திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிகள்

உலகப் பொதுமறையாக பல மொழிகளில் மொழிபெயர்த்து, வையகம் முழுவதும் தமிழர்களால் உயர்த்திப்பிடிக்கப்படுவது வள்ளுவம் என்னும் குறள் ஆகும். பரிமேலழகர் தொடங்கி மணக்குடவர், மு.வரதராசன், கலைஞர் என இன்றளவும் பற்பல உரையாசிரியர்கள் தங்களின் உரைகளைத் தொகுத்தளித்தாலும், எண்ணிப்பார்ப்பதற்க்கும் இயலா அளவு கருத்துகளைத் தன்வயம் வைத்துள்ள நூல் குறளேயாம்.

உலகை நாம் பார்க்கும் விதமே தத்துவம் என்பார் ஆலன் உட்ஸ். மனிதனின் வாழ்வியல் முறைகளை நெறிப்படுத்துவதற்காகவே பற்பல மெய்யியல்கள் அந்ததந்த நிலத்தின்பால் வேர்விடத் தொடங்கும். இம்மெய்யியல்களின் கூட்டமைப்பு அந்நிலமக்களின் தத்துவமாக மாறும். இத் தத்துவங்களே ஒற்றைப் புள்ளியின் பால் குவிக்கப்பட்டு, நிறுவனப்படுத்தப் பட்டு சமயங்களாக உருக்கொள்ளும். பல்வேறு வாழ்வியல்கள் மற்றும் தத்துவங்களின் சாயலைக் கொண்டிருப்பதனால் திருக்குறளை அனைத்து சமயங்களும் தங்களுக்குரியவை என்று எடுத்துக் கொண்டாடுகின்றன.

பல்வேறு அறிஞர்கள் அதனை ஜெயின சமயத்தின் நூல் என்கிறார்கள். மேலும் 1932 – இல் எழுதப்பட்ட திருக்குறள் ஆராய்ச்சியும் ஜெயின சமய சித்தாந்த விளக்கமும் என்னும் நூல் அவரை முழு ஜெயின ராகவே காட்டுகிறது. மேலும் அவர் பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த குந்தகுந்தர் என்றும், அவர் கிமு 52-இல் பல வடமொழி நூட்களை அவர் அங்கு இயற்றியதாகவும் கூறுகிறார்கள். அக வாழ்வியல் பேணாது இல்லறம் விடுத்து வாழ்பவர்கள் திகம்பரர்கள். அப்படி இருக்கையில் இன்பத்துப் பாலை முன்னிறுத்தி எழுதிய வள்ளுவர் எப்படி ஜெயின வாழ்வியலைக் கூறுவார்.
மேலும் திருக்குறள் ஒரு பௌத்தநூல் என்றும் , அதன் உண்மையான பெயர் திரிகுறள் என்றும், அவை பௌத்தத்தின் திரிபீடகத்தையே குறிக்கிறது என்றும் கூறினார் அயோத்திதாசர் அவர்கள்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

எனும் குறளில் உள்ள வினைக்கோட்பாட்டின் சாயலைக் கொண்டே அவ்வாறு அதை கூற விழைகிறார்கள். ஊழ் அதிகாரத்தில் உள்ள

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

எனும் குறள் அனைத்தையும்விட நியதி, விதி என்னும் ஊழே முன்னிற்கும் என்று கூறுவதால் வினைப்பயன் அங்கு தோற்றுப்போகிறது. எனவே அது வினைக்கோட்பாட்டைப் பின்பற்றவில்லை எனத் தெரிகிறது.

