அகவல்:148.மறை ஆகமங்களால் ஆய்தற்கு அரியது…
அகவல்:149.எல்லாம் வல்ல உனையல்லா தில்லை…
அகவல்:150.நவையிலா வுளத்தில் நாடிய அளிக்கும்…
அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 148)
அகவல்:148.மறை ஆகமங்களால் ஆய்தற்கு அரியது
295.வாய்தற் குரித்தெனும் மறையாகமங்களால்
296.ஆய்தற் கரிய அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) வேதங்களும் ஆகமங்களும் எதற்காக ஆன்றோர்களால் படைக்கப்பட்டன? சிறந்த பிறப்பு எய்தியுள்ள மக்களினம், இப்பிறப்பில்தானே மேலான கடவுள் உண்மையை உணர்ந்து கொள்ளவும், அக்கடவுள் அருளால் பெறலரும் பெரிய இன்ப வாழ்வு அடையவும் வேண்டுமென்றுதான், அம் முன்னோர்த் தலைவர்கள், அவ்வேதாகமங்களை ஆக்கி வழங்கியுள்ளனர். இக்குறிப்பை உணர்த்தவே இங்கு மறையாகமங்களுக்கு முன்னால் ‘வாய்தற் குரித்தெனும்’, என்ற சொற்றொடர் நிறுவப்பட்டுள்ளது. வாய்தல் என்றால் சித்தித்தல் அல்லது அடையப் பெறுதல் என்பது பொருளாம். அம்மறையாக மங்களாற்றான் சித்திபெறற்கு உரிமையுண்டு என்பது அவர்களின் கருத்து.
வேதங்கள் கடவுள் உண்மையை விளக்கியும், விரித்தும், கற்பனைகளாற் குறிக்க முயன்றும் ஓர் எல்லைக்குமேல் ஒன்றும் கூறமுடியாமல் மௌனமாகி விடுகின்றனவாம். ஆகமங்கள் கடவுளை அடையும் மார்க்கத்தையும் முறையையும் பற்றி சாதனாசாத்திய இயல்களைக்கூறி படிப்படியாக மேலே சென்று பதி ஐக்கியமுறும் அல்லது பதியோடு ஐக்கிய முற்ற முடிவைப் புறத்திருந்து புகழ்ந்து நின்று விடுகின்றன. ஆகையால் அவற்றைக் கொண்டு மக்கள் கடவுளை உள்ளபடி தெரிந்து கொள்ளவும் முடியவில்லை; அக்கடவுள் அனுபவத்தோடு உலகில் வாழவும் முடியவில்லையாம். வாய்தற்குரியதெனக் கருதியது அனுபவத்தில் வாய்க்கவில்லை என்பது தெளிவு. மனிதன், வேதாகம நெறிபற்றிச் சென்று, அறிதற்கரிய கடவுட் கலப்பில் மறைவதேயன்றி மறையாது கடவுட்சித்தி பெற்று வாழமுடியாது என்பது அருட்பெருஞ் ஜோதியால் நன்கு விளங்குகின்றது.
அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 149)
அகவல்:149.எல்லாம் வல்ல உனையல்லா தில்லை
297.எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
298.அல்லா திலையெனும் அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) தனித் தலைமைப் பெரும் பதியாகிய இறைவன்தான் எல்லாம் வல்லான், மற்றவர்கள் எவரும், எக்காலத்தும் அந்த ஒப்பற்ற இறைவனுக்கு ஒப்பாகார். ஆகையால், பிற எந்தத் தேவர்களையும் மூவர்களையும் சித்தர்களையும் முத்தர்களையும் மற்ற எவரையும் துணையாகக் கொண்டு பெரும் பேறு அடைந்துவிட முடியாது என்று அறியப்படு கின்றது. உண்மையை அறியாதாரே ஏனையோரைப் பெரிதாக மதித்து அவர்களின் துணையை நாடிப்பெற்று, ஏதோ ஓரளவு சித்திகள் பெற்றாலும் கூட அழியா இன்ப அருட்பெருஞ்சித்தியை அடையக் கூடாது வீண்போகின்றார்கள். இன்றளவும் மக்கள் எவர் எவரையோதான் மதித்துக் கொண்டாடு கிறார்கள் என்றால், அதற்குக்காரணம் அந்த எல்லாம் வல்லானாகிய ஒருவனை அறியாததேயாம். அந்த ஒருவனே தன் ஏகதேசத்தை மற்ற மற்ற எவருமாய்த் தோற்றமாற்றம் செய்து கொண்டுள்ளான் என்பது உண்மையாம். ஆகையால், புறநிலையில் மயங்கி நின்று வேண்டும் போது அற்பசித்தியே பெறக்கூடிய தாயும், அந்தப் புறநிலையை மதியாது உள் விளங்கும் பரநிலையை மதித்து உள்நெகிழ வேண்டினால், அகமுடையானின் பெருந்துணையும் அதனால் பேரின்ப சித்தியும் பெறமுடியும் என்பது நிச்சயம்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் எல்லாம் வல்ல இறைவர். அவரே நமக்கு எல்லாம் வல்ல சித்தியை வழங்குகின்றவர் ஆவர். நம் வள்ளலார், தமக்கு அந்த எல்லாம் வல்ல சித்தியை அளித்தது அருட்பெருஞ்ஜோதி இறைவரே என ஈண்டு குறிக்கின்றார். அந்த அருட்பெருஞ்ஜோதியே இவர்க்கு எல்லாமாய் இருக்கின்றது. ஆகையால், இவர் காண்கின்றது, உள்ளிருந்து. விளங்குகின்ற அவ் அருட்பெருஞ்ஜோதியே வேறுவேறு வண்ணங் கொண்டு திகழ்வதாய் உணர்கின்றார். இதனால்தான் இவர் மற்றவர் யாரையும் போற்றிக் கொள்ளவுமில்லை, தூற்றித்தள்ளவுமில்லை; அதற்குப் பதிலாக இரக்கத்தோடும் தயவோடும் எவரையும் தேற்றிக்கொண்டும் மேனிலைக்கு ஏற்றிக் கொண்டும் இருந்தார்; இருக்கின்றார்; என்றும் இருப்பார், இதுவே அவரது உண்மையாம்.
