படிப்படியாய் சன்மார்க்கம் அறிவோம் Oct – 2025

Step by Step into Sanmargam

தயவு மு. முத்துஜோதி
வள்ளலார் அறநிலையம், பெண்ணாடம்.

வள்ளலார் அறநிலையம், பெண்ணாடம்.

சென்ற இதழின் தொடர்ச்சி…

பஞ்சபூதங்களைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம்.

தயவு சண்முகநாதன் என்ற மாணவரின் சந்தேகம். 36 தத்துவங்களில் உள்ள ஐம்பூதத்தில் ஒன்றான காற்று என்பதும் 60 தாத்வீகத்தில் வரும் பிராணன் என்பதும் ஒன்றா வேறா?

ஐம்பூத தத்துவத்தில் வரும் காற்று பருப்பொருள், அதாவது தூலப் பொருள். தாத்வீகத்தில் வரும் தசவாயுக்கள் என்பன ஆற்றல்கள், பருப்பொருள் அல்ல. இது அடிப்படையான புரிதல்.

அதுபோல, தசவாயுக்களில் வரும் பிராணன் என்பது, பருப்பொருளான பிராண வாயு (oxygen) அல்ல. பிராண வாயு என்ற ஆக்சிஜன், தூலப் பொருளான காற்றின் ஒரு கூறு.

ஆனால், தசவாயுக்களில் வரும் பிராண சக்தி என்பது மற்ற ஒன்பது வாயுக்களை இயக்கும் ஒரு ஆற்றல் (energy).

பேச்சு வழக்கில், “என் குழந்தை என் பிராணனை வாங்குகிறான்” என்றால் பிராண வாயுவை (ஆக்சிஜனை) வாங்குவதாகப் பொருள் இல்லை. நம் சக்தியை விரயமாக்குவதாகப் பொருள் கொள்ள வேண்டும்.

இதை நாம் இக்கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐம்பூதத்தில் வரும் காற்று தத்துவமே. அந்த காற்று உடலில் உயிரை இயக்கும் ஆற்றலாக இருக்கும்போது பிராணன் என்ற துணைத் தத்துவமாக அதாவது தாத்வீகமாக மாறுகிறது. ஆன்மா உடலில் ஜீவிக்கிறபோது ஜீவன் அல்லது உயிர் என்பது போல, மேற்கண்ட கேள்வியை அணுக வேண்டும்

உடம்பு காலினால் (கால் = காற்று ) கட்டப்பட்டுள்ளது. உடலில் காற்று இயங்கும்போது பிராணன் என்று பெயர். பிராணன் தான் மட்டும் இயங்காது மீதம் உள்ள ஒன்பது காற்றையும் இயக்குகிறது.

1. பிராணன் = இடகலை & பிங்கலை வழியாக உயிரை இயக்குவது.
2. அபானன் = மலம் சிறுநீர் வெளியேற்றுவது.
3. உதானன் = நீர், உணவு விழுங்குதல். தொண்டை வழியாக மேலும் எழுத்து ஒலியைப் பிறப்பிக்க உதவுவது. பிராணன் அளவைக் கட்டுப்படுத்துவது.
4. வியானன் = இரத்தம் ஓட்டம், இதயம் தொடர்பானது.
5. சமானன்  = அறுசுவையை எழுவகை நாடிகளுக்குக் கொண்டு செல்வது.
6. கூர்மன்  = இமைப்பு, விழிப்பு, உறக்கம், உணர்ச்சி தொடர்பானது.
7. நாகன் = விக்கல், கோழை என வேண்டாத பொருளை வெளியேற்றவது.
8. திருதரன் = சினத்தை உண்டு பண்ணுவது.
9. தேவதத்தன் = வளர்சிதை மாற்றம் தொடர்பானது.
10. தனஞ்செயன் = உடலை அழியாமல் காக்க உதவி செய்வது.

குறிப்பாகப் பிராணன் மற்ற நாடிகளை இயக்குகிறது இதுவே மூலக் காற்று. உதாரணமாகப் பிராணன் இடகலை(இடது நாசி) 5 நாழிகை மேலே ஏறி செல்கையில் ஐம்பூதங்களில் குறிப்பிட்ட கால அளவில் மிகுந்து இருப்பதை நம் ஆன்றோர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.

மண் 36 நிமிடங்கள், நீர் 30 நிமிடங்கள், தீ 24 நிமிடங்கள், காற்று 18 நிமிடங்கள், வெளி 12 நிமிடங்கள். ஆக மொத்தம் 2 மணி நேரம். பிராண சுவாசத்தில் இந்த பூதங்களின் மாறுபாடு, அது தொடர்பான நோயை உண்டு பண்ணும்.

தொடர்ந்து சிந்திப்போம் ….

தொகுப்பு தயவுடன் திருமுருகன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top