மேலும் அதை மறுத்துக்கூறும் அ.சக்கரவர்த்தி நாயினார் பௌத்தர்கள் விலைக்கு புலால் வாங்கி உண்பவர்கள், ஆனால் திருக்குறள் புலால்மறுப்பை முன்னிறுத்துகிறதே எனக்கூறி இது பௌத்தநூல் இல்லை எனத்துணிவார். இவை தவிர்த்து, குறள் வேதங்கள் கூறும் வாழ்வியலை உணர்த்துகிறது என்பார் ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனர் திரு.ரா.நாகசாமி அவர்கள் வேதங்கள் (தரும சாஸ்திரங்கள்) கூறும் மது வர்க்கம் எனும் உணவு முறையில் மாடு, பன்றி, குதிரை, காண்டாமிருகம், மான், போன்றவை வேள்வியில் இட்டுப்படைத்து உண்ணும் முறை உண்டு. யக்யங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவையான அசுவமேதயாகம், வாஜ் பேயம், ராஜசூயம் போன்றவற்றில் உயிர் பலி கட்டாயமானது ஆகும். வேள்வியில் இடப்படும் பலியைப் பற்றி டாக்டர். அம்பேத்கர் அவர்களும் தன் நூலில் தெளிவாய் உரைப்பார் இவ்வாறு வேத பண்பாடு இருக்கையில், திருவள்ளுவரோ,

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று

என்று அந்த வேள்வியில் கொடுக்கப்படும் பலியைக் கண்டிக்கிறார். அவ்வாறு பலிகொடுத்து உண்ணப்படும் ஊணினால் உண்டாகும் பாவத்தை எவ்வாறு போக்குவீர் ? என்னும் முறையில், அப்படி உண்ணாமல் இருப்பதே நன்று என்கிறார். இப்படி இருக்கையில் அது தருமசாஸ்திரங்கள் கூறும் வாழ்வியலை போதிப்பதாக எப்படிக் கூறமுடியும் ? எனக் கேள்வி எழுப்புவார் பேராசிரியர். க.நெடுஞ்செழியன் அவர்கள். அப்படியானால் வைணவ சமய நூலா திருக்குறள் ?

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

இக்குறளைவைத்து அதில் வரும் தாமரைக் கண்ணான் என்பது திருமாலைக் குறிக்கிறது என்பர் சிலர். இதில்வரும் கண் என்னும் சொல் தமிழ் இலக்கண முறையில் ஏழாம் வேற்றுமை உருபு ஆகும். அதன் பொருளாய்ப் பார்த்தால் தாமரைமேல் இருக்கும் உலகு என்று பொருள். இன்பத்துறையில் தன் காதலியுடன் தோளோடு தோள் சேரும் நொடியை விடவா உன் அறிவுலகம் பெரிது என்று கேட்கும் வண்ணமாய் அமைந்த குறள் அது. எனவே அது திருமாலைக் குறித்தல் அன்று, அது வைணவ நூலும் அன்று. எனில் இது சைவ சமய நூலா? என்ற ஆய்வை உட்படுத்திப் பார்த்தால் கல்லாடம் எழுதிய கல்லாடனார் தாம் ஒரு சைவராக இருந்தும் திருக்குறள் பற்றிக் கூறுகையில்,

சமயக் கணக்கர் மதிவழி கூறா
துலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் றனக்கு வளர்கவிப் புலவர்முன்
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்

என்று கூறித் தனது சைவப் பற்றை பின் தள்ளி வைத்துவிட்டு வள்ளுவத்தை முன் நிறுத்துகிறார். மேலும் கல்லாடனார் கூறும்பொழுது திருக்குறளை 49 புலவர்கள் கொண்ட அவையில் அரங்கேற்றிய பொழுது அனைவரையும் முந்திக்கொண்டு சிவன் பாராட்டினார் என விளிக்கிறார்.

இவைகளைப் பார்க்கும் பொழுது குறள் சைவநெறிக்கு உட்பட்டது அல்ல எனத் தெளிவாய்ப் புரிகிறது. எனவே தாம் 1940இல் திருக்குறள் உட்பட்ட சங்க இலக்கியங்களைக்கட்டி வங்கக்கடலில் போடுவோம் என்று போராட்டம் நடத்தினர் சைவர்கள் இவை ஒரு புறமிருக்க ஐயா.மு. தெய்வநாயகம் அவர்கள் தனது நூல் வாயிலாகத் திருக்குறள் உணர்த்துவது கிறித்துவ வாழ்வியலே எனக் கூறத் துணிகிறார். மேலும் அதில் வரும் அவி எனும் சொல் கூட கபாலமலையில் பலியான இயேசு கிறித்துவைக் குறிக்கிறது, அதன் நீட்சியாய் தோமையாரால் கட்டப்பட்டதுதான் சென்னை கபாலீஸ்வரர் ஆலயம் என்கிறார் இவை எல்லாம் எவ்வளவு அபத்தமானது.

