அருட்பெருஞ்சோதி அகவல் உரை( அகவல் 145-147)

அகவல்:145. மாண்டுழலாது ஆண்டுகொண்டது….

அகவல்:146. பற்றொடு அற்றமும் நீங்கியது…

அகவல்: 147. சார்பு விடுத்த அமயம் தோன்றுவது…

அருட்பெருஞ்சோதி அகவல் உரை : அகவல் 145

அகவல்: 145. மாண்டுழலாது ஆண்டுகொண்டது

289. மாண்டுழ லாவகை வந்திளங் காலையே

290. ஆண்டுகொண்டருளிய அருட்பெருஞ்ஜோதி

(உ-வி) உலகம் இதுவரை கண்டறியாத ஒரு திருநிறை மனிதனை, நம் வள்ளற்பெருமான் வடிவில் காண நேர்ந்தது. அப்படி கண்டிருந்ததும் முழுமையான நிறை நிலையன்று, ஏகதேச புறநிலை வடிவேயாகும். கருவிலே திருவுடையார் எனச் சிலரைப் போற்றிக் கொள்ளுகின்றனர் சில மக்கள். உண்மையிலேயே இவரைத்தான் அப்படிப் போற்றிக் கொள்ளலாம். எப்படி எனில்: இவரது பிறவி இரகசியமே திருவருளின் வெளியீடாகக் கண்டு கொள்ளப்படுவதால் எல்லா உண்மையும் ஓரளவு கண்டு கொள்ள முடிகின்றதாம்.

தமிழன் கண்ட கடவுள் உண்மை, தமிழ் மொழியின் அமைப்பிலேயே வெளியாக்கிவிட்டான். அந்தத் தமிழ்க்கடவுள் சிவமாக விளக்கப்பட்டுள்ளது. அந்தச் சிவம், அன்பருளின்ப வடிவினன் என்பது யோகஞான சித்தர்களின் அனுபவம். அப்படியான ஒரு சிவானுபவப் பெரியாரின் சம்பு பட்சத் திருவாக்கால், ஓர் அன்னையுதிரத்துக் கருவுரு வானவர் நம்பெருமானார், பிறர்போன்று ஆண் பெண் கூட்டுறவில் உருவானவர் அன்று இவர்! உண்மைச் சிவானுபவம் பெற்ற சிவயோகியர், உளத்தே சிவநிலை நின்று அருளால் பெருகிய திருவாக்கு அளித்த நொடியிலே கருவுருவாவதுதான் சம்புபட்ச சிருஷ்டி என்று கூறுவர். அக்கருத்தோற்றம் நிகழ்ந்த நாள், சிவபெருமானுக்குரிய மார்கழி மாதத் திருவாதிரையாம். அது சித்திரபானு ஆண்டு ஆகும்.

அன்று அளிக்கப்பெற்ற திருவாக்கு, “உலகெல்லாம் போற்றும் சுத்த சன்மார்க்க உத்தமபுத்திரனை நீ பெறுவாயாக” என்பதாம். அன்று உருவாகத் தொடங்கிய கரு, நிறைவெய்திப் பொலிவோடு இவ்வுலகில் வெளிப்பட்ட நாள், சுபானு வருடம், புரட்டாசி மாதம், வளர்பிறைத் திதியையும், சித்திரை நட்சத்திரமும், நவராத்திரியின் இரண்டாம் நாளும் கூடிய தினமாகும். அந்நாள் மாலை பிறைத் தோன்றிய அந்தி வேளையில் பிறந்தார் வள்ளற் குழந்தை, அறிவறியாச் சிறுபோதே தில்லையிற் ஜோதிகண்டு சிரித்ததும், பாலப்பருவத்தே கண்ணாடியில் தணிகை முருகனைக்கண்டு துதித்ததும், திருவொற்றியூரில் அருள் உண்மை கண்டு பெரு நெறி பிடித்தொழுக முனைந்ததும் உலகம் ஓரளவு அறிந்தனவேயாம். அருள் அனுபவம்தான் இவர்க்கு, அருட்பெருஞ் ஜோதியின் உயர்நிலைக்கு தூக்கிவிட்டதாகும். சிறுபோது தானே உள்ளொளியாயிருந்து ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி இவரை அழியாத்திருவுருவில், திருவருட் பிரகாச வடிவில் என்றும் விளங்க வைத்துவிட்டதாகும்.

