(-ஆன்மநேய வள்ளலார் உயிர்க்கொலை தடுப்பு இயக்கம்)
ஆன்மநேய ஒருமைப்பாடு(கட்டுரையின் முன்றாம் பாகம்):
ஆன்மா
ஆன்மா என்பது ஒரு வகையான சிற்றணு. இது கோடி சூரியப் பிரகாசம் உடையது. உணர்ச்சி உள்ள ஒரு சித்துப் பொருள்; அறிவுப் பொருள். இது கால் பங்கு பொன்மையும், முக்கால் பங்கு வெண்மையும் உடைய ஒரு சிற்றணு. ஆன்மா தோன்றுதலும் இல்லை; அழிதலும் இல்லை. ஆன்மா ஓர் அனாதி வஸ்து. தன்னைத் தானே அறிந்து கொள்ளும் சுதந்திரமற்றது. ஆனால் அறிவித்தால் அறியக் கூடியது.
ஆன்மாக்கள் கூட்டமாய் அணுத் துகளாய் நிறைந்துள்ள இடத்திற்கு ஆன்ம ஆகாசம் என்று பெயர். இது பிறவி என்னும் தேகம் எடுப்பதற்கு முன் அணுத்துவமாக ஆன்மாகாசத்தில் இருந்து வரும். இதே பிறவி எடுத்த பிறகு ஒரு சரீரத்தில் நுழைந்து ஒவ்வொரு ஜீவனின் சரீரத்திலும் தலைப்பகுதியில் அதாவது தலையின் நடுப்பகுதியில் தனது இருப்பிடமாக இருந்து அந்தந்த சரீரத்திலே ஜீவித்து வரும்.
மேலும் ஆன்மாவானது தனக்குக் கொடுக்கப்பட்ட தேகத்தைக் கருவியாகக் கொண்டு இந்த உலகப் பொருட்களை அனுபவித்து இன்ப துன்பங்களை நுகர்ந்து அனுபவம் பெற்றுக் கொள்கிறது. ஆன்மா என்பது இப்படிக் கண்ணுக்குத் தெரியாத காரணப் பொருளாய் இருந்து கொண்டு கண்ணுக்குத் தெரிந்த காரியப் பொருளாகிய தேகத்தை இயக்கி உலக சுக போகங்களை அனுபவித்து வருகிறது.
நேயம்
நேய என்பது நேயம் என்ற பெயர்ச்சொல்லை குறிப்பிடுவதாகும். நேயம் என்றால் நட்பு, அன்பு, நேசம், பாசம் என்று பொருள்படும்.
ஒருமைப்பாடு
நமது திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானார் நினைந்து; உணர்ந்து வலியுறுத்திய ஒருமைப்பாடு என்பது எவ்வுயிரையும் தம்முயிர்போல எண்ணிப் பார்த்து உணர்வதுதான் என்பதாகும்.
மனிதநேயம்
மனிதநேயம் என்பது சக மனிதர்களிடம் நட்பு, அன்பு, கருணை, தயவு காட்டுதல் போன்றவை ஆகும். மனிதருள் ஜாதி, மதம், இனம், மொழி, தேசம், நிறம், செய்யும் தொழில், ஆண், பெண் என எந்த ஒரு காரணத்தின் அடிப்படையிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எண்ணி வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரும் ஒன்றே எனப் பார்ப்பது மனிதநேயம் ஆகும்.
ஆன்மநேயம்
ஆன்மநேயம் என்பது மேற்கண்ட மனிதநேயத்தையும் கடந்தது; அது எப்படி எனில் மனிதருள் மட்டுமல்ல, சரீரத்தால் வேறுபட்ட தாவரம், பறவை, மிருகம், நீர் வாழ்வன, ஊர்வன, தவழ்வன என இப்படி 84 லட்ச வகை யோனி பேத ஜீவராசிகளும் ஏழு வகைப் பிறப்புடைய அனைத்து ஜீவராசிகளும் அது அது செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, அந்தந்த சரீரம் கிடைக்கப் பெற்று ஜீவிக்கின்றன என்றும்; சரீரத்தால் மட்டுமே வேறுபட்டவையே அன்றி, உயிரால் ஆன்மா என்ற ஒரே இனம் தான் என்றும் அனைத்து ஆன்மாக்களும் நமது சகோதரர்களே என்று எண்ணுவதுமே ஆன்மநேயம் ஆகும்.
ஆன்மநேய ஒருமைப்பாடு
ஆன்மநேய ஒருமைப்பாடு என்றால் தன்னைப் போலவே அனைத்து உயிர்களையும் தன் இனமாகவே எண்ணுதல் ஆகும். ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உறவோடு சக மானிடர்களாகிய நம்மையும்,
“நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ” என்று ஆன்மநேய உறவோடு அழைக்கின்றார் நம் வள்ளல் பெருமானார்.
இப்படி ஆன்மநேயத்தையே எல்லா நீதி நூல்களும், வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் கூறுகின்றன. திருவள்ளுவப் பெருந்தகை இதனை,
“பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.”