கிறித்துவுக்கு ஏறத்தாழ 800- ஆண்டுகளுக்கும் முன்னர் பிறந்த வள்ளுவர், அவருக்குப் பின் வந்த கிறித்துவைப் பற்றியச் செய்தியை எப்படிக் கூறியிருக்க முடியும்? எனவே அந்நூல் அச்சமயத்தையும் சாராது. முகமது நபி ஏசுவிற்கும் பின் வந்தமையால் நிச்சயமாக அது இஸ்லாமிய நூலாக இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு எந்தச் சமயத்தையும் சாராமல் குறள் இருப்பதற்குக் காரணம் அது சமயங்கள் தோன்றாத புரட்சிக்காலத்தைச் சேர்ந்தமையால். மனு, அர்த்த சாஸ்திரம் 5 முக்கியத் தருமங்களை (வர்ண, ஆசிரம, வர்ணாசிரம, குண, விசேட) முன்னிறுத்துகையில் மக்கள் வாழ்வியலில் அதனை மறுத்தது திருக்குறள் ஆகும். வர்ண அடுக்கில் கீழ் உள்ளவர்கள் கீழோர் ஆக நிந்திக்கப்பட்ட நிலையில் திருக்குறளோ…

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

என்று உழவை முன்னிறுத்தி அதுவே தலை என்கிறது. தருமசாஸ்திரங்களை முன்னிறுத்தி அரசன் நான்மறையோர்களின் கீழ் இயங்குதல் வேண்டும், அதன்படி அரசும் செல்லுதல் வேண்டும் என்னும் முறையை உருவாக்கியபோது திருக்குறளோ
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

என்று அரசனை ஒருபடி உயர்த்திக் கூறுகிறது. கீதையின் 18 – ஆவது அத்யாயத்தில் கூறப்படும் நான்கு வர்ணப்பிறப்பையும், நான்காவது வர்ணத்தார் செய்யும் வேலைக்கு பிரதிபலன் எதிர்பார்த்தல் கூடாது என்னும் கூற்றையும் அது முன்னிறுத்தும் பொழுது அதை உடைக்கும் வண்ணமாய்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

என்றுக் கூறி பயனை முன்னிறுத்துகிறது நம் திருக்குறள். பயனை அறியாது செயல் செய்யக் கூடாது என்று கண்டிக்கிறது. மேலும் மக்களுக்குள் ஏற்றதாழ்வுகள் கூடாது என்று தன்னுடைய குறளான

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

ஆக பிறப்பால் அனைவரும் ஒன்று, அதில் பிரிவு ஏதும் இல்லை, மேலும் தொழிலினால் கூட சிறப்பு ஒவ்வாது என்று துணிந்து உரைக்கிறது. எனவே திருக்குறள் முன்னிறுத்தும் மிக முக்கிய வாழ்வியல் கூற்று தருக்கசாத்திரமே தவிர கருமசாஸ்திரம் அல்ல. அதுவே தொல்காப்பியர் முன்னிறுத்தும் தந்திர உத்திகள். நூலின் கருத்திற்கு ஏற்ற வாதமும், ஒத்த காட்சிகளைக் கூறி பதிய வைத்தலும், குற்றம் களைதலும், தன் கருத்து துணிதலும் எவ்வாறு அமையவேண்டும் என்பதை திருக்குறள் பின்பற்றி யுள்ளதே அதன் தனித்துவம். அவ்வாழ்வியல் சமயம் சாராதது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
திருக்குறள் கூறும் மிக முக்கியமான வாழ்வியல் கொள்கை அறனே. எது அறம் ? என்னும் கேள்விக்கு

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

என்று மனத்தின் தூய்மையே அறம் என்ற விடையைத் தருகிறார் வள்ளுவர்.
அந்த மாசை எப்படிப் போக்க வேண்டும் ? என்னும் கேள்விக்கு

