மரணம் வென்ற வாழ்வு

மு.முத்து ஜோதி நிறுவனத் தலைவர் வள்ளலார் அறநிலையம் பெண்ணாடம்.

மரண பயம்:
மரணம் என்பது மனித வாழ்வு என்ற நாடகத்தின் இறுதிக்காட்சி. “ரசித்துப் பார்த்த நாடகம் முடியப் போகிறதே, இன்னும் சிறிது நேரம் இருக்கக் கூடாதா” என்று இறுதிக்காட்சிக்கு மனம் வெதும்புவாரும் உண்டு.
“இது நாடகம் தானே, எப்போது இருந்தாலும் முடிந்துதானே ஆக வேண்டும் “என்று மனந்தெளிவாரும் உண்டு. மரணத்தை மனிதர்கள் நோக்குவதும் அப்படித்தான். பெரும்பாலும் மரணத்தை வெறுப்பவர்களே உலகில் அதிகம்.
வயதானவர்கள் தம்மை பார்க்க வருவோரிடம் “இன்னும் நாள் வரலை. சீக்கிரம் பகவான் கூப்பிட்டுக்கிட்டான்னா தேவலை” என்பார்கள். ஆனால், அன்று மாலையே சற்று காய்ச்சல் கண்டாலோ மூச்சுமுட்டினாலோ அல்லோகலப்படுத்தி விடுவார்கள். “பையன்கள் சீக்கிரமா கவனிக்கலை, பெரிய மருத்துவரிடம் காட்டவில்லை” என்று அங்கலாய்ப்பார்கள். இது, மனித மனங்கள் மரணத்தை விரும்பாத இயற்கையான இயல்பை காட்டுகிறது.

மனிதன், தன் வாழ்க்கைப் பயணத்தில், தனக்கு சுடுகாடு நோக்கி இறுதிப் பயணம் ஒன்று இருக்கிறது என்பதை நினைவதே இல்லை. வீட்டைப் பற்றிய சிந்தனையோடு வாழ்ந்து முடிப்பான். இதைக் காட்டத் தான், வீட்டிலிருந்து பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது, தலையை வீட்டைப் பார்ப்பது போன்று படுக்க வைப்பார்கள்.
பாதி தூரம் போனபின் ஒரு இடத்திலே பிணத்தை கீழே வைப்பார்கள். வீட்டுத் தலைமகன் தோள்மேல் மண்ணினாலான தோண்டி ஒன்றை வைத்து, மூன்று முறை பிணத்தை வலம் வரச்செய்து ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துளை இட்டு, அதனுள் இருக்கும் தண்ணீர் வெளியே வருமாறு செய்வார்கள். மூன்றாம் சுற்றுக்குப்பின் அதை கீழே போட்டு உடைக்கச் செய்வார்கள்.

மனித உடல் இறப்பதற்கு அல்ல:
மண்ணாலான தோண்டி என்பது மனித உடலைக் காட்டுவது. மூன்று துளைகள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று ஆசைகளைக் காட்டுகின்றன. மூன்று துளைகள் வழி தோண்டியின் நீர் வெளியாகி வீணாகி தோண்டியே உடைபடுவதுபோல், இந்த மூன்று ஆசைகளால் உடலின் ஜீவசக்திகள் விரயமாகி இந்த உடலே மாண்டு போகிறது என்பதை செயல் விளக்கம் காட்டுகிறார்கள்.

மாண்டுபோன நிலைக்கு வந்ததால் காட்டை நினையாமல் வீட்டையே பார்த்து வந்த பிணத்தின் முகத்தை அந்த இடத்திலிருந்து சுடுகாட்டை நோக்கிப் பார்க்குமாறு பாடையின் திசையை மாற்றுவார்கள். சுடுகாட்டை மனிதன் காணவேண்டிய உண்மையை விளக்கிய அந்த இடத்தை, உண்மைக்குப் பெயர் பெற்ற அரிச்சந்திரன் கட்டம் என்பார்கள்.
இந்த சடங்கைச் செய்யும் தலைமகன், இறந்துபோன தன் தந்தையைப்போல் தன் தேகத்தை விட்டு விடுகிற இந்த அவல முடிவை தானும் பெறக்கூடாது என்பதற்காகத்தான், தோண்டியை பின்புறமாக தரைமேல் விட்டு விட்டு திரும்பி பார்க்காமல் போகச் சொல்லுவார்கள். இதன் பொருள் என்ன? மனித தேகம் விடுவதற்காக வந்தது அல்ல என்ற உண்மை அல்லவா?

