அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 151-153)

அகவல்:151.கூற்றுதைத்து ஆற்றல் அளித்தது

அகவல்:152.அறிவறியா நாயினை யாண்டது

அகவல்:153. நாயினும் ஈயினும் தாழினும் அருள்வது

அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 151)

அகவல்:151.கூற்றுதைத்து ஆற்றல் அளித்தது
301.கூற்றுதைத் தென்பாற் குற்றமுங்குணங்கொண்
302.டாற்றன்மிக் களித்த அருட்பெருஞ்ஜோதி

(உ-வி) கூற்றை உதைத்தல் என்பது, மரணத்தையொழித்தல், இறப்பை நீக்குதல் என்றுபொருளாம். கூறு+உ=கூற்று, அதாவது உயிரையும்உடலையும் இருகூறாய்ப்பிரிப்பது; மரணம்தான் இப்படிப்பிரித்து விடுகின்றதால் கூற்றுவனாகக் கற்பனைசெய்துள்ளனர். மரணத்தை முற்றும் நீக்கிவிடுவது, இறப்பற்றுஇறவாமல் இருப்பது பற்றி இதுகாறும் எவ்வளவோமுயற்சிகள் செய்யப்பட்டுள்ளனவாம். அருட்பேராற்றல்பெற்றோரே. அதுகொண்டு இறப்பையொழித்தலும், மேற்கொண்டு, அற்புதச் சித்திச்செயல் புரிந்துகொண்டுஅளவு கடந்த நெடுங்காலம் வாழ்ந்து கொண்டிருக்கவும்முடியும் என்பதற்கு நம் வள்ளலாரே சான்றாக உள்ளார். பிறசிலர், சமாதி நிலையில், உயிர் ஒடுங்கிச்செயலற்றுக்கிடக்கின்றவர்கள், இறவாமல் இறந்துகிடக்கின்றவர்களேயாவர். சிலர், இறந்தபின் புகழ் உடம்பில்வாழ்வதாகக் கொள்ளப்படுகின்றனர். அவர்களும்உண்மையில் இறவாதவர்கள் அல்லர். மற்றுஞ் சிலரோ, உடற்பற்றற்று உள்ளுணர்வுடன் இருந்து அப்படியேமடிந்துபோகின்றனர். அவர்களை ஆண்டவர் திருவடியில்ஐக்கியமாகிவிட்டதாகவும், மேற்பிறவாநிலை எய்திவிட்டதாகவும், அந்நிலையே அவர்தம் அழியாநிலை என்றும்புகழப்படுகின்றனர்; அதுவும் மரணமில்லா நித்யானந்தவாழ்வு நிலை ஆகாது. இங்கு மரணத்தை வென்று, இறப்பாகியகண்டத்தையே மாற்றிவிட்டதாகக் கூறப்படும்மார்க்கண்டனைப்பற்றிய உண்மையைச் சற்று ஆய்ந்துபார்ப்போம்.


“மூலத்துவாரத்தே மூளும் ஒருவனை
மேலத்துவாரத்தே மேலுற நோக்கிமுற்
காலுற்ற காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக்கடவூர் நலமாய் இருந்ததே”. ​- என்றும்,
“மூலத்துவாரத்தே முக்கார மிட்டிரு
மேலத்துவாரத்தே மேன்மனம் வைத்திரு
வேலொத்த விழியை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கணக்கிது வாமே”.


என்னும் திருமந்திரச் செய்யுட்களால், ஒருவன் யோகஞானசக்தியால், பக்தியால் சிரநடு சிவலிங்க நிலையில்நிலைத்திருந்தால், சிவானந்தத்தில் மூழ்கிக்கிடக்கலாகும்; அப்போது முழுமதியின் பதினாறு கலைநிறை அமுதம்பொங்கிவழிந்து, மண்ணான உடலின் மயிற்கால்தோறும்நிரம்பிடுந்தருணம், அவ்வமுத சக்தியால் தேகம்அழியாநிலைபெற்று விடுகின்றதாம். இதுதான் உடல் அழியாஇறவாநிலையாம். இது பதினாறுகலைச்சந்திர சக்தியால்விளங்கலின் மாரகத்தை ஒழித்துவிட்ட மார்க்கண்டன்என்றும் பதினாறாண்டு கொண்டு விளங்கலானான் எனக்கூறப்பட்டுள்ளதாம். மேலும், அந்த சந்திரசக்தி, சிவனதுஇடப்பால் விளங்கும் சத்தி அம்சமாய் உள்ளதால், சிவன்தன்இடது காலால் எமனை உதைத்துத் துரத்திவிட்டார்என்றுள்ளனர். இதனால் யோக ஆற்றலால் உடல் அழியாதநிலையுறுதல் கூடும் என்பது குறிப்பாம். இதுவாஉண்மையில் மனிதன் பெறவேண்டிய மரணமில்லாவாழ்வுநிலை? அல்லவாம்.


