றை விளை விப்பதற்காகக் கொடுக்கப் பட்ட மருந்தின் அளவு மிகவும் குறைவானதாகும். இதை மறந்து விடவே கூடாது.