ஒரு சித்தரின் பார்வை:
பழந்தமிழர் கடுவெளி சித்தர் பாடல் ஒன்று, மண்ணாலான தோண்டி போன்ற இந்த தேகத்தை உடைத்து விடுதலை மனம் வருந்திச் சொல்வதைப்
பாருங்கள்,
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி – மெத்தக் கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
நாலாறு மாதமாய் என்பது நாலும் ஆறும் சேர்ந்த 10 மாதம் தாய் வயிற்றில் குழந்தை இருந்து வந்தது. குயவன்தான் நம் பரமன். அவனை பலவேறு பிறவிகளாய் வேண்டிப் பெற்றது இந்த மனித தேகம். இந்த அரிய தேகத்தை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மூவாசையில் போட்டுடைக்கின்றோமே என்று எடுத்துரைக்கிறது இப்பாடல்.
தவறி விட்டார்:
இதை அடுத்த தலைமுறையாகிய இறந்தவரது மகனாவது இறக்காமல் இருக்க வேண்டுமே என எதிர்பார்த்தனர் நம் முன்னோர். தேகத்தை விடக்கூடாது என்பதே நம் முன்னோர் கொடுக்கும் செய்தி. இது பற்றியே ஒரு வழக்கு வழங்குகிறது. ஒருவர் இறந்துபோய் புதைக்கப்பட்டபின், அவர் இறந்தது தெரியாமல் அவரைத் தேடி வருவோரிடம் நாம் என்ன சொல்கிறோம்.
“அடடா, அவர் தவறிவிட்டார் ஐயா” என்கிறோம். எதைத் தவறி விட்டார்?
இதற்கு வேறு பதில் இருக்கிறதா? தேகம் பெற்றது, விடுவதற்காக அல்ல என்ற சத்தியத்திலிருந்து அவர் தவறிவிட்டார். அரிதாகப் பெற்ற மானிட
தேகத்தை காப்பாற்றிக்கொள்ள அவர் தவறிவிட்டார்.

அப்பரடிகள் விண்ணப்பம்:
ஆக பெற்ற நம் தேகத்தை மண்ணுக்கோ, நெருப்புக்கோ, நீருக்கோ விடாது இருத்தலே மனித வாழ்வின் மகோன்னதம் இருக்கிறது என்பது சித்தர்கள் காட்டியப் பெருநிலை.
அப்பரடிகள் முதலிய நால்வர் பெருமக்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வியலும் அதுதான்.
நாம் செல்ல வேண்டிய பாதையும் அதுதான் என்பதைக் காட்டவே, “நாலுபேர் போன வழியே போ” என்ற சொல்வழக்கு நிலவுகிறது.
அப்பரடிகள் மரணமிலாப் பெருவாழ்வை விண்ணப்பித்து பெற்றது பெண்ணாடம் என்னும் பெரும்பதியில்தான். அன்று கடந்தை என்று அழைக்கப் பெற்ற இன்றைய பெண்ணாடத்து சுடர்க்கொழுந்து ஈசனுக்கு இவ்வாறு விண்ணப்பிக்கின்றார் திருநாவுக்கரசரெனும் அப்பர் பெருமான்.

“பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்ளூ போற்றிசெய்யும் என் ஆவி காப்பதற்கு இச்சையுண்டேல், இருங்கூற்று அகல மின்னார் மூவிசைச் சூலம் என்மேல் பொறி! மேவுகொண்டல் துன்னார்க் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!” கூற்றுவன் என்பவன் உடல்வேறு உயிர்வேறாக கூறுபோடுபவன்,
அதனால்தான் அவனுக்குக் கூற்றுவன் எனப்பெயர். அவன் அவ்வாறு கூறு செய்யாமல் அகன்றுபோக வேண்டும். அவ்வாறு செய்ததின் அடையாளமாக, மூன்று இலைகளையுடைய சூலக்குறியை தன்மேல் பொறித்துக் காட்டச் சொல்லி சுடர்க்கொழுந்து நாதனை விண்ணப்பிக்கின்றார். இறைவனும் அவ்வாறே செய்து அருளினான் என்பதால்தான் திருப்புகலூர் பதியில் அப்பரடிகள் பலர் முன் உடலோடு மறைந்து விடுகிறார். ஆதலால் அவருக்கு சமாதி இல்லை. மாணிக்கவாசகரும் தில்லையம்பதியில் உடலோடு மறைகிறார். அவருக்கும் சமாதியில்லை. அவ்வாறேதான் சுந்தரரும் ஞானசம்பந்தரும். அவர்களுக்கெல்லாம் பட்டினத்தாருக்கு உள்ளது போன்றோ தாயுமானவருக்கு உள்ளது போன்றோ உடலை வைத்ததற்கு அடையாளமாக சமாதிகள் இல்லை.

மரணம் வென்ற வாழ்வு:
மரணம் என்பது உடலை மண் மேல் விட்டுவிட்டு உயிர் பிரிவதுதான்.
அவ்வாறு உடலை நீத்தால் அவர்க்கு மறு பிறவி உண்டு என்கிறது சைவசித்தாந்தம். இறந்தது பிறக்கும்ளூ பிறக்கும் என்பது அதன் முடிவு.
இவ்வாறு பிறந்து பிறந்து இளைக்கும் பிறவி சுழற்சிக்கு தீர்வு காணத்தான் பிறவாமை வேண்டும் என்கிறது நம் சமயம். பிறவாது இருக்க இறவாது இருக்க வேண்டும் அல்லவா?
ஆகையினால்தான், பிறவாமைக்கு, இறவாமையே வழி என்று நம் ஆன்றோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தெளிந்து செய்தும் காட்டினார்கள். அதையே நால்வரும் காட்டினார்கள்.

அந்த வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் தானொருவராக வந்த வடலூர் இராமலிங்க அடிகள் என்னும் திருவருட்பிரகாச வள்ளலார் மெய்ப்பித்துக் காட்டினார்கள். இந்த இறவாமையே அவர்கள் மரணமிலாப் பெரு வாழ்வு எனத்திருவாய் மலர்ந்தார்கள்.
இறவாமை என்பது, கூற்றுவன் கூறுபோடும் இந்த உடலுக்குத்தானே அன்றி ஆன்மாவுக்கு இல்லை. ஏனெனில், ஆன்மா என்பது என்றுமே அழியாத இறைவனைப் போன்ற அனாதிப்பொருள். “பதியினைப் போல் பசு பாசம் அநாதி” என்கிறது திருமந்திரம். எனவே, என்றுமே அழியாத ஆன்மாவிற்கு மரணமிலாப் பெருவாழ்வை நாம் நாடிப் பெற வேண்டுவதில்லை.

மரணமில்லாத பெருநிலையை மாண்டுபோகிற இந்த உடல்தான் பெறவேண்டும் என்பதை ஐயமற சொல்ல வந்த வள்ளற்பெருமான், “பொத்திய மலப்பிணி புழுக்குரம்பைதான் சித்தியல் சுத்த சன்மார்க்க சேர்ப்பினால் நித்தியம் ஆகி நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்துளீர்களே” என்பார்.
எந்த தேகத்தில் – அதாவது குரம்பையில் மலமும் பிணியும் புழுவும் சேர்ந்து உள்ளதோ, அது நித்தியமாகி அழியாது நிற்கும் என்கிறார். ஓவுறாது துயர் செய்யும் உடம்புதான் சாவுறாது வாழும் என்பார் பெருமான்.