சுத்த சன்மார்க்கத்தால் ஒருவன் தயவுமயமாகி, அகநின்று வாழத்தொடங்கினால் யோகமாதி சக்திகளால்எவ்விதத்தும் பெறற்கரிய, இறவா நிலையைப் பெற்றுக்கொள்வதோடு, அவனது குற்றம் குறை யாவையும், அருட்குண ஆற்றலாக மாற்றப்பெற்று அதனால்அருட்சித்தியுடன் கூடிய பெருவாழ்வு அடைகின்றான் என்பதுவள்ளல் மூலம் வெளியாக்கப்பட்டுள்ளதாம்.

அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 152)

அகவல்:152.அறிவறியா நாயினை யாண்டது
303.நன்றறி வறியா நாயினேன் றனையும்
304.அன்றுவந் தாண்ட அருட்பெருஞ்ஜோதி

(உ-வி) அறியாப்பருவம் என்பது, உயிர் வடிவில் புலன்உணர்வு ஏற்பட்டும், மன அறிவு பெறாத நிலை கீழ்ப்பிறவிஇனங்களாம். மனிதப்பிறவியில் அம் மனஅறிவு தோன்றியும், ஆன்மஞானமும் அருள்மெய்ஞ்ஞானமும் விளைவுகொள்ளாநிலைகளும் உண்மை அறியாப்பருவங்களேயாம். இங்கேகுறிக்கப்படுகின்ற அறியாப்பருவம் கடவுள் உண்மையைஉணர்ந்து கொள்ளாத காலத்தையே சுட்டுவதாம். இது, நன்றறிவறியா என்றதால் உய்த்துணரச்செய்யப்பட்டுள்ளதாம். எல்லோருக்கும்தான் அறிவுஇருக்கின்றது. ஆனால், நன்றாக நிறை அறிவாகவிளங்கும்போதுதான் ஒருவனை அவ்வறிவுடையோனாகக்கொள்ளமுடியும். அந் நல்லறிவாகிய கடவுள் ஞானம்ஏற்படாதவரை, ஒருவனுக்குத் தான் உடல்வடிவினனென்றேவிளங்குகின்றதாம். இத் தேகத்தின் பற்றோடு கூடியநிலைவிளக்கம் தூலபஞ்சாட்சர வடிவில் (நமசிவாய) நாயாகஇருக்கின்றது. இதனால் ஒருவன் தேகப்பற்றோடு கூடியஅபக்குவ நிலையில், திருச்சந்நிதி முன் குறையிரந்துவேண்டும்போது, தன்னை நாயேன், நாயினும் கடையேன்என்று தன் தாழ்மையான சிறுமை நிலையைக்கூறிக்கொள்ளுகின்றான். நாய்க்குக்கூட தன்தலைவனிடத்தில் நன்றி அறிதற்குணம் இருக்கின்றது, ஆனால் இந்த நாய் வண்ண மனிதனிடத்தில் அந்நன்றிக்குணம் கூட தோன்றவில்லையால், அவன் தன்னைநாயினும் கடையேன் என்று கூறிக்கொள்ளுவதில் பொய்இல்லையே!


மனிதப்பிறவி ஏற்ற ஆன்மாவுக்கு அருள்ஞானம்விளைவு பெறாமுன்னேயே சிற்றிளம் பருவத்திலேயே, உள்ளொளியின் செயல் சிறிது சிறிது வெளிப்படும்அடையாளமும், அற்புத நிகழ்ச்சிகளும் தோன்றஆரம்பிக்கின்றனவாம். ஆனால் அச்சிறு பிராயத்தில், அந்நிகழ்ச்சிகளின் கருத்தை உணர்ந்துகொள்ளமுடிகின்றதில்லை; பிற்காலத்தில் அந்த ஞானம்விளங்கும்போது, பழையனவற்றை மீண்டும் நினைவு கூர்ந்துபார்க்கும் தருணம்தான், அது இதன் முன்னோடி என்றேதெரியவரும். அப்படித்தான், அடிகளாரின் பிள்ளைப்பருவநிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தெய்வீக சம்பவங்களும், காட்சிஅனுபவங்களும், பிற்காலத்தில் அருள் ஞான விளக்கத்தால்நன்கு தெளிவாகியுள்ளனவாம். இதுதான் தனது அறியாப்பருவத்தே, நன்றறியாப் பருவத்தே வந்து அன்றே ஆண்டுகொண்டதாக இப்போது அறியப்படுகின்றது என்றுகுறித்துள்ளார். இவ்வுண்மை அறியவேண்டில்திருவருட்பாவை ஊன்றிப் படித்துணரும்போது அங்கங்குநிறைவிளக்கம் பெறலாம். பொதுவாக, எல்லாஆன்மாக்களும் இயற்கையிலே கடவுட் கலப்புடையதாய்இருக்கின்றன, வேறுவிதமாய்க் கூறின், கடவுளேதான்ஒவ்வொரு ஆன்மாவாய்த் திகழ்கின்றார் அகநிலைநின்றே. இந்த ஆன்மக் கடவுள் இயல் உண்மை எத்தனையோ கோடிகாலத்திற்குப் பின்னர்தான், மனித நிலையில்வெளியாகின்றது. என்று கடவுள் விளங்கத் தொடங்கினாரோஅன்றே முதல் அவர் மயமான மனிதனும், அக்கடவுள்நிலையில் இருந்து வருகின்றது உண்மையே. இதனையே, ‘அன்றே என்னை ஆட் கொண்டுள்ளாய்’ எனக்கண்டுரைக்கின்றார்.

அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 153)

அகவல்:153.நாயினும் ஈயினும் தாழினும் அருள்வது
305.நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன்
306.ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி


(உ-வி) மற்றெல்லாப் பிறவிகளிலும் சிறந்தது இம் மனிதப்பிறப்பு என்பர். ஒவ்வொரு பிறப்பிலும் கொள்ளத்தக்க சில விஷயங்களும், தள்ளற்கான சில விஷயங்களும் உள்ளனவாம். உண்மையைப் பகுத்தறிந்து நன்னெறியைக் கடைப் பிடித்தல் வேண்டும். ஆனால், கீழ்ப்பிறவிகளிலிருந்து வந்த மனிதன் முற்பிறவிகளின் நெடுநாளைய பழக்கத்தாலும், நல்லனவற்றில் முயற்சி மேற்கொள்ளாமையாலும், கேடுடைய சூழலால், அந்தக் கீழ்ப்பிறவிகளைவிட ஓரொரு சமயம் தாழ்ந்துபோய் விடுகின்றான். பின்னர்தான் தன் தவற்றை யுணர்ந்து நேர்வழியிற் திரும்பித் திருவருளை வேண்டினால், கருணைக் கடவுள் கைகொடுத்துதவுகின்றார். ஒருவன் செய்கின்ற சிறிய பெரிய குற்றங்களை எல்லாம், பொறுத்துக் கொள்ளுவதோடல்லாமல், அக்குற்றங்களைக் குணமாகக் கொண்டுவிடுகின்றாராம் ஆண்டவர். ஏன், எப்படிக் குற்றங்களைக் குணமாகக் கொள்ளுகின்றார் அந்தக் கடவுள்?

உண்மை இதுதான்: அகமிருந்து எவருமாய் விளங்குகின்றவரும், செயல்புரியச் செய்கின்றவரும், செயல் புரிகின்றவரும், அதன் பயனை அனுபவிக்கின்றவரும், அவரேதான் வேறு வேறு நிலைகளில், பக்குவத்தின் பொருட்டுத் தோற்றி நின்று விளங்குகின்றார் எனக் காண்கின்றோம். எல்லாம் அருட்பேரின்பானுபவம் உண்டாதற் பொருட்டே இவ்வுலகில் யாவும் கடவுள் திருவுளம் போல், அருள் நியதிப்படியே செயல்படுகின்றனவாம். ஒருவன் குற்றஞ்செய்துவிட்டுப், பின்னர்தான் குற்றஞ்செய்தது தவறு என்பதை நன்கு உணர்ந்து, திருந்தி மேல் வரவேண்டும் என்ற உண்மையான உள்ளத்தோடு மன்னிப்புக் கோரி வேண்டினால், அவன் மன்னிக்கப்படுகின்றான். கடவுள் மன்னிக்கின்றார். மன்னிக்கப்பட்ட பின்னர் மேலான திருவருள் நலனும் வழங்குகின்றார். எவ்வளவு பெரிய குற்றமானாலும், அதனைப் புரியச்செய்கின்றதும், அதற்காக தண்டிக்கின்றதும், மன்னிக்கின்றதும் அருள் அனுபவப் பக்குவம் உண்டாக்கவேயாம். ஒருவன், குற்றத்திற்காக மன்னிக்கப்பட்ட பின்னும், அதுமாதிரி குற்றத்தையோ, வேறுவிதக்குற்றத்தையோ மீண்டும் மீண்டும் செய்துகொண்டு போனாலும், ஆண்டவர் அப்போதப்போது அவனைத் தண்டித்துக் கொண்டும், மன்னித்துக்கொண்டும் தன் கண்காணிப்பில் வைத்துக்கொண்டேதான் இருக்கின்றார். எப்படியும், எப்போதாவது அவனைப் பக்குவப்படுத்தி நிறை அருள் இன்ப நிலைக்கு ஏற்றி வைக்கவேண்டுவதே அவரது திருவுள்ளமாம்.


“செய்தாலும், தீமையெல்லாம் பொறுத்தருள்வான் பொதுவில், திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்”. எனக்குறிக்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை. எங்கும் எவரும் அவரேயாக இருத்தலாலும், அவரது எச்செயலும் அடிப்படையில் பெருங்கருணையால் நிகழ்த்தப்படுகின்றதாலும் திருச்சந்நிதியில், திருவருள் முன்னிலையில் குற்றம் என்பது ஏது? எல்லாம் பெருங்குணச் செயலேயாம்! மனிதன் மாசுடைய மனக்கண்ணால் காணும்போதுதான் குற்றமும் குறையும் சூழக் காண்கின்றான். இவனே சுத்தமனம் அடைந்து திருவருளையே கண்ணாகக் கொண்டு சூழ நோக்கும்போது எங்கும் கடவுட்காட்சியையும், கடவுட் கருணைச் செயலையுமே காண்பான். ‘கருணையுஞ் சிவமும் பொருளெனக் காணும் காட்சியும் பெறுக’ என்கின்றார் ஓரிடத்தில்.


ஒருவன் இவ்வுலகில், கடைபட்ட நாயினும் கடையனாக இருந்தாலும் சரி, இழிவான ஈயினும் இழிந்தவனாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்டவனானாலும் சரி திருவருள் பெறற்கு உரிமையுடையவனே ஆவான். ஏனென்றால், கடையனாயும், இழியனாயும் மற்றெவனாயினும், புறத்தோற்றத்தில், குணத்தில் செயலில் வாழ்வில் எப்படி இருந்த போதிலும், அகத்தில் ஆன்ம சொரூபத்தில் உண்மை நிலையில் அருளின்ப வடிவினனாகவே இருந்துகொண்டும், அறியாது உழலுகின்றான், குற்றம் புரிகின்றான், முடிவில் திருந்தித் திருவருள் பெற்று உய்கின்றான்.

இங்கு குறிக்கப்பட்ட இவ்வடிகள், நம் அடிகளின் நிலையையா சுட்டுகின்றன? இல்லை என்றும், ஆம் என்றும் பதில் சொல்லலாம்! எப்படியெனில், இவர் அன்பும், அறிவும், ஒழுக்கமும், மற்ற பெருங்குண பெருங்செயலும் உடையவர் ஆதலின் தன்னை ‘நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன்’ என்று, வேண்டுமென்றே தாழ்மைப்படுத்திக் கூறிக் கொள்ளார் என அறியலாகும். பின்னர் ஏன் அப்படித் தன்னையே – தாழ்த்திக் கொள்ளும் விதத்தில் சொல்லியிருக்கின்றார் என்றால் இவர் அகவடிவிலிருக்கும் தன் ஆன்ம உண்மையையும், பிற எவரது ஆன்ம உண்மையையும் ஒன்றாய் இருப்பதாயும், தானே எங்கெங்கும் உள்ளீடாய் இருந்து, எவருமாய்ப் புறத்தில் தோற்றி உலகிடை எங்கும், அருட்பக்குவம் உண்டுபண்ணுதற்காக விளங்குகின்றதாயும் அறிகின்றார். அப்படி அறிந்ததாலும், உலகினரைத் திருத்திப் பக்குவமுண்டாக்க வேண்டியுமே தான் அப்படி அங்கங்கு இழிநிலையிருப்பதாய்த் தெரிவித்துள்ளார். ஆதலின் இக்கூற்று பொய்யுமல்லவாம். உண்மையையுள்ளபடி அறியும் அருளாளர்க்கேயன்றி பிறர்க்கு விளங்காது இக் கூற்றின் இரகசியம். உண்மையையுணராதவர் இவர், பிறர் குற்றத்தையும், குறையையும் தம்மேலேற்றிக் கொண்டு சொன்னதாகச் சொல்லிவிடுவார்கள். அகமுணராரே, பிறரைப்பற்றித் தான் சொல்லுவது போலும், தம்மைப்பற்றிப் பிறர் சொல்லுவது போலும் பொய்ப்பாவனையும் கற்பனையும் செய்து உண்மையை மறைத்து விடுகின்றார்கள். இவர்களின் இச் கூற்றுகளால் மக்கள் மேலும் மேலும் குழப்பமே அடைந்து உழன்று கெடுவதேயல்லால் பெருநலம் பெற்றுய்யார்கள்.

-தயவு திண்டுக்கல் சரவணானந்தா சுவாமிகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top