சிந்திப்போம்!
நலம் சூழ்க!
ஆண்டவர் ஒருவர்.
கடவுள் கூட்டம்.
தெய்வம் பலப்பல.
-என பெருமானார் சொல்லியுள்ளார்.
ஏன்? என சிந்திப்போமே!
ஆண்டவர் தான் இருக்குமிடம் தேடிவந்து தன்னில் கலந்து கொண்டார் எனச் சொன்ன பெருமானார் நாம் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலை நமக்கான இலக்காகச் சொல்லியுள்ளார்.
ஏன் ? என சிந்திப்போமே!
நாம், அதற்கான வழி, துறை, முறையுடன் சிந்தித்தால் நமக்கே அது விளங்கும்.
கடவள் நிலையை ஒருவர் அறியாத பொழுது ஆண்டவரின் இருப்பு, இயக்கம் பற்றி அறியமுடியாது. ஆண்டவர் நம்முடன் சேரும் பொழுது அல்லவா ஒருவர் பெருமானார் அடைந்த அதே சித்தி நிலையை அடைய முடியும்.
கடவுள் நிலை அறிந்து ஆண்டவரைக் கண்டுகொள்வது என்பது பெருமானார் சுத்த சன்மார்க்கத்தை வெளிப்படுத்திய காலத்திற்கு முன்பு ஒரு சில அருளாளர்களுக்கே வாய்த்துள்ளது. ஆனால் இன்றோ பலருக்கும் அந்நிலை வாய்க்கும் வாய்ப்பிருந்தும் கூடவில்லை.
ஏன்? என சிந்திப்போமே!
கிளிப்பிள்ளை சொல்வது போல் நாம், பெருமானார் சொல்லியுள்ளதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு, ஆனால் அனுபவத்திற்கு வராமல் இருக்கின்றோமோ?
ஏன்? என சிந்திப்போமே!
“மரணமிலாப் பெருவாழ்வு”-இது என அறிந்தோமில்லை.
அதற்கான முயற்சியை மேற்கொண்டோமில்லை.
முயன்றிருப்பின்,
அனுபவமும், பயனும், பலனும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
வெளிப்படையாக பெருமானார் வெளிப்படுத்தியும்
நம் நிலை, நம் முயற்சி எத்தகையதாக உள்ளது?
ஏன்? என சிந்திப்போமே!
வெளிப்படுத்திய பெருமானாரை அணுகி உண்மையை அறிய விரும்பினால் அவரிடத்து உண்மை அன்பை நாம் வைத்திருக்க வேண்டும்.
அன்பு இன்னதென அறியாதவரை
அருள்ஜோதியை அறியவோ அடையவோ இயலாது.
இயலாதபொழுது
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் கூடாது.
கூடாதபொழுது
நாம் சுத்த சன்மார்க்கி இல்லை.
இதுதான் உண்மை நிலவரம்.
சிந்திப்போம்!
எட்டு இரண்டு என்பதன் சுத்த சன்மார்க்க விளக்கம்:-
எட்டு என்பது :-
நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்
சூரியன்
சந்திரன்
ஆன்மா
ஆன்மா என்பது உயிரும் அறிவும் ஆகும்
( உயிர்கள் அனந்தம்.
அறிவும் அனந்தம். )
இரண்டு என்பது,
வாழ்க்கை ( உலகம் )
வாழ்க்கை முறை ( மாயை ) ஆகும்.
விளங்கி
விளங்குதல்.
எட்டும் இரண்டும் ஆவது தயவே!
எதனையும்
ஏற்றுக்கொள் !
ஒப்புக்கொள் !
பொறுத்துக்கொள் !
இவையே முன்வினையை
முற்றுவிக்கும்.
ஆருயிர்க்கும் அன்பு செய்தல்,
ஆண்டவரின் அருட்புகழை எடுத்து இயம்புதல்,
சுத்தசிவ சன்மார்க்கம் செழித்து ஓங்க அருள்ஜோதி செலுத்துதல்
இவை பின்வினை சேராது செய்யும்.
எனவே நாமனைவரும் முன்வினை அழித்து, பின்வினை தவிர்த்து வாழப்பழகுவோம்.
அகல் -உடல்
எண்ணெய் – இரத்தம்
திரி – சுக்கிலம்
ஒளி – ஆயுள் ( ஆன்மப்பிரகாசம் )
உடலைப் போற்றுக உண்மையை உணரும்வரை.
பின் அது அதுவாகும்.
–தயவுடன் சுயம்.
