அறம் செய விரும்பு!

தயவுடன் அறச்செம்மல் கதிர்நம்பி, சிவகங்கை

அறம் செய விரும்பு என்பது அவ்வை மொழி. அறம் என்றால் என்ன என்பது பெரும்பாலானோருக்கு இன்று வரைக்கும் விளக்கம் தெரியவில்லை. தெரிந்துகொள்ள முனைவதுமில்லை. விளக்கம் அறியாவிட்டாலும் வாழ்வில் அறம் சார்ந்த விழுமியங்களை கடைபிடித்து வருகின்றனர்.

கற்காமலே கற்பிக்கப் படாமலே கூட கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகாரம் சார்ந்த சில நெறிகளை சட்டங்களாக வகுக்க “அறம்” எனும் கவசம் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. ஆன போதிலும் உழைக்கும் மக்களின் வாழ்வியல் விழுமியத்தில் அறம் எனும் சொல் நீக்கமற இழையோடிக் கிடக்கிறது.

சரி. ஏன் அறம் செய்ய விரும்ப வேண்டும் என அவ்வை சொன்னாள்? தமிழர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என வள்ளுவர் பொருள் கோடலின் தேவையை எச்சரிக்கிறார். வணிகனின் தேரில் பொருத்தப் பட்டிருந்த மணிகள் பறவையினை அச்சப் படுத்துவதாகக் கருதி அந்த மணிகளை கழட்டச் சொன்ன வணிகனிடம் அறச் சிந்தனையை காண முடிகிறது. கூடவே செல்வச் செழிப்பான நிலையையும் உணர முடிகிறது.

“யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”
முசிறி எனும் சேரநாட்டின் துறைமுகத்தில் யவனர்கள் பொன்னைக் கொடுத்து மிளகை(கறி) மூட்டை மூட்டையாகப் பெற்றுச் சென்றதை அகநானூறு கூறுகிறது. கொற்கை முதல் யவனம் வரை பொருள் வணிகம் செய்து வந்த கூட்டம் பொருள் பற்று அதீதமாகப் போய் விடின் அது குமுகத்தின் இழுக்கு எனக் கருதி (இழுக்கும் ஏற்பட்டதை பேசுவதே சிலப்பதிகாரம்) பொருளுடைமையை சமநிலைப் படுத்தும் சிந்தனைப் போக்கே அறம் செய்ய விரும்பு. வணிகமும் வணிகர்களும் செழித்த பகுதியான செட்டிநாட்டில் கோயில்களும் குளங்களும் பெருகி இருக்கக் காரணம் அறச் செயலில் ஈடுபடவே.

அறம் என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுத்தாலும் மணிமேகலை எனும் பெருங்காப்பியம் தரும் விளக்கம் எக்காலத்திற்கும் பொருந்திப் போவதாக இருக்கிறது.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்”
இவ்வாறு உணவு,உடை, உறையுமிடம்(தங்குமிடம்) அளிப்பதே அறமாகும் என்கிறது மணிமேகலை.

“எத்திசை செலினும் அத்திசை சோறே” என்கிறாள் அவ்வை.

பெரும்பாலான சமயங்களில் உணவளிப்பது அறமாக கூறப்பட்டிருக்கிறது. சமணம் “அன்னதானம், கல்வி தானம், மருத்துவ தானம்” ஆகிய மூன்றையும் கடமையாகப் போதிக்கிறது. சைவ சமயம் ‘அறம் வளர்த்த நாயகி’ எனும் பெண் தெய்வத்தின் பெயரில் அறச் செயல்களைப் பட்டியலிடுகிறது.

நீட்சியாக வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் “பசி, பிணி” போக்கும் பணியானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த அறச் செயலாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏகபோக வளச் சுரண்டல் காரணமாக அடிக்கடி பஞ்சம், பசி, கொள்ளை, பிணி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் “கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக!” என்று வெள்ளை அரசின் ஏகாதிபத்திய ஆட்சியைச் சாடுகிறார்.

“பசித்தவன் எல்லாம் உண்ணப் பிறந்தவன். சமைத்த உணவு அனைவருக்கும் பொதுவானது” என்கிறார் அறிஞர் தொ.பரமசிவன். “கல்லுலையும் சோறு கத்தாழைலையும் சோறு; தொண்டைக்கு அங்கிட்டு நகர்ந்துட்டா நரகலு” என்று நாட்டார் மரபில் தோன்றிய சொலவடை சொல்கிறது.

“தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றான் பாரதி. பாரதியின் கருத்துக்கு ஈடாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் ஊருக்குப் புதியவர் யாரேனும் வந்துவிட்டால் பசியோடு படுக்கைக்கு போகக் கூடாது என்று இராச் சோறு வழங்கிய ஊர்கள் இருந்தன. ஐயமிட்டு உண் என்றாள் அவ்வை. வீட்டிற்கு வரும் விருந்தினரை பசியாறி அனுப்பி வைப்பது மரபு. “பசியாறுங்க” எனும் சொல் நாட்டார் வழக்கில் இன்றும் புழக்கத்தில் உள்ள சொல்லாகும்.
“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்”
எனும் குறளில் வள்ளுவர் பிறர் பசியை போக்கும் பெருஞ் செயலுக்கு அடுத்த படியாக தான் பசி பொறுத்தல் எனும் செயலை அடுக்குகிறார்.