சிறுகாலை ஆட்கொண்ட தேவதேவே, அறியாப் பருவத்தே எனை மணந்தான், பிறநெறியிற் செல்லா வண்ணம் எனைத் தடுத்தாண்டான், எம்மையினும் உனைவிட்டுப் பிரியேன், உன்னைக் கைவிடேன் கைவிடேன் என்பனபோன்ற எத்தனையோ உறுதிமொழி பெற்றுத் தம் அழியா வாழ்வை நிச்சயித்துக் கொண்டார். முடிவில் அந்த முத்தேக சித்தியோடு அழிவின்றி வாழும் நிலையும் எய்திவிட்டார். இவ்வளவும் அனுபவம் வருமுன்னே வந்ததாகக் கூறிவிட்டுப்போய் விடவில்லை. அனுபவத்தில் அந்த அழியாநிலை எய்தி விட்டதையும் திருவருட்பா பாடல்கள் பலவற்றிலும் காண்கின்றோம். அன்றே அந்த ஓர் (இராமலிங்க) ஆன்மாவுக்கு அருட்ஜோதி வழங்கி, அவ்வருள் வடிவில் நிலவச்செய்து விட்டாராம் அருட்பெருஞ் ஜோதிபதி. ஆதலின், மேற்கொண்டு இறக்கவேண்டிய நிலை இல்லையாகிவிட்டதாம். இதே மாண்டுழ லாவகை மற்ற ஒவ்வொரு பக்குவ ஆன்மாவுக்கும் நிச்சயமாகி விட்டது அன்றே முதல். ஏனென்றால் ஒன்றான கடவுளே திருவருளால் அனைத்து ஆன்மாக்களுமாய் இருப்பதாலும், எல்லா ஆன்மாக்களுக்கும் ஆனந்தம் அனுபவப்படவே திருநடனம் அல்லது ஐந்தொழில் அருட்பெருஞ்செயல் புரிந்து கொண்டிருப்பதாலும், ஓர் ஆன்மாவில் ஏற்பட்ட அழியாநிலை வாழ்வு அனுபவம், மற்றெல்லாவற்றிற்கும் உண்மை ஆகிவிட்டுள்ளதாம். அந்த உண்மைதான் பக்குவகாலத்தே எவரும் பெற்றுக் கொள்ளக்கூடியதாய் இருக்கின்றது சத்தியமாம்.

அருட்பெருஞ்சோதி அகவல் உரை : அகவல் 146

அகவல்: 146. பற்றொடு அற்றமும் நீங்கியது

291.பற்றுகளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
292.தற்றமு நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

(உ -வி) உலகில் எந்தப் பொருளும், எந்த உயிரும் தனித்து, ஒன்றையும் பற்றாது இருக்க முடியாது. அண்டங்களும், பிண்டங்களும், அணுக்களும், உயிரினங்களும், ஆற்றல்களும் பலவகையில் பற்றிக்கொண்டு விளங்குகின்றனவாம். இவைகள் எல்லாவற்றையும், ஆக்கியும், காத்தும், அழித்தும், பக்குவம் வருவித்தும் அருள்பாலித்தும் கொண்டுள்ள மேலான பரம்பொருள் ஒன்றே எந்தவித பற்றுதலு மில்லாமல், எதனாலும் தீண்டப்படாத நிலையில் அந்தரத்தே தனித்து இயங்கிக் கொண்டிருக்கின்றதாம். அப்படித் தீண்டரிய வெளியிலே திருநடனம் புரிந்து கொண்டிருத்தலினால், அந்த ஆண்டவரை வேறு யாராலும் அடைய முடிகின்றதில்லையாம். ஆகையால்தான் கடவுளைப் பற்றற்றான் என்று சொல்கின்றனர். அவர் தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் எனப்படுகின்றார்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”.

