-தயவு வள்ளல் அடிமை சதுரகிரி ஹேமசுஜாதா அம்மா.
பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது?
சென்ற இதழ் தொடர்ச்சி…
உள்ளே நியதி அளவால் அளக்கப்படாதார்கள்:
நியதி என்னும் உணர்வு நிலை தத்துவம் (மால் தத்துவம் – அசுத்தா சுத்த தத்துவம்) பிராரப்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்க வேண்டிய நல்வினை மற்றும் தீவினைகளை அவ்வான்மாவின் அறிவுக்கு உணர்த்தி அதை நோக்கிச் செலுத்த வைக்கும். முற்பிறவியில் செய்யும் வினைக்கு ஏற்ற கர்மாக்களை கடவுளாகிய அரசன் ஆணையாக எழுதியுள்ளான். அவ்வரச ஆணைக்குக் கீழ்ப்படிந்து செவ்வனே இப்பிறவியில் ஆன்மாவை உணர்வால் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகளை நோக்கிச் செலுத்தி அனுபவங்களைப் பெறக் காரணமாய் இருப்பது இந்த நியதி தத்துவமேயாம். நோய்கள் வருவதும் அதற்கு ஏற்ப உடல் உள்ளுறுப்புகளின் இயக்கங்களில் மாறுதல்கள் ஏற்படுவதும், அதை நோக்கிச் செல்லும் பொருட்டு உணவு மற்றும் பழக்க வழக்கங்களையும் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் செய்து வைப்பது இந்த நியதி தத்துவமேயாம்.
உதாரணமாக, சர்க்கரை நோய் 40 வயதில் வரவேண்டுமெனில் அதற்கான அசுத்த மலத்தைப் புளிப்பு, காரம் மற்றும் இனிப்புக் கூட்டி உண்ணுதல், வேத விரோத ஆகாரப் புசிப்பு (மாமிசம், மது, புகை, போதை வஸ்துக்கள்) (வேத என்றால் சிவத்துடன் கூடி ஆன்மா துரியாதீதத்தில் உடலின் தேவையைக் கடந்து ஒரு வாழ்வு- இன்ப வாழ்வு வாழும் முறையாம். அதற்கு எதிரிடை ஆகாரம் இவையாம். இவை மிகுந்த அசுத்த மலத்தைச் சேர்த்து விடும்போது, ஆன்மாவால் துரியாதீதம் இயல்பாகச் செல்ல இயலாது. பயம், மூச்சுத்திணறல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். மீண்டும் உடலுள் நினைத்தாலும் புக முடியாது போகும். அசுத்த துரியாதீதமே மரணத்திற்கு வழிவகுக்கும்.) ஆகிய வழக்கங்கள், அதிக நேரம் உறங்குதல், காலையில் உதயாதியில் உறங்குதல், உடலுக்கு எவ்வித உடற்பயிற்சியுமில்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் ஆகியவை நோய்க்கு வழி வகுக்கின்றன. இவற்றை நியதியினாலேயே ஒருவர் தவறாது கடைப்பிடித்து நோயை உடலில் உண்டு பண்ணுகிறார். இத்தகைய நியதி அளவால் பேரின்ப வாழ்வு எனும் இறைக்கலப்போடு கூடிய வாழ்வு வாழ்பவர் அளக்கப்படார்.
புறத்தே அவரது திருமேனி நியதியால் வரைபடாது:
வெளியே தெரியும் அவரது தேகமும் அந்நியதி தத்துவத்தில் எல்லைக்குட்பட்டதாக இராது. நியதியால் அதனைக் கட்டுப்படுத்த இயலாது. இறைக்கலப்பில் இருக்கும் ஆன்மா சுத்த அவத்தையையும் கடந்து விடுவதால், ஆகாமியக் கர்மம் ஒட்டாததோடு உலக மாயையைச் சார்ந்து இராது என்பதால் மிக உயர்ந்த நிலைக்குச் சென்று விடுகிறது. உடலை அழிப்பதுமில்லை. “அருளாட்சி” என்கிறார் வள்ளல் பெருமானார். உடலை அழியாத நிலைக்கு இட்டுச் செல்லுவதையே “அருட்ஜோதி ஆனேன்’ அருளாட்சி பெற்றேன்” என்கிறார். அவ்வான்மா உடல் அழியாததோடு, அருளால் பழைய இறந்தவைகளும் புதுப்பித்துக் கொடுக்கப்படுகின்றன. ஆன்மா அருள் தொடர்பால் அறிவு கூடி அருட்ஜோதி ஆகிறது.
அன்றி, கலை, வித்தை, ராகம், புருடன் முதலிய மற்றைய தத்துவங்களும் தத்துவ காரியங்களும் அவர்களுக்கு இல்லை:
கலை -ஆணவத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவுக்குக் கிரியை (செயல்) எழுப்பும்.
வித்தை-(நினைப்பு) ஆன்மாவுக்கு ஞானத்தை எழுப்பும்
அராகம்-(விருப்பு) ஆன்மாவிற்கு இச்சையை எழுப்பும்.
புருடன்-(மகன்) ஆக மேற்கண்ட அஞ்சுடன் 5 விஷ்ணு தத்துவம்
(பஞ்ச கஞ்சகம் = காலம், நியதி, கலை, வித்தை, அராகம்) கூடிப்
புலனுக்கு அமரும் இடம்.
போன்ற பிற மாலோன் தத்துவங்கள் சுத்தா, அசுத்தத் தத்துவங்கள் – உணர்வு நிலைத் தத்துவங்களின் தாக்கம் அவர்களுக்கு எண்ணங்களாக மாறித் தாக்காது விடும். ஆகவே, இத்தத்துவங்களும், அவற்றின் காரியங்களாகிய உணர்வுகளும் (பயம், சோகம், துக்கம், மாயை இன்பம், வெறுப்பு ஆகியவை) அவர்களுக்கு கிடையாது.
தொடரும்…
தயவு ஹேமசுஜாதா அம்மா
சுந்தர மகாலிங்கம் சித்த மருத்துவமனை,
சித்தி வளாகம் தாணிப்பாறை, சதுரகிரி

