தொடர்ச்சிப் பகுதி – 5
அன்பு தனிப்பெருங்கருணை மாத இதழ் வாசக அன்பர்களுக்கு வந்தனம்!
சுத்த சன்மார்க்கத்தின் ஒப்பற்ற பெரிய தயவுடைய பேரறிவின் ஒட்டுமொத்த நிறை அறிவு வெளிப்பாடு திருவருட்பெருஞ்ஜோதி அகவல் ஆகும்.
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
மணி முடி விளக்கம் : அகவல் உரை
அகண்ட பேரொளியான அருட்பெருஞ்ஜோதி, எங்கும் பரிபூரணமாய் இருந்து கொண்டு யாவுமாய் தோற்றி விளங்குகின்ற போதிலும், எவ்விடத்தும் கண்டு கொள்ளப்படாது இருந்து, அருளறிவு மனிதனின் திருவுள்ளத்தில் திருவருளால்தான் கண்டு கொள்ளப்படுகின்றது. உள்ளமாகிய சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி காட்சித் தோற்றமாகி நிலையாக அமர்ந்து விளங்குவதோடு, அருளால் இறப்பு அச்சத்தை முழுதும் போக்கி அடைக்கலம் அளித்துள்ளது.
ஒரு ஆன்மா “பரிபாகம்” அடைவதற்கு இருள், மருள், அருள் என்று மூன்று வித நிலை வேண்டியுள்ளது. ஐம்புலன்கள் அறிவு மட்டும் கொண்டு ஆன்மாக்கள் இருள் நிலையில் உள்ளவை. அப்பிறவிகள் யாவும் கடந்து, மனிதப் பிறப்பு அடைந்து, மன அறிவு கொண்டு விளங்கு நிலையே மருள் நிலை.
மனோ பகுத்தறிவு அன்பினால் நிரம்பி, பக்குவப் படப்பட, அறிவு ஒளி அதிகரிக்கும். இந்த அறிவினால் ஆன்ம உண்மையும், கடவுள் ஞானமும் வெளிப்படும். கடவுளின் இயல் உண்மை பெருந்தன்மையே “அருள் நிலை”. வள்ளல் பெருமான் அவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு, மருள் மயக்கத்தை ஒழித்து, மாயாக் கன்ம செயல்கள் யாவும் அருளொளியின் காரியமாகக் காணச் செய்து, சிறந்த வரம் யாவும் வழங்கி, குறைகள் தீர்த்து , அருளமுதம் ஊட்டப்பெற்று பேரின்பப் பெருவாழ்வு அருளப் பெறுகின்றார். வள்ளல் பெருமான் பெற்ற அருட்பேருக்கு, ஆழி என்கின்ற சொல் அணியாகின்றது. ஆழி என்ற சொல் மோதிரம், சக்கரம், கடல் எனப் பொருள்படுகின்றது. தாம் பெற்ற அருள் பேற்றால் ஆண்டவர் ஆணை ஏற்று இவ்வுலகை அருளரசு ஆட்சி செய்வதால் சக்கரம் என்ற சின்னமானது. ஒப்பற்ற பெரிய தயவு உடைய பேரறிவாளர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால், மரணம் இல்லாப் பேரின்ப பெருவாழ்வு வழங்கப் பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், ஆண்டவருடைய பேரருளையும், பெரும் சிறப்பையும் வாழிநின் பேரருள் ! வாழிநின் பெருஞ்சீர் ! என்று வாழ்த்துகின்றார் வள்ளல் பெருமானார்.
புறத்தில் சிறிதும் எவ்வகையிலும் விளங்குவதற்கு இல்லாத ஆன்ம சிற்றணு வடிவினனாய் இருந்த இச்சிறியேனையும், ஒரு பொருள் என மதித்து, பொருட்படுத்தி என் உளத்தே பிரியாது வீற்றிருந்து உண்டு, அடியேனை இவ்வுலகு அறிய வருவித்தற்காக ஓர் அன்னையும் ஓர் அப்பனுமாய் புறத்தே தோற்றிக் கூடி அடியேற்கு இம்மனித உடல் ஏற்பட உதவினாய்.