பிறரையும், பிறபொருள்களையும், பெரிதென நம்பிப் பின்னர் அவர்களும் அவைகளும் பிரிந்து மறைந்துபோக வீணிற் கலங்கநேரும். ஆகையால் உண்மை அல்லவற்றை நம்பி வீண்போதல்கூடாது. “நம்பினோர் கெடுவதில்லை, நான்குமறைத்தீர்ப்பு”, என்ற பழமொழி வேதநெறியாளர் கூற்று. அழிவற்று அருளொடு விளங்குகின்ற ஒன்றைத் துணை கொண்டால் தான் உண்மையில் அழியாதிருக்கக் கூடும்; அப்படி இல்லாது, மற்ற எதையாவது நம்பினால் எப்படிக் கேடுறாது இருக்க முடியும்? ஆகவே அடிகளார் கண்டு, துணை எனக்கொண்டு விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒன்றையல்லால் வேறு இல்லை என்பது சத்தியம்.
அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 150)
அகவல்:150.நவையிலா வுளத்தில் நாடிய அளிக்கும்
299.நவையிலா வுளத்தில் நாடிய நாடிய
300.அவையெலா மளிக்கும் அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) “வேண்டுவோர் வேண்டுவதை ஈவான்” இறைவன் என்று பக்தர்கள் போற்றுகின்றார்கள். எல்லோரும் வேண்டுவன எல்லாம் பெறுகின்றார் களில்லை. ஏனெனில், ஒருவனது உண்மைத் தேவை எதுவோ அதனை வேண்டினால்தான் உடனே கிடைக்கப்பெறும். அவா, வெகுளி, மயக்கம் நிரம்பிய மனத்தினர் தமக்கு உண்மைத் தேவையை இன்ன தென்று அறியாமல், தேவை இல்லாத எதையும் வேண்டினால் எப்படி வழங்கப்பெறுவர்? பெற மாட்டார்கள். இதனால்தான் இங்கு, நவையிலா, (அதாவது, அவா, வெகுளி, மயக்கம் முதலான) குற்றம் இல்லா உள்ளத்தில் நாடிய நாடிய அவை எலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி என்று குறிக்கப் பெற்றுள்ளதாம்.
குற்றமற்ற உள்ளத்தில் திருவருளின் உண்மை ஒளிருகின்றது. அப்படி அல்லாத, குற்றங்கள் நிறைந்த உள்ளத்தில் இருளே செறிந்துள்ளதாம்; இதனால், அங்கு மெய்யறிவும் மெய்யன்பும் விளங்கா. அப்படி அறிவும் அன்பும் விளங்காத உள்ளத்தில் உண்டாகின்ற, விருப்பம், இச்சை, குற்றமற்றதாய் இருக்க முடியாது, ஆகையால்தான் இருள் உளத்தார் இச்சித்தவை பெறமுடியாது போகின்றதாம்.
வள்ளல் உள்ளம் இரக்கமும் தயவும் நிரம்பியதாகும். அன்பு ஒளி நிரம்பிய உள்ளத்தில் நவை இருளுக்குச் சிறிதும் இடமில்லையாம். இவர் எதையும், தயவினால் பிறர் நலம் கருதியே வேண்டுகின்றார்: ஆகையால் அவரது வேண்டுகை எவ்விதத்தும் புறக்கணிக்கப்படுகின்றதேயில்லை; உடனுக்குடன், வேண்டின எதனையும் வழங்கப் பெறுகின்றார் என்பது உண்மை.