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்ற விடையைத் தருகிறார்.
எனில் வாய்மை என்பது தான் என்ன என்னும் கேள்விக்கு
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

என்னும் விடையால் தீமை தராத சொற்களே வாய்மை என்கிறார்.
அப்படியானால் அந்தத் தீமை என்பது எப்படிப் பட்டது ? என்னும் கேள்விக்குத் தமிழர்களின் மிக முக்கியமான, தொல் கபிலரால் வளர்த்தெடுக்கப்பட்ட எண்ணியக் கொள்கையின் மூலம் விளக்க மளிக்கிறார் வள்ளுவர்,அதுவே

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

என்னும் குறள் ஆகும். இப்படிப்பட்ட உயரிய மெய்யியலைக் கொண்ட வள்ளுவமே தமிழர் தத்துவம். தவத்தை முன்னிறுத்தும் அவைதிக, சிரமண சங்கங்களுக்கு இடையே

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

என்று இல்லறத்தின் முக்கியத்துவத்தை, அதையும்விட முக்கியமாய் இன்பியலின் அடிப் படையை முன்நிறுத்துவார் வள்ளுவர். நான்மறை முற்றியவர்கள், பலருக்கு கல்வியை மறுத்த பொழுது தமிழ் மரபின் திருக்குறளோ

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என கசடறக் கல்வியை கற்கவேண்டும் என்கிறது.
அதன் நீட்சியே தமிழ் மரபில் வந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே இப்பாடலில் உள்ள கல்வியின் சிறப்பு வள்ளுவம் தந்த நீட்சியே. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதன் நீட்சியே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் கூற்று தெளிவுபடுத்துமாயின் அது தமிழரின் வாழ்வியலில் எவ்வளவு பெரிய வேராய் ஊன்றி யிருக்கும் என எண்ண வேண்டாவா…? அதன் நீட்சியாய் வந்த நாலடியாரும்,

கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின் என்று கல்வியின் தேவையை விரிந்துரைக்கிறது. மேலும் தமிழர் தத்துவம் என்பதே திணைக்கொள்கைதான். திணைகளில் படைப்புத்தெய்வம் என்று எதுவும் இல்லை,கருப்பொருட்கள் பதிநான்கில் ஒன்றாகவே தெய்வம் வைக்கப்பட்டது. தமிழர் வாழ்வியல், அறிவையும் அறிவரையும் போற்றுவதே. வ.உ. சிதம்பரனார் கூட தன் திருக்குறள் நூலின் முன்னுரையில் திருக்குறளின் கடவுள் வாழ்த்தும், நீத்தார் பெருமையும், வான் சிறப்பு அதிகாரமும் இடைச்செருகல் என்கிறார் ஆனால் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தோ அறிவை பகுத்தளிக்கும் பகவனை முன்நிறுத்துகிறது.

பலர் பகவனை பகலவனாக, இறைவனாக கூறுகையில் தமிழ் இலக்கண மரபோ பகுபதம், பகாப்பதம் என்று சொல்லை பிரிக்கும் முறையைக் கொண்டு பகு-பக-பகவன்- என்று பொருளளிக்கிறது. இதைக் குறிப்பால் உணர்த்தும் முறையாக மெய்ப் பொருள் காண்பது அறிவு என்னும் குறட்பாவால் குறிக்கிறார் வள்ளுவர்.

இவ்வாறு இன்பியல், மூல ஊழ், எண்ணியக் கோட்பாடுகளை உள்ளடக்கி ஆணை கூறல் என்னும் தருக்க உத்தி கொண்டு முற் காலத்தில் இருந்த பல்வேறு கோட்பாடுகளை பதிய வைத்ததுடன், அல்லன ஒதுக்கி நல்லன துணிந்து உரைத் திருக்கிறார் வள்ளுவர். அனைத்திலும் அவர் முன்நிறுத்துவது அறத்தையே. ஏனெனில் தமிழர் வாழ்வும், மெய்யியலும் அறத்தின் பால் நிற்பதே. வள்ளுவனும் அறவோனே.

–தயவுடன் சி. ஹாருன் பாஷா, மெய்யியல் ஆய்வு – மதுரை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top