குடிமைப்பணி (Civil Services) தேர்வில் வெற்றி பெற 21 ரகசியங்கள்
குடிமைப்பணி (Civil Services) தேர்வெழுத முற்படுபவர்களின் வசதிக்காகத் தேசிய அளவில் கட்டணமில்லா நிகழ்நிலை (ஆன்லைன்) ஆலோசனை மையம் ஒன்றைத் தொடங்குவது என்ற எனது முயற்சியின் முதல் படிதான் இந்த நூல். நான் குடிமைப்பணியில் இணைந்து பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை எவ்வளவோ ஆர்வலர்களுக்கு முடிந்தவரை நேரம் ஒதுக்கி நேரிலும், அலைபேசியிலும், மெய்நிகர் சந்திப்புகளின் (Virtual Meetings) மூலமாகவும் ஆலோசனைகளை வழங்கி வந்திருக்கிறேன். ஆனாலும், இருபக்கங்களிலும் இருந்த நேரப்பற்றாக்குறையின் காரணமாகச் சொல்லியது பாதி, சொல்லாமல் விட்டது மீதி என்று வேண்டிய ஆலோசனைகளை முழுமையாக அளித்த மனநிறைவு ஒருபோதும் இருந்ததேயில்லை. அந்தக் குறையை இந்த நூல் வாயிலாக நீக்கும் முயற்சி ஓரளவுக்காவது பயன்தரும் என்றே நம்புகிறேன்.
இந்த நூலின் ஒவ்வொரு வரியையும் எழுதும்போதும், முறையான ஆலோசனை கிடைக்காத காரணத்தினால் பொன்னான வருடங்களை வீணாக இழக்கும் எண்ணற்ற ஆர்வலர்களோடு, குடிமைப்பணி தேர்வின்பால் ஆர்வம் கொண்டுள்ள எனது குழந்தைகளையும் மனதிற்கொண்டே எழுதினேன். சில வருடங்கள் கழித்து அவர்கள் தேர்வுக்குத் தயாராகும் தருணத்தில், பணியின் காரணமாகவோ, சூழல் காரணமாகவோ அவர்களின் கரம் பற்றி வழிநடத்தும் பேறோ, அருகில் அமர்ந்து சொல்லித்தரும் இன்பமோ எனக்கு ஒருவேளை அமையாவிட்டாலும் கூட, இந்த நூல் அந்த வேலையை செவ்வனே செய்யும் என்று மனநிறைவு கொள்கிறேன்.
இக்காலத்தில் தகவல்களுக்குச் சிறிதும் பஞ்சமில்லாத காரணத்தினால், இந்த நூலில், குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மற்ற கூறுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கிறேன். எதைப் படிப்பது, எப்படிப் படிப்பது என்பதைவிட, ஏன் படிக்க வேண்டும், எதற்காகப் படிக்க வேண்டும் என்று விளக்க முற்பட்டிருக்கிறேன். தேர்வில் வெல்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், அதையும் தாண்டி குடிமைப்பணியிலும், வேலை, வாழ்க்கை சமநிலையைப் பேணுவதிலும் ஒருவர் வெற்றி பெறும் நோக்கில் இந்நூலை அணுகுவது நலம். வாழ்வின் எவ்வளவோ அல்லல்களுக்கிடையில், தங்களது முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் இத்தேர்வில் வெற்றி பெற்ற எண்ணற்றவர்களின் கதைகளை மிகச்சுருக்கமாகத் தந்திருக்கிறேன். ஒவ்வொரு கதையும் பலருடைய உண்மைக் கதைகளின் கலவையாகும். மேலும், வாசிப்பை இயல்பாக்கும் நோக்கில் ஆங்காங்கே குறுங்கதைகளின் மூலம் கருத்துகளை விளக்கியிருக்கிறேன். எளிதாக உள்வாங்கிக் கொள்ள வசதியாக, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் மூன்று கருத்துகளைச் சுருக்கமாகத் தொகுத்துத் தந்திருக்கிறேன்.
கீழ்க்கண்ட தலைப்புகளை எதிர்வரும் தொடரில் சிந்திக்க இருக்கிறோம்.
- @ உங்கள் தனித்தன்மையைப் போற்றுங்கள்.
- @ நேர்மையாய் நடுநிலைமையுடன் இருங்கள்.
- @ கவனம் சிதறாத தீர்மானத்தைக் கொண்டிருங்கள்.
- @ விழிப்புணர்வுடன் இருங்கள்.
- @ புதிய முறையில் அணுகுங்கள்.
- @ தீயவற்றைத் தூர எறியுங்கள்.
- @ சமரசமில்லா ஒழுக்கத்தைப் பேணுங்கள்.
- @ அச்சமின்றி நம்பிக்கையுடன் இருங்கள்.
- @ எக்கணத்திலும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
- @ செயல்முறையை அனுபவியுங்கள்.
- @ உங்களுக்கான சூழலை அமைத்துக் கொள்ளுங்கள்.
- @ இருப்பதிலிருந்து தொடங்குங்கள்.
- @ உடல் நலம் பேணுங்கள்.
- @ மனநலம் பேணுங்கள்.
- @ பயிற்சி வகுப்புகள் தேவையா?
- @ நூல்கள் மற்றும் கையேடுகள்.
- @ சோம்பல் தவிர்ப்போம்.
- @ நிதி, உறவு மேலாண்மை.
- @ நேர மேலாண்மை.
- @ விருப்ப, பொழுதுபோக்கு வேலைகளைத் தேர்ந்தெடுத்தல்.
- @ புத்திசாலித்தனமாகச் செயல்படுதல்.
தொடரும் …

தா. முருகராஜ் IFS
இந்திய அயலகப் பணி,
அயர்லாந்திலுள்ள இந்தியத் தூதரகத்தின்
முதன்மைச் செயலாளர் மற்றும் துணைத் தூதுவர்