இங்கே, ஓர் கற்பனை ஐயம் தோன்றும். மனிதர் எண்ணிக்கைப் பெருகிக் கொண்டேவரும் இந்நாளில் பிறந்தவர் இறக்காமலே போனால் பூமி கொள்ளுமா என்பதே அந்த ஐயப்பாடு.
இறாவா நிலையின் இருப்பு பற்றி அறிந்தவர்களுக்குள் இக்கேள்வி எழாது.
ஓர் உண்மையை நாம் உணர்தல் வேண்டும். நாம் இப்போது உண்டு உறங்கி சல்லாபிக்கிற இந்த நிலையோடு இருந்தால் இந்த உடம்பு எந்த கணத்திலும் மாண்டுபோகும்.
இதைத்தான் “வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு” என்கிறார் வள்ளலார். வரு கணம் அதாவது அடுத்தக் கணம் அல்லது நொடி வாழுமா விழுமா என்று சொல்ல முடியாத நிலையற்ற தேகம் நாம் இப்போது பெற்றிருக்கிற தேகம்.
இதைத்தான் வேறொரு சித்தர் “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்தப் பையடா” என்றார்.

நாம் தற்போது வைத்திருக்கிற உடல் அசுத்த தேகமாகும். சதா மலம் வழியும் வாசல். கண்ணிலே பீளை, மூக்கிலே சளி: வாயிலே ஊத்தை, காதிலே குறும்பி, மெய்யிலே அழுக்கு, இப்படி ஐந்து பொறிகளிலும் ஐயருவிபோல் மலப்பொழியல். மனம் என்னும் கருவியிலோ மூவாசை என்னும் மலம். எனவே, இது அழியக் கூடிய பொய் உடல் ஆயிற்று. ஆனால், இதை அழியாத நிலைக்கு கொண்டுவர முடியும். கொண்டுவர வேண்டும் என்பதால்தான் நம் ஆன்றோர்கள் இந்த உடலுக்கு ‘மெய்’ என்று பெயர் வைத்தார்கள்.
காயமே இது பொய்யடா என்ற பெரியோரே இப்பொய் உடலுக்கு “மெய்” என்று பெயர் வைத்த நுட்பத்தை எவ்வாறு புகழ்வது?

தமிழ்மொழி சாகாக்கலையை லேசில் தெரிவிக்கும் மொழி என்பார் வள்ளலார். உயிர் எழுத்து, மெய் (உடல் எழுத்து), ஆயுத எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகியன பற்றிய சிந்தனையே மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய விளக்கம் என்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.
தமிழ் மெய்யியலை தொல்காப்பியர் அடிப்படையில் பிரிதொரு சூழலில் சிந்திப்போம்.
வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு, உயிர் எழுத்து மெய் எழுத்து என்று பெயர் வைத்ததுதான்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்தால்தான், ‘உயிர்மெய்’ எழுத்து தோன்றி தமிழ் இயங்க முடியும். க்+அஸ்ரீ க என்பது போல 216 உயிர்மெய் எழுத்துக்களால் தமிழ் இயங்குகிறது.
அதுபோல நம் உயிரும் நம் மெய்யும் (உடலும்) இணைந்தால்தான் நம் வாழ்வு இயங்க முடியும்.
என்னே நுட்பம் தமிழ் எழுத்து பெயரிலேயே!
ஆக மரணத்தை வென்ற வாழ்வு என்பதே தமிழனுடைய அடிப்படை கொள்கையாகும். ஆகையால்தான், வள்ளற்பெருமான் தமிழ், சாகாக்கலையை லேசில் தெரிவிக்கிற மொழி என்றார்கள்.

தமிழை அறிவோம்!
சன்மார்க்கத்தை உணர்வோம்!
மரணத்தை வென்ற வாழ்வை நோக்கி பயணத்தைத் தொடர்வோம்.
-தயவுடன் மு.முத்து ஜோதி நிறுவனத் தலைவர் வள்ளலார் அறநிலையம் பெண்ணாடம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top