வள்ளலாரியம் Oct – 2025

அன்பும் கருணையும் தயவும் இரக்கமும் நிறைந்த நம்மவர்களுக்கு வள்ளலாரியம் என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். வள்ளலாரியம் என்பது ஒரு வாழ்வியல் முறை என்றும், இந்த வாழ்வியலை ஐந்து கூறுகளாகப் பிரித்தோம்.

1.தனி மனித வாழ்வியல்
2.சமூக வாழ்வியல்
3.இயற்கை சூழலியல்
4.உயிர்ம நேயம் (ஆன்மநேயம்)
5.இறையியல் (மெய்யியல்)

தனி மனித வாழ்வியல் :-  இதனை ஆறு பிரிவுகளாகப் பிரித்தோம்

1.உடல் நலம் பேணுதல்
2.மனநலம் பேணுதல்
3.உயிர் நலம் பேணுதல்
4.ஆன்ம நலம் பேணுதல்
5.துன்பம் வரும் முன் தடுத்துக்கொள்ளல்
6.இறைவனை இறுகப் பிடித்தல்

அவற்றில் உடல் நலம் பேணுதல் என்ற தலைப்பில் இந்த உடலை எவ்வாறு பேணலாம் என்பதைப்
பற்றித்
தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். உடல் நலம் பேணுதலின் தொடர்ச்சியாக…

1.பொற்றலைக் கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து, நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு வாரம் ஒருமுறை வெந்நீரில் முழுக வேண்டும். எண்ணெய் குளியல் உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் சூட்டால் வரும் நோய்களைத் தடுக்கிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, சருமத்தைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. உடல் சூட்டைக் குறைத்து கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். கூந்தல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் இது நன்மை பயக்கும். இது மன அமைதியையும், உடலுக்குப் புத்துணர்ச்சியையும் அளிக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கும், தும்மல் போடுவோருக்கும் ஏற்றது.

2. நான்கு மாதத்திற்கு ஒரு தரம், மருக்காரை முதலியவற்றால் அருந்தி வாந்தி எடுக்கவும். இது உடலில் கப தோஷத்தை நீக்கும். பொதுவாக மூச்சுக்குழாய், ஆஸ்துமா, தோலழற்சி மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற கப நோய்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

3. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கொருதரம், வெள்ளைக் காக்கட்டான் முதலானவைகளால் விரேசனம் (‘பேதி சிகிச்சை’) செய்தல் வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை, குறிப்பாகக் கல்லீரல், பித்தப்பை, மற்றும் குடலில் இருந்து வெளியேற்றும் ஒரு முறையாகும். இரைப்பைப் புண், எரிச்சல், மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவுகிறது. அரிப்பு, சொறி (psoriasis), மற்றும் தோல் அழற்சி போன்ற பித்த தோஷ நோய்களுக்கு இது சிறந்த சிகிச்சை. நீண்ட நாள் மலச்சிக்கலைச் சரிசெய்ய உதவுகிறது

4. ஒரு வருடத்திற்கு ஒருதரம், முள்ளி முதலானவைகளால் நசியஞ்செய்து கொள்ளல். நசியம் என்பது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறையாகும், இதில் மருந்து துளிகள், எண்ணெய் துளிகள் அல்லது சாறுகள் மூக்கினுள் செலுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சை மூக்கு மற்றும் தலைப்பகுதிகளைச் சுத்தம் செய்வதற்கும், கபம் (kapha) தோஷத்தை நீக்குவதற்கும், சைனஸ் தொந்தரவுகள், ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு போன்ற பல்வேறு உடல்நலப்
பிரச்சினைகளைச் சரி செய்வதற்கும் உதவுகிறது. கபம் (kapha) தோஷத்தை அகற்றி, மேல் உடலின் கபத்தை நீக்குகிறது. அடுக்கு தும்மல், அலர்ஜி, சைனஸ் தொந்தரவுகள், மூக்கடைப்பு, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மற்றும் ஆஸ்துமா போன்ற பல பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. நசியம் செய்யும் போது, மருந்து தொண்டைக்குள் சென்றால், உடனே துப்பி விட வேண்டும்.

5. நாலு நாளைக்கு ஒருதரம், அத்தி முதலியவற்றால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனந்தீட்டல்

அடுத்த இதழில் தொடர்ந்து சிந்திப்போம்…செயல்படுவோம்.

-தயவுடன் முருகேசன் தம்பிஐயன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top