வள்ளற் பெருமான் கொள்கைகளை அடி ஒற்றி பலர் வாழ்ந்து மறைந்தனர். பலர் பெயர் ஒளிர நிற்கின்றனர். அவர்களுள் ஒருவர் அவ்வை நடராசன். திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூர் இவர் பிறந்த ஊர். இவர் பெற்றோர் உரைவேந்தர் ஔவை துரைசாமி. தாயார் லோகாம்பாள். 24.04.1936-ல் பிறந்தார். இவர் இயற் பெயர் சிவபாதசேகரன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவர் தந்தை பேராசிரியராகப் பணியாற்றிய போது நடராசன் என்று பெயர் மாற்றினார்.
இவர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.(1955) திருக்கோவையார் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். (1965) சங்க காலப் பெண்பாற் புலவர்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். (1974), மேலும் இவர் தஞ்சை சரபோஜி கல்லூரியில் உள்ள விரிவுரையாளர். புதுதில்லியில் அகில இந்திய வானொலி நிலையசெய்தி அறிவிப்பாளர், மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் என பல பொறுப்புகள் வகித்தவர்.
1965-ஆம் ஆண்டு சன்மார்க்க சங்கத்தின் நூற்றாண்டு சென்னையில் அருட்செல்வர் அவர்கள் இராமலிங்கர் பணி மன்றம் துவக்கினார். இராமலிங்கர் பணி மன்றத்தின் தலைவராக அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களும், செயலாளராக டாக்டர் ஔவை நடராசன் அவர்களும், கௌரவ ஆலோசகராக தவத்திரு ஊரன் அடிகளாரும் இருந்து சிறப்பாக செயல் பட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார், காந்தி பிறந்த அக்டோபர் 2 முதல் 8 ந்தேதி வரை 7 நாட்கள் விழா சென்னை மயிலாப்பூர் A.V.M. இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
1967-ல் இராமலிங்கர் பணி மன்ற சார்பாக முத்திங்கள் இதழ் என்ற காலாண்டிதழை ஊரன் அடிகள் அவர்களே ஆசிரியராக இருந்து தொடங்கினார்கள். இந்த இதழில் வள்ளலார் பற்றிய பல செய்திகளை ஔவை நடராசன் அவர்கள் எழுதியுள்ளார். 1965 முதல் 1976 வரை ஒன்பது ஆண்டுகள் இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளர் ஆக இருந்தார்.
இந்த ஒன்பது ஆண்டுகளும் தமிழக சன்மார்க்கத்தின் ஒளிமிகுந்த காலம் எனலாம். தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் உள்ள சன்மார்க்கிகள் 7 நாட்களும் சென்னை மயிலாப்பூரில் A.V.M.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தங்கி இருப்பார்கள். திருவருட்பா நூல் வெளியீடு, அகவல் பாராயணம், கொடி ஏற்றம் என விழா சிறப்பாக நடை பெறும். பல சன்மார்க்கிகளுக்கு விருது வழங்கப் படும். ஆரம்ப நிலையில் உள்ள சன்மார்க்க சங்கம் கட்டிடம் கட்ட நிதி உதவி அளிக்கப்படும். அநேக சன்மார்க்கிகளுக்குப் பேசும் வாய்ப்பு கிடைக்கும்.
பம்பரமாகச் சுழன்று ஔவை நடராஜன் அவர்கள் விழாவை நடத்துவார். இவரால் அடையாளம் காட்டப் பட்டவர்கள் அநேகம் பேர்கள். அதில் ஒருவர் முருக சரவணன். தினசரி கிரிதாரி பிரசாத் அவர்கள் உரையாற்றுவார்கள். சத்திய கங்கை பகீதரன், புலவர் முருகையா, தவத்திரு. ஊரன் அடிகள், கோவை சிவப்பிரகாச சாமிகள், டாக்டர்.மபொ.சி என சன்மார்க்க அறிஞர்கள் உரை சிறப்பாக இருக்கும்.
இவரது தமிழ்ப் புலமையால் ஈர்க்கப்பட்ட அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், ஔவை நடராசனாரைத் தமிழக அரசின் மக்கள் செய்தித் தொடர்பு துறையின் துணை இயக்குனராகப் பணி அமர்த்தினார். அன்று தொடங்கி அவருக்கு ஏற்றம், ஏற்றம், எத்தனைப் பதவிகள் தேடி வந்தது. அத்தனையையும் முத்தாய்ப்பாக செய்து முடித்தார். இவரது துணைவியார் மருத்துவர் தாரா அம்மையார். மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி யுள்ளார்.
அருட்செல்வர் மகாலிங்கத்தின் தொடர்புக்குப் பின்னர் தான் நடராசனார் வாழ்க்கை புதிய பாதையில் சென்றது. அதுவரை தமிழ் இலக்கியம் சார்ந்த அவரது பார்வை வள்ளலாரிலும் காந்தியத்திலும் திரும்பிய போது புதிய பரிமாணம் எழுந்தது. கலைஞர் கருணாநிதி, டாக்டர் M.G.R, புரட்சித்தலைவி ஜெயலலிதா என்ற மூன்று முதல்வர்களாலும் மதிக்கப்பட்டவர் டாக்டர் ஔவை நடராசனார். பட்டி மன்றம் என்ற சொற்பொழிவு தமிழ் அடையாளமாக மாறி இருப்பதற்கு அவ்வை நடராசன் ஐயாவின் பங்களிப்பு அளப்பரியது.
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்தபோது ஆட்சித் தமிழுக்கு அவர் வழங்கிய கொடை ஏராளம். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவர், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தர், பாரத பல்கலைக் கழக வேந்தர் என உயர் பதவிகளை வகித்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, அருட்செல்வர் மகாலிங்கம் விருது என பல விருதுகள் பெற்றவர்.
மதுரை 5- ஆம் உலகத்தமிழ் மாநாடு, மொரிஷியஸ் 7 – ஆம் உலகத்தமிழ் மாநாடு என உலகில் உள்ள தமிழ் அமைப்புகளில் இவர் குரல் ஒலிக்காத இடம் இல்லை.மதியின் மாண்பால், மணி தெறிக்கும் உரை வீச்சால் தேன் கனிந்த அதிமதுரக் கவி போலப் பழகும் இந்த ஔவை நடராசன் என்றும் வாழ்க என்பார் கவிஞர் சுரதா. ஆம் இந்த இனியவர் 21 – 11 – 2022 ஆம் ஆண்டு இயற்கை அன்னையின் இணையடி நிழலில் இளைப்பாறச் சென்றுவிட்டார்.