உலகில் தோற்றிய சிறியேனுக்கு, உலகியலில் சிறிதும் மனம் பதியா வண்ணம் நினது அளப்பரிய திருவருளால் உண்மையை அறியச் செய்தாய். அதனால் புலன்கள் இழுத்த இழுப்பினும், மனம்போன போக்கிலும் செல்லாது, அருட்பெரும் வழியில் செல்ல, மனதிற்கு ஆற்றலும் தந்தாய்.
திருவருளால் நல்ல அறிவு விளங்கியது. அறிவு கொண்டு அதற்குத்தக வாழ்வும் அதன்மேல் மரணமிலாது வாழ்வும், சரியான மார்க்கத்தை, உளத்தில் தெளிவுபடுத்தி, உண்மையான அருள் ஒளி விளங்கச் செய்தாய். அருள் அறிவாலே அறிதற்கு அரிய சாகாக் கல்வியின் உண்மை இன்னது என்று உணர்த்தினாய். உடலை விட்டு ஆன்மா நிலையுறுவதே சாகாக் கல்வி என்று முன்னோர் கண்டிருந்த கருத்து தவறானது என்பதைத் தெளிவுபடுத்தி, திருவருளாலே அழியா அகநிலை நின்று அனக வாழ்வு கொள்ளலால்
உடலும் அழியாது விளங்கும் என்று போதித்தாய். அவ்வழியாமையிலும் துன்பம் நேர்ந்து, அதனால் அழியாமையும் தவறோ எனப் பிரண்டு போகாது இருக்க, மென்மேலும் அன்பை விளைவித்துக் கொண்டே உள்ளாய். அவ் அன்பின் விளைவால் அருளொளி ஏற்பட்டு சாதா இன்பம் பெருகிக் கொண்டுள்ளது. அந்த இன்ப நிறைவிலே நான், நீ என்ற இருநிலை ஒரு நிலையாகிட வள்ளல் பெருமானை ஆண்டவர் அருள்ஞானியாகச் செய்தார். அப்படி ஓர் உருவாகிய வள்ளல் பெருமான், அன்பு அறிவோடு கதியெல்லாம் மிகச் சிறப்பாகச் செய்திட அருள் செய்தாய்.
அருள் பக்குவமும் உண்டான போது உயிர் மறைவதும் இல்லை. உடம்பு அழிவதும் இல்லை. இது நித்திய ஜீவ நிலை. இந்த நித்திய வாழ்வு நிலை ஏற்படுவதற்கு அருள் எனும் அமுதத்தைப் புகட்டி விட்டாய். அருள் நிலை என்னும் மாற்றமும் மறைவும் இல்லாத பெருநிலையில் ஏற்றி வைத்துள்ளாய். இந்த வாழ்வு நிலை தான் பேரருள் அனுபவ ஞானம் என்று மொழியப்படுவது.
சாதாரண உபாய ஞானத்தால், அறிவு அரிதாயும் உண்மை ஞானத்தாலே அறிந்து கொண்டதன்படி வாழ்வில் ஏற்கப்பட்டதாயும் உள்ளதான அருளறிவு அளித்தாய். நீங்குதல் இல்லாமல் வளர்கின்ற தன்மை உடைய அருட்பெருஞ்ஜோதி , பண்டு தொட்டு அகத்தே அருளாக நிலைத்து இருந்து கொண்டு, புறத்தே ஜோதியைத் தன் ஆணைப்படி வேண்டிய வேண்டியாங்கு பலப் பல பொருட்களாயும், ஆற்றல்களாயும், அறிவு அனுபவங்களாயும் உருவாக்கியும் நீக்கிக் கொண்டுள்ளது. இத்தன்மைக்கான
“அருட்பெருஞ்ஜோதியே! வெல்க நின் பேரருள்! வெல்க நின் பெருஞ்சீர்! “
எனப் போற்றுகின்றார் வள்ளல் பெருமானார். – தொடரும்..
நன்றி!
தயவுடன் ஐயன் சேது