உலகியல் உடற்பற்று காரணமாக, புலபோகப் பற்றும் அதனால், மற்றெல்லாப் பற்றுகளும் தழைக்கின்றனவாம். இந்தப் பற்றுகளை எல்லாம் விட்டு விடுவது எப்படி? எப்படி என்றால், பற்றற்றானின் பற்றைமட்டும் பற்றிக்கொள்ளுவதாலாம். இங்கு குறிக்கப்படுகின்றானே பற்றற்றான் அவன் யார்? இந்த பற்றற்றான் கடவுள் அல்ல என்பது நிச்சயம். கடவுள்தான் பிற எவராலும் பற்றமுடியாதவன் ஆச்சே. ஆகையால் அந்த பற்றற்ற பரனைப் பற்றச் சொல்லவில்லையாம். பின்னர் இங்கு சுட்டப்படும் பற்றற்றான் யார் என்றால், உண்மைத் துறவுடையோர் என்பர். இத்துறவியினுடைய உறவால், சாதுசங்கப் பழக்கத்தால் உலகியற் பற்றுகளை நீக்கிக் கொள்ளலாம் என்கின்றனர்.

இப்பற்று நீக்கம் பெறுவதால் என்ன பெரிய நன்மை அடைவான் ஒருவன்? தேகாதி பிரபஞ்சப் பற்றை உதறித்தள்ளி விட்டவன், பரமனின் பதத்தைப் பற்றி நின்று, அதிற் கலந்து விடலாம் என்பது முன்னோர் கருத்து. இவனுடைய கடவுட் பற்று, அக்கடவுளை அடைவித்து வாழ்விப்பதாயில்லை. அந்தப் பற்று கடமையை மறக்கச் செய்து, அடைய முடியாததை (எண்ணி எண்ணி) இறுதியில் இறந்துபடத்தான் செய்வதாம்! ஒருவன் இங்கிருந்து சூரியனை அடையக் கருதி வீண்போவது போன்றாம். ஆகவே, பற்றற்ற கடவுளைப் பற்றக்கருதுவதும், துறவியைப் பற்றச் சார்வதும் பயனின்றாம். மேலும், கடவுள் ஒருவரை அல்லாது எந்தத் துறவியைப் பற்றற்றான் என்று சொல்லமுடியும்.

அக உண்மைக் கடவுள் நிலையைத் தெரிந்து கொள்ளுவதற்கு உதவியாக, தயாவொழுக்கமும் சத்விசாரமும் உண்டாகத்தான், சாதுசங்கமும், துறவோர் உறவும் மேற்கொள்ளலாம். உண்மையில் பற்றற்ற பரம்பொருள், தீண்டரிய அகவெளியில் இருந்து கொண்டு, தன் அருட்பெருஞ்சக்தியையே, உலகில் யாவுமாய்த் தோன்றச் செய்து ஆண்டு வருவதாக அறியலாகின்றதாம். ஆகையால், பற்றற்ற பரமனின் பிரிவற்ற அருளே யாவுமாய்த் தோன்றியும், அவ்வருளாலே ஆளவும் படுகின்றதாம். ஒருவன் அருட்பெருஞ் ஜோதி ஞானம் அடைகின்றபோது, தான் வேறாயில்லாது, அதுவே தானாய் அருளால் விளங்குவதாய் உணர்ந்து அந்தப் பற்றற்றானோடு அத்துவிதமாய் இருக்கக் காண்கின்றான்.

இது இவனது பற்றற்றானோடு பற்றாமே பற்றியுள்ள நிலையாகும். இந்நிலை நின்றே, கடவுள் பேருல குயிர்ப் பொருள்கள் யாவையும் ஆண்டு அருள்பாலித்துக் கொண்டேயுள்ளார். இப்படியுள்ள பரமனோடு இரண்டற்றிலங்கும் ஒருவனே, பற்றற்றானைப் பற்றியுள்ளவனாகவும் கொள்ளப் படலாம். இவன் இறையுட்கலந்து, இல்லையாம்படி மறைந்து போவதில்லை;

பதிலாக இவன் இறைவனோடிறைவனாