பெண்களின் கருப்பைப் பிரச்சனைகளைத் தீர்க்கும் மூலிகைகள் Oct – 2025

கல்யாண முருங்கை

ஆடாதொடை

அசோகா மரம்

பெண்களின் கருப்பைப் பிரச்சனைகளும் அதற்கான காரணங்களும் பற்றிச் சென்ற மாத இதழில் விளக்கமாகக் கற்று உணர்ந்தோம்.

மாதவிடாய்க் காலங்களில் அதிகப்படியான உதிரப்போக்கு, தடைப்பட்ட மாதவிடாய், வெள்ளை படுதல், கர்ப்பப்பை கட்டி, நீர்க்கட்டி, கருக்குழாய் அடைப்பு எனப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது பற்றியும், ஹார்மோன்கள் சமச்சீர் இன்மை, தட்பவெப்பநிலை மாறுபாடு, மன அழுத்தம், தவறான உணவுமுறைகள், உடற்பயிற்சியின்மை, இன்றைய வாழ்க்கை முறை, பெண்களின் பருவ காலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (பூப்படையும் கால மாறுபாடுகள்)  போன்றவைகளே பெண்களின் கருப்பைப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாகும் எனவும் பார்த்துத் தெரிந்து கொண்டோம்.

இவற்றைச் சரி செய்ய சில வாழ்வியல் ஒழுக்க நெறிகளையும், உணவு முறைகளையும் அறிந்து கொண்டோம். அதனோடு கூடி இந்தப் பிரச்சனைகளை நிரந்தரமாகச் சரி செய்யும் மூலிகைகள் பற்றிய தொகுப்பை இந்த மாத இதழில் காண இருக்கின்றோம்.

“பெண்களின் ஆரோக்கியத்தில் கற்பக விருட்சங்கள் ” என்ற தலைப்பில் ஒரு புத்தகத் தொகுப்பாகத் தந்து பொது மக்களுக்கு வழங்கி, இயன்ற வரையில் இதைப் பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களில் பிறருக்கும் பொது நோக்குடன் தந்து பலன் பெறும்படி நமது அருள் மருத்துவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண்களின் ஆரோக்கியத்தில் கற்பக விருட்சங்கள் என்று அவர் தனது குறிப்பில் தொகுத்து விளக்கியிருப்பதாவது கீழே குறிப்பிட்டுள்ள மூன்று முக்கிய மூலிகைகளைத்தான்.

1. கல்யாண முருங்கை
2. ஆடாதொடை
3. அசோகா மரம் ( நெட்டிலிங்க மரம் அல்ல.)

இந்த மரங்களின் மருத்துவத் தன்மை பற்றி சற்றே விரிவாகக் காண்போம்.

கல்யாண முருங்கை

கல்யாண முருங்கையை “காக்காப்பு” என்று அழைக்கும் மரபும் உண்டு. கருப்பையைச் சுத்தப்படுத்தி குழந்தைப்பேறு இல்லாமையைச் சரி செய்வதில் இந்த மூலிகை சிறந்து விளங்குகிறது.

சிவப்பு நிறமுள்ள கல்யாண முருங்கை மரத்தின் பூக்களைப் பூச்சி, புழுக்கள் இல்லாமல் நன்கு நீரில் அலசி, சிறிது மிளகு சேர்த்தரைத்து, மாதவிடாய் காலங்களில் காலை மாலை வெறும் வயிற்றில் சுண்டைக்காயளவு 5 நாட்கள் சாப்பிடவும். இம்மாதிரி 3 முறை உட்கொள்ளக் கருப்பைக் கட்டி கரையும். கரு நிற்கும். இதற்கு எதுவும் பத்தியமில்லை. சைவ உணவு மட்டும் சாப்பிடவும்.

”கருப்பா சமயத்தில் கறுத்துத் தடித்தே பருத்த உதிரத் திரளை பஞ்சாய்த் துரத்தி விடும்.” – என்பது சித்தர் வாக்கு.

“முள்ளு முருக்கது தான் மோதுகின்ற சர்த்திருன்மங் கள்ளமறத் தீர்க்குங்கனற்சுரமும் விள்ளரிய அக்கரமும் போக்கு மனல்வாய்வேக் காடகற்றும் மிக்க வலி கொடுக்கும் விள்”

வெள்ளை நிறமுள்ள கலியாண முருங்கைப் பூக்கள் கிடைத்தால் மிகமிக விசேஷமாகும்.

கல்யாண முருங்கை மருந்தாக உட்கொள்ளும் முறை:

காலை – கல்யாண முருங்கை இலை 100 கிராம், சுத்தி செய்த சுக்கு 25 கிராம், இரண்டையும் கலந்து தினமும் காலையில் அரை டீஸ்பூன் தேன் கலந்து அல்லது நெய்யில் கலந்து  எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாலை – கல்யாண முருங்கை இலைப் பொடி 100 கிராம், திரிபலாச் சூரணம் 20 கிராம் இந்த இரண்டையும் கலந்து மாலை அல்லது இரவு நேரத்தில் சுடுதண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுக்கு சுத்தி செய்முறை:

சுக்கின் மீது சுண்ணாம்பு பூசி வெயிலில் வைக்கவும். காய்ந்த சுக்கினை இடுக்கியின் மூலம் நெருப்பில் வாட்டி சுக்கின் மீது உள்ள சுண்ணாம்புக் கவசத்தை நீக்கி சுக்கினை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

ஆஸ்துமாவை சரி செய்யும் கல்யாண முருங்கை :

கல்யாண முருங்கை இலைச்சாறு – 30 மி.லி

வெள்ளை நிற வெங்காயச் சாறு – 30 மி.லி

நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால முறை இதுவாகும். புழுங்கல் அரிசிச் சாதம் வேகும் போது கொதிக்கும் நீரில் இந்த இரண்டு சாற்றினையும் கலந்து கொதிக்க வைத்து ஒரு கஞ்சி போல இளம் சூடான நிலையில் எடுத்துக்கொண்டு வரும்போது, இரைப்பு, காசம் கூட பூரணமாகக் குணமாகும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

கல்யாண முருங்கை மூலிகையின் ஏனைய பலன்கள் :

1. காமாலையைக் குணமாக்கும்.(Jaundice எனும் குன்ம காமாலை )
2. வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும். (Stomach ulcer)குன்மம் என்ற (Peptic ulcer and Duodenal ulcer)
3. முடி கொட்டுவதை முழுவதுமாக நிறுத்தி விடும். நல்ல ஊட்டச்சத்தாக இருந்து கூந்தலுக்கு வலுக் கொடுக்கும். (Hair Nutrition and Nourishment)
4. கல்யாண முருங்கை இலையைக் கொண்டு தயாரிக்கும் ஹேர் ஆயில் கூந்தலுக்கு ஒரு நல்ல ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், அடர்த்தியையும், நல்ல ஒரு கருமையையும் கொடுக்கும்.
5. முகம் பொலிவாகும். தோலும், முகமும் மினுமினுப்பாக இருக்கும்.

ஆடாதொடை

ஆடாதொடை இலையின் பண்பு யாதெனில், வளி ஐயங்குற்றங்களின் பெருக்கை அறுக்கும். வாததோடம், பற்பல சுரம், முப்பிணி, வயிற்றுநோய், குருதியழல், இருமல், மேலிளைப்பு, வாந்தி, விக்கல், சூலை, அண்டவாயு ஏனையவைகளையும் போக்கும். பாடக்கூடிய நல்ல குரலொலியைத் தரும். ஆடாதொடைச்சாறு எப்பேர்ப்பட்ட அதிக உதிரப்போக்கையும் கட்டுப்படுத்தும்

ஆடாதொடைச் சாறு மற்றும் பசுமோர் கலந்து காலை மாலை இரு வேளைகளிலும் அருந்த வேண்டும். மாதுளை பழச்சாறு மற்றும் பீர்க்கன்காய்ச்சாறு குடித்து வர மேலும் பலன் அளிக்கும். மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது என்றால் மேற்கூறிய மருத்துவ முறை, நிச்சயமாக இரத்தத்தில் ப்ளேட்லெட் எண்ணிக்கையைச் சரி செய்து உடல் ஆற்றலைப் பாதுகாக்கும்.

அசோகா மரம்

அசோகா( saraca asoca). அசோக மரத்தின் மலர் இந்திய மாநிலமான ஒடிசாவின் மாநில மலர் ஆகும். (இது நமது பாடப்புத்தகத்தில் படிக்கும் அசோகர் மரங்களை நட்டார் என்னும் அந்த நெட்டிலிங்க மரங்கள் அல்ல) இங்குப் படத்தில் இருப்பதே உண்மையான அசோக மரங்கள். பெண்களுக்குக் குழந்தை பிறந்து, நான்கு மாதம் ஆகியும் கர்ப்பப்பை சுருங்காது. கர்ப்பப்பை சுருங்குவதற்கு அற்புதமான மருந்து ‘அசோகாஅரிஸ்டம், அசோகாதிவடி, அசோகப்பட்டை பொடி’. இந்த பெயர்களில் அசோக மரத்தின் பட்டையை மருந்தாக நாட்டு மருந்துக் கடைகளிலிருந்து பெறலாம்.

கர்ப்பப்பையை பலமாக்கும் இதர மூலிகைகள் பட்டியல் (Uterine Tonic Herbs):

  • கல்யாண முருங்கை
  • ஆடாதொடை
  • அசோகா
  • அரசு
  • ஆலம் விழுது (சமூலம்)
  • இலந்தை
  • இலங்கழற்சிப் பருப்பு
  • மருதாணி
  • கற்றாழை
  • வெள்ளறுகு
  • மலைவேம்பு
  • பிரண்டை
  • சதாவரி

இவையாவும் கர்ப்பப்பையில் இருக்கும் குற்றங்களை நீக்கக் கூடியவை. இந்த மூலிகைகளை எல்லாம் பக்குவமாக முறையாக உட்கொள்ளும் பொழுது பல கருப்பைச் சார்ந்த பிணிகள் (Hormonal imbalance, PCOD, Fibroid, Thyroid, Menorrhagia, irregular periods ) நீங்கும்.

இத்தகைய பல சிறப்பான, எளிமையான அதே சமயம் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான பல அரிய குறிப்புகளைக் கொடுத்த நமது ஜகத்குரு ஐயா அவர்களுக்கு  நன்றிகளும் வணக்கங்களும். ஐயா அவர்கள் கூறும் அருள் மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.

தகவல்கள் பகிர்ந்தமைக்கு தயவு திரு.ஜகத்குரு ஐயா அவர்களுக்கு நன்றி.

– தயவுடன் தனிப்பெருங்கருணைக் குழு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top