“கொழிதமிழ்ப் பெருமை யார் அறிவார்?”
இரண்டு பேர் மலையாளத்தில் உரையாடினால் அவர்கள் மலையாளிகள் என்பதை அறிந்து கொள்ளலாம். இரண்டு பேர் தெலுங்கில் உரையாடினால் அவர்கள் தெலுங்கர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இரண்டு பேர் ஆங்கிலத்தில் உரையாடினால் அவர்கள் ஆங்கிலேயர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இரண்டு பேர் சீன மொழியில் உரையாடினால் அவர்கள் சீனர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இரண்டு பேர் அரைகுறை ஆங்கிலத்திலோ அல்லது தமிங்கலத்திலோ (தமிழும் ஆங்கிலமும் கலந்து ) உரையாடினால் அவர்கள் தமிழர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த உலகிலேயே கலப்பு மொழியில் பேசி தங்கள் தாய்மொழியைக் கொல்வதில் முதல் இடத்தில் இருக்கும் கயவர்கள் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை. தமிழர்கள்தான்.
அரைகுறை ஆங்கிலத்தில் பேசி தங்களை அறிவாளிகளாய் காட்டிக் கொள்வதில் தமிழர்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். “எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்”. இதுதான் தமிழர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சொற்றொடர் ஆகும். தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாகத் தமிழ் இல்லை. வழிபாட்டு மொழியாகவும் தமிழ் இல்லை. வணிகரின் மொழியாகவும் தமிழ் இல்லை. வாய் நிறையப் பேசும் மொழியாகவும் தமிழ் இல்லை. பயிற்று மொழியாகவும் தமிழ் இல்லை. அலுவலக மொழியாகவும் தமிழ் இல்லை. அறிவியலை அறிந்துணரும் மொழியாகவும் தமிழ் இல்லை. ஊடகங்களிலும் தமிழ் இல்லை. ஊர்ப் பெயர்களிலும் தமிழ் இல்லை. கடைகளின் பெயர்ப் பலகைகளிலும் தமிழ் இல்லை. “என் தாய்மொழி தமிழ்மொழி” என்று பெருமை கொள்ளும் நிலையிலும் தமிழ் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாடு என்ற சொல்லில் மட்டுமே தமிழ் இருக்கிறதே தவிரத் தமிழ்நாட்டில் வேறு எங்குமே தமிழ் இல்லை. “கண் இல்லாதவனுக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைத்தது போலத் தமிழே இல்லாத நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தனரோ?” என்ற ஏளன மொழி எல்லாத் திசைகளில் இருந்தும் கேட்கிறது. “தமிழா! அது உன் காதில் கேட்கவில்லையா?”
“குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையால் எனில்இக் கொழிதமிழ்ப் பெருமையார் அறிவார்?”
(குமரகுருபரர், மதுரைக்கலம்பகம் – 91)
“குளிர்ந்த தமிழின் சுவையால் மனம் கொள்ளை கொண்டு, அதை நுகர்தற்கு உண்டான விருப்பத்தால்தான் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகக்கடவுளே உக்கிரகுமார பாண்டியன் என்ற பெயர் கொண்டு மதுரையில் பிறந்தார் என்றால் தமிழின் பெருமைதான் என்னே! செழிப்பான இத்தமிழினது பெருமையை எவர் அறிந்து சொல்ல வல்லவர்?” எனக் கேட்கிறார் குமரகுருபரர். “தமிழின் அருமையறிந்து தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டி கடவுளே மனிதராக மண்ணில் பிறந்தார் ” என்கிறார் குமரகுருபரர். “தமிழ் படித்தால் போதும். மனிதனும் தெய்வமாகலாம்” என்கிறேன் நான். ஆம், தமிழர்களுக்குத் தமிழ்தான் தெய்வம். இந்த உலகில் தெய்வத்தன்மை பெற்ற ஒரே மொழி தமிழ்மொழி மட்டுமே. அந்தத் தெய்வத்தன்மை பெற்ற மொழியான தமிழ்மொழியில் பேசினால் போதும். நீங்களும் தெய்வமாகலாம். தன்னைத் தேடி வந்தவர்கள் எல்லோரையும் தமிழ் தெய்வமாக்கும். ஆம், வள்ளற்பெருமானார் கூறும் மரணமில்லாப் பெருவாழ்விற்கு தமிழ் திருஅருட்பாக்களே சான்றாகும்.

-தயவுடன் ஆ.தி.பகலன் (நெறியாளர்),
சதுரை திருக்குறள் பேரவை, சதுரங்கப்பட்டினம்.