-என்று கூறுகிறார். இதில் பல்லுயிர் என்றால் மனிதன் மட்டுமல்ல; தாவரம், மிருகம், பறவை, ஊர்வன, நீர் வாழ்வன முதலான அனைத்து உயிரினங்களையும் குறிக்கிறது. ஆக பகுத்து உண்டு என்பது எல்லா உயிர்களும் இந்த பூமியிலே இன்பத்துடன் வாழ உரிமை பெற்று வந்திருக்கிறது; எப்படி மனித சமுதாயம் இந்தப் பூமியிலே நீண்ட காலம் வாழ்வதற்குத் துடிக்கின்றதோ, அதே போன்று எல்லா உயிரினங்களும் இந்த பூமியிலே வாழ்வதற்கு முயலுகின்றது.
அதேசமயம் மனிதன் மற்ற ஜீவராசிகளைப் போல அருள்நியதி ஆகாரத்தை மட்டும் புசிக்காமல் ஆகாமிய முயற்சி ஆகாரத்தையும் புசிக்கக்கூடிய தேக, போக, ஜீவ சுதந்திரங்களைப் பெற்றவனாய் இருக்கின்றான். மனிதனானவன் இப்படி சுதந்திரத்தினால் தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளவும், அதனை சேமித்து வைத்துக் கொள்ளவும், இயற்கை சீற்றங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள வீடு கட்டி வாழவும், தன்னுடைய மானத்தை மறைக்க ஆடை அணிந்து கொள்ளவும், விரும்பியதை விரும்பிய காலங்களில் அனுபவிக்கின்ற சுதந்திரத்தினையும் பெற்றவனாய் இருக்கின்றான்.
இந்தச் சுதந்திரத்தினால் தான் அனுபவிக்கும் சுகபோகங்களைப் பல்லுயிர் என்று சொல்லக்கூடிய எல்லா ஜீவராசிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். தன்னுடைய உணவைப் புசிக்கக் கூடியவற்றைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் நெறிமுறையைத்தான் மனித சமுதாயத்திற்கு அவசியம் தேவை என வள்ளுவப் பெருந்தகை வழிகாட்டியுள்ளார். இதனையே நமது திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானார் வள்ளுவப் பெருந்தகையை விட ஒரு படி மேலே சென்று இப்படிப்பட்ட ஆன்மநேயப் பண்புடைய மனிதர்களையே “நடமாடும் தெய்வங்கள்” என்று கூறுகிறார்.
திருவருட்பாவில்,
எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
செயல்எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
வாய்மிகவும் ஊர்வ தாலோ,
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ,
கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
தம்உயிர்போல் கண்டு ஞானத்
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
பெருநீதி செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
திருவாயால் புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
வார்த்தைகள்என் றறைவ ராலோ.
மேற்கண்ட பாடல்களில் ஆன்மநேயம் உடையவர்களின் உள்ளத்தை கடவுள் காரியப்படும் இடமாக, அதாவது நடனமிடும் இடமாகக் கூறுகிறார். மேலும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் இப்படி ஆன்ம நேயம் உடையவர்கள் ஆன்ம அறிவு கண் திறக்கப்பெற்றவர்கள் என்றும், அவர்கள் ஆன்மதிருஷ்டி விளக்கம் பெற்றவர்களாகவும் கூறுகிறார்.
இந்த ஆன்மநேயம் உடைய மனிதர்களைத்தான் ஆத்ம ஞானிகளாகக் கூறப்படுகிறது. இன்னும் தெளிவாக ஆணித்தரமாகக் கீழ்க்கண்ட பாடலில் பெருமானார் கூறுகிறார். என்னதான் அஷ்டமா சித்தியே பெற்றிருந்தாலும், இறந்த உயிரையே மீண்டும் உயிர்பிக்கக்கூடிய ஆற்றலையே பெற்றிருந்தாலும் கூட, அவர்கள் ஓர் உயிரை கொலை செய்வதும் அதன் மாமிசத்தை உண்ணுவதும் தவறில்லை என்ற கருத்து உடையவராக இருப்பாரேயானால், “எனது சிவத்தின் மீது, எனது குருவின் மீது ஆணையிட்டு சொல்லுகிறேன்; அவர்கள் ஞானிகள் இல்லை” என்கிறார் வள்ளல் பெருமானார். அவர்கள் அசுத்த மாயை சம்பந்தப்பட்டவர்கள். ஏனெனில், அவர்களிடம் கொல்லாமை, புலால் உண்ணாமை என்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வழங்கப்படவில்லை என்று இனம் பிரித்துக் காட்டுகிறார் வள்ளல் பெருமானார்.
இதைத்தான் திருவருட்பாவில்,
மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்
கண் விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணை யுற இறங்காது உயிர் உடம்பைக்
கடிந்து உண்ணும் கருத்தனேல் எங்கள்
குரு ஆணை எமது சிவக் கொழுந்தாணை
ஞானி எனக் கூற எண்ணாதே!
என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடலின் வாயிலாகக் கொல்லாமையும் புலால் உண்ணாமையும் உடையவர்கள்தான் சுத்த ஞானிகள் ஆவார்கள் என்று தெரிய வருகின்றது. ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவர்கள் எப்படிப்பட்டவராக இருப்பார்கள் என்று பார்த்தோமேயானால்;
- எவ்வுயிரையும் எக்காலத்திலும் எவ்விதத்திலும் எவ்விடத்திலும் எவ்வளவும் கொலை செய்யாதிருப்பார்கள்.
- எந்த வகையிலும் புலால் அதாவது மாமிச உணவு உண்ணாதிருப்பார்கள்.
- பிற உயிர்கள் படும் துன்பத்தை ஒரு காலும் சகித்துக் கொள்ளாமல் உயிர்களுக்கு ஏற்படும் அத்துன்பத்தை நீக்க முற்படுவார்கள்.
- அஞ்ஞானத்தினாலும் பிறவி வாசனையினாலும் கொலை பாதக செயலையும் புலைப் புசிப்பினையும் உடைய துன்மார்க்கர்களைக் கண்டும் காணாமல் செல்லாது, கொலை படும் ஜீவனும் கொள்ளும் மனிதனும் நமது சகோதர ஆன்மாக்களே என்பதை உணர்ந்து அந்தக் கொலையை எந்தவித தந்திரத்திலாவது தடுத்து அந்த உயிரைக் காப்பாற்றுவார்கள்.
மேலும் கொலை என்னும் மாபாதகக் கொடுஞ்செயலை செய்யும் ஜீவர்களையும் கொலை அற்ற நல்லொழுக்கத்திற்கு வர வைப்பார்கள். அது எவ்வாறு எனில்; - நல்ல வார்த்தை எடுத்து சொல்லுதல்(சாம)
- பொருளைக் கொடுத்து வசப்படுத்துதல்(தான)
- மிரட்டிச் சொல்லுதல்(பேத) ,
- காலில் விழுந்தாவது சொல்லுதல்(தண்டம்)
- இத்தனை முயற்சிக்குப் பிறகும் ஒருவர் நல்லொழுக்கத்திற்கு வரவில்லை எனில்; இறுதியாக ஆண்டவரிடத்திலே அந்த ஜீவனின் தீய குணம் நீங்கி விரைவில் நல்லொழுக்கத்திற்கு வர வேண்டும் என்றும், சத்துவ குணம் வாய்க்கப் பெற வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்வார்கள். அதே தருணத்தில் இவ்வண்ணமாயும் இருப்பார்கள்.
திருவருட்பாவில் ,
கைநேர்ந்து கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி
நாடா தவரவையை நண்ணியிடேல் – கோடாது
கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு
புல்லாக எண்ணிப் புறம்பொழிக.
என்று நெஞ்சறிவுறுத்தலில் கூறுகிறார் நம் பெருமான்.
இப்படியாக, ஆன்மநேய ஒருமைப்பாடு உடையவர்கள் ஓர் உயிரைக் கொலை செய்வதும், அதன் புலாலைப் புசிப்பதும் எந்த வகைச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எந்தவிதத் தந்திரத்திலாவது அவர்களை நல்லொழுக்கத்திற்கு வர வைத்து விடுவார்கள்; இப்படி எல்லா உயிர்களையும் உய்வடைவிக்கும் பொருட்டு இவர்கள் பாடுபடுவதால் இவர்களுக்குக் கடவுளினுடைய அருள் பரிபூரணமாகக் கிடைக்கப்பெறும். பரிபூரண அருள் வல்லபத்தால் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தை நீக்கி மரணம் இல்லாதப் பெருவாழ்வு பெற்று வாழ்வார்கள். இதைத்தான் நம் பெருமானார்,
திருவருட்பாவில்,
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
என்று நினைந்து; உணர்ந்து; நெகிழ்ந்து வலியுறுத்தியுள்ளார். இப்படி நாமும் நம்மைச் சார்ந்த அனைவரும் இந்தப் பெருவாழ்வு வாழ, நாம் அனைவரும் அனுதினமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் வைக்க வேண்டிய விண்ணப்பம் தான் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம் ஆகும்.
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!.
எனவே, மனித தேகம் பெற்ற நாம் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை மட்டுமே சாதனமாகப் பயின்று கடவுளின் அருளைப் பரிபூரணமாக பெற்று இன்றும் ஞான தேகத்தில் வாழ்ந்து கொண்டு, 647 கோடி ஞான சித்திகளையும் பெற்று அகில உலகத்தையும் அருள் அரசாட்சி நடத்தி வரும் பரிபூரண சுத்த ஞானி திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து, நாமும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்வோம். கடவுளது பரிபூரண அருளை, வள்ளல் பெருமான் வழியையே பின்பற்றி நாமும் மரணம் இல்லாத பெருவாழ்வைப் பெற்று வாழ்வோம். வாரீர்! வாரீர் ! விரைந்து விரைந்து வாரீர்!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
