சுத்த சன்மார்க்க விளக்கம் Oct – 2025

Sutha-Sanmarga-Vilakam

சுத்த சன்மார்க்கம் என்பது தனிமனிதன், குழு, இனம், சமூகம், அரசியல், பொருளாதாரம், மதம், சமயம், மார்க்கம் என்று அருட்பெருஞ்ஜோதி தன் நிறை நிலையை, தான் விளங்கி விளங்குவதை விளக்கமாக,நிறைவாக திருவருட்பிரகாச வள்ளற்பெருமானார் வழியாக வெளிப்படுத்தியது ஆகும்.

இருவினை நேரொத்தும், சார்வுலக வாதனையைத் தவிர்த்தும், எல்லா வகையான கருத்தோட்டங்களிலும் தலைமையானது, தனித்துவமானது, ஒப்புயர்வற்றது சுத்த சன்மார்க்கம். இதனை அறிந்தவர்கள், புரிந்தவர்கள், தெளிந்தவர்கள் சுத்த சன்மார்க்கிகள். அவர்கள் கடவுள் நிலை அறிந்து, அம்மயமாகி மரணமில்லாப் பேரின்பச் சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

ஆதி, அந்தம் இல்லா அருட்பெருஞ்ஜோதி, உத்தம சற்குரு, வள்ளற் பெருமானார் வழிகாட்டுதலில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அறிவிற்குள் அறிவாக, அவ்வறிவிற்குள் அறிவாக, சுயமாக, பரமாக, அருளாக,  சிவமாகக் கண்டுகொண்ட இவர்கள் இருமனம் பிரிவறக்கூடி திருமணமாகி

நீ என்றும், நான் என்றும் பேதமில்லாது வாழ்ந்திருப்பார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், வள்ளற் பெருமானார் அவர்களை, அவர் இருக்குமிடம் தேடி வந்து, கலந்து அருளாட்சியை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஒப்பற்ற பெரிய தயவுடைய பேரறிவாளர். எல்லாம் ஆனவர். எல்லாம் வல்லவர். எல்லாம் உடையவர். தனித்தலைமை பெரும்பதி ஆவார்.

இந்தச் சிறப்பான நிலையை நமக்கு வழங்க, இன்றும் காத்துக் கொண்டிருக்கும் நம் வள்ளற் பெருமானாரை நாம் என்று கண்டு கொள்வோம்? அதற்கு நாம் தகுதி உள்ளவராக ஆக வேண்டும். நாம் தகுதி பெற வேண்டி சத்தியஞான தீபவழிபாடும், ஞானசரியையும், திருவருள் மகாவாக்கிய திருமந்திரமும், தயவும், திருவருட்பெருஞ்ஜோதி அகவலும் வழங்கியுள்ளார்.

நாம் வீண்பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றோம். நள்ளிரவும், விடியற்காலைப் பொழுதும் விழித்திருந்து, தனித்திருந்து, பசித்திருப்போம்.

இனி காலம் இல்லை. கருத்தில் கொள்வோம். கடைத்தேறுவோம்.

நலம் நிறைக!

தயவுடன் சுயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top