சுத்த சன்மார்க்கம் என்பது
சும்மா இருப்பது.
ஆயினும் எப்பொழுதும் செயலில் இருப்பது.
சுகமாய் இருப்பது.
அன்பாய் இருப்பது.
அருளை அடைந்து ஆனந்தமாய் இருப்பது.
முன் வினையை முடிப்பது.
பின்வினை தொடராமல் தவிர்ப்பது.
மரணம் தவிர்ப்பது.
பேரின்ப சித்திப் பெருவாழ்வில்
வாழ்விப்பது.
வாருங்கள்! அருளை வாரி வழங்க வள்ளல் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றார்.
கேட்க, படிக்க நன்றாக இருக்கின்றது. இதனை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டு அனுபவத்திற்கு நாம் வருவதற்கு நமது தற்போதமும் தாழுங்குணமின்மையும் தடுக்கின்றது. என்ன செய்ய?
சிந்திப்போம்!
காலம் இல்லை சகோதர சகோதரிகளே! ஈடுகட்டிவந்தால் இந்தப்பிறவியிலேயே இன்பம் மிகப் பெறலாம். ஊக்கம் ஆக்கம் தரும்.
தூண்டுதல் யாரோ, எவரோ, எதுவோ என்று எண்ணினால் ஏமாறுவது நாம் தான்.
“ஒன்றுதான்” எல்லாமாக இருக்கின்றது என்பதை நம்புவோம்! அப்படியே செயல்படுவோம்! என்றும் ஆனந்தமே!
சுத்த சன்மார்க்கத்திற்கு சாதனமாக, ‘சத்விசாரம்’ என்பது திருவருள் மகாவாக்கிய திருமந்திரமாகவும், ‘பரோபகாரம்’ என்பது தயவாகவும் உள்ளது.
இவ்விரண்டும் முடிநிலையில் கூடுதலாக இரண்டு திரைகளாகி பின் தவிர்ந்து இயற்கை உண்மையானது. இயற்கை ஆனந்த இன்பமாக இணைபிரியாமல் ஒன்றாக இருக்கின்றது. இந்த நிலையே இறவாத, பிறவாத பேரின்ப சித்திப் பெருவாழ்வாக விளங்குகின்றது.
ஈடுகட்டிவருதல் என்பது ஒரு சிறிது காலம் சத்தியஞான தீபவழிபாட்டினை தடைபடாமல் ஆராதித்து வருவதால் கை கூடுவதாக உள்ளது.
சுத்த சன்மார்க்கத்தில் ஞானத்தில் சரியை சத்தியஞான தீபவழிபாடாகவும்,
ஞானத்தில் கிரியை திருவருள் மகாவாக்கிய திருமந்திரமாகவும்,
ஞானத்தில் யோகம் தயவாகவும்,
ஞானத்தில் ஞானம் திருவருள் அருட்பெருஞ்ஜோதி அகவலாகவும் உள்ளது.
அறிவும் அனுபவமும் தரும் ஒன்பது திரைகள்:
பெருமானார் அகவலில் ஏழு திரைகளைக் குறிப்பிட்டவர், நான்கு அருட்பெருஞ்ஜோதியை அகவலில் முதலிலும் முடிவிலும் குறிப்பிட்டவர்,
பேருபதேசத்தில் ஒன்பது திரைகளையும் மூன்று அருட்பெருஞ்ஜோதியையும் ஒரு தனிப்பெருங் கருணையையும் குறிப்பிடுகின்றார். ஏன்?
அவரது ஆன்மீகப் பயணத்தில் இடைப்பட்ட ஏழு மாதங்களில் ஏற்பட்ட விளைவு, மாற்றம் என்ன?
இது குறித்து சிந்திக்கலாமே! நமது பயண இலக்கு தெளிவாகக்கூடும்.
அகவலில் பெருமானார் அவர்கள், தன்னுடைய வாழ்நாள் முழுவதுமான அறிவுத் தேடலின் முழுமையான அனுபவங்களை, தான் உணர்ந்தவற்றைப் பதிவு செய்துள்ளார். ஆனால் 1873 -சித்திரை எட்டாம் தேதிக்கு முன், 1871-ஆம் ஆண்டு சித்திரை முதல் தேதி அன்று சன்மார்க்கப் பெரும்பதி வருகை என்ற ஓர் அறிவிப்பில் ’29 மாதங்களுக்குப் பிறகு ஆண்டவர் வர இருக்கின்றார்’ – என்று குறிப்பிடுகின்றார்.
அந்த ஆண்டவர் வரவு அகவல் எழுதிய அதே வருடம் ஐப்பசி மாதம் கொடி கட்டிக்கொண்ட நாளில் ( 29 மாதம் நிறைவடைந்த அளவில் ) பேருபதேசமாக வெளிப்படுகின்றது. இதனைக் கண்ணோக்கும் பொழுது அது சன்மார்க்கப் பெரும்பதியின் அறிவிப்பாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெருமானார் அனுபவம் அகவலாக சித்திரை மாதம் வெளிப்பட்டு சன்மார்க்கப் பெரும்பதியின் உபதேசமாக வெளியானது ஐப்பசி மாதம் ஆகும். இதனைக் கருத்தில் கொண்டால் புரியும்.
ஆண்டவர் அனைத்தும் ஆனவர். அதனால் அவர் அறிவு, அனுபவம் என்று தேடுவதற்கோ அடைவதற்கோ எதுவும் இல்லை. ஆனால் அதே சமயம் கடவுள்நிலையறிந்து அம்மயமாக வேண்டும் என்றால் மனித ஜீவர்களுக்கு அதற்கென்று ஓர் அறிவும் அனுபவமும் தேவைப்படும். அந்த அனுபவத்தைத்தான் தனிப்பெருங்கருணை என்று குறிப்பிடப்படுகின்றது என்று கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இப்பொழுது புரியும்.
மேலும் ஏழு திரை நீக்கம் என்பது அறிவு விளக்கம் ஆவதற்கு விளக்கமான அறிவும் அவ்வறிவு விளங்குவதற்கு சாதனங்களான சத்விசாரம் மற்றும் பரோபகாரம் இரண்டும் சேர்த்து ஒன்பது திரைகளாக இருக்கலாம். இந்த இரண்டில்தான் இப்பொழுது நாம் பொழுதை நாளும் கழித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதிலிருந்து புரியக்கூடும். இந்த இரண்டும் ஒரு வகையான திரை என்றுதான் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடும்; அறிவிக்கப்பட்டிருக்கும். அதனால் மேற்கொண்டு இரண்டு திரை என்று கூட்டப்படுவது சத்விசாரம், பரோபகாரம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கின்றது.
ஆக அகவலில் ஏழு திரை நீக்கமும் பேருபதேசத்தில் ஒன்பது திரை நீக்கமும் என்பதைக் கடவுள் நிலையில் அறிவும் அனுபவம் ஒன்று என்றும் மனிதனுடைய நிலையில்தான் அறிவும் அனுபவமும் வேறு வேறு என்பதுமாக புரிந்துக்கொள்ளக் கூடியதாகும்.
-தயவுடன் சுயம்.