“நீரும் சோறும் விற்பனைக்கு அல்ல” என்று வாழ்ந்த தமிழ்க் குமுகத்தின் தொடர்ச்சியாக நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே;”
என்கிறார் குடபுலவியனார். உணவே முதன்மையானது. நிலமும் நீரும் சேர்ந்தால் கிடைப்பது உணவு. உணவளிப்பவரே உயிர் அளிப்பவராவர். இப்படியான உணவளிக்கும் நீரை போத்தலில் அடைத்து விற்று காசு பார்க்கிறோம். நிலத்தை விற்று நாகரீக வாழ்வு வாழ்கிறோம். ஆப்பிரிக்கத் தொல்குடி நினைவுகளில் நிலம் எல்லாருக்கும் பொதுவானது. தமிழர் நினைவுகளில் நிலமென்பது சதுர அடி கணக்காகிப் போனது. அந்தோ! ஒரு துண்டு நிலம் கூட சொந்தமில்லாத தமிழனும் புவியில் வாழ்கிறான்.

இன்றைக்கு வீட்டில் அமர்ந்து கொண்டே தனக்கான உணவை இன்னொருவரை சுமந்து வரச் செய்யும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது சந்தைப் பொருளாதாரம். “எல்லாம் சந்தைக்கே”, “எதுவும் விற்பனைக்கே” எனும் போது உணவு மீது படிந்திருக்கும் அறம்சார் சிந்தனைகளை நீக்காமல் எவ்வளவு தூரத்திற்கு உட்செலுத்துகிறோம் என்பதில் இருக்கிறது வருங்கால மானுட குலத்தின் வாழ்வும் வளமும்.

மேலும் அறம் என்று வரும்போது இந்தப் பதிவினைப் பற்றி நான்கு வாக்கியங்களாவது எழுதாமல் இந்தக் கட்டுரையை முடிக்க இயலாது. வெள்ளியங்கிரி மலையில் மலைக்கோயில் அர்ச்சகர் ஒருவர் அங்கு விஜயம் செய்யும் பக்தர்களைப் பார்த்து கை கூப்பி வேண்டிக் கொள்ளும் கோரிக்கையாவது…

கடவுளை நீராகவும், நிலமாகவும், அக்கினியாகவும் வணங்கி வழிபடும் நாம் அவரே இயற்கையாக விளங்குகிறார் என்பதை மறந்து இந்த இயற்கை வளங்களை எல்லாம் கண்டவாறு மாசு படுத்திவிட்டோம். இயற்கை மிகவும் பாழடைந்துள்ளது. இயற்கை மட்டுமே இங்குள்ள கடவுளின் பிள்ளைகளான எல்லா உயிர்களையும் வாழ வைக்கும். அந்த வகையில் இயற்கையை பேணிக் காப்பது நமது கடமை அல்லவா?
இறைவன் தரும் விளக்கத்தில் ஒரு உண்மையும் ஒரு பொய்மையும் சொல்ல வேண்டும் என்றால்…
இருப்பது பொய்!
போவது மெய்!

நீங்கள் அர்ச்சனைத் தட்டில் போடும் அஞ்சு பத்து சில்லறைக்காக அவன் இங்கு சிலையாக நிற்கவில்லை. நாம் பஞ்சபூதங்களிடமிருந்து உறிஞ்சி எடுத்து அனுபவிக்கும் இந்த சுகபோக வாழ்க்கையில் எத்தனையோ ஆகத்தகாத காரியங்களையும் செய்து வருகிறோம். அவையெல்லாம் விடுத்து அதற்காக இயற்கையிடம் மன்னிப்பு கேட்டு நாம் இழந்த இந்த இயற்கையை மீட்டெடுப்போம்.

வெள்ளையங்கிரி மலைக்கு வந்ததன் ஞாபகார்த்தமாக ஆளுக்கு ஒரு மரம் நடுங்கள். அது நம் சந்ததியை காக்கட்டும். புண்ணியத்தால் மட்டுமே இறைவனது திருவடியைப் பெற முடியும். இருக்கும் பணம் இல்லறத்திற்கு உதவும். இறைவனுக்கு வேண்டாம். தங்களால் முடிந்தால் இந்த மலையை மாசு படுத்தாத வகையில் பிளாஸ்டிக் ஏதும் போட்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா என்று தன் கனிவான வார்த்தைகளால் கைகூப்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறார்.

ஒழுக்கமே சுயம்!
சுயமே சிவம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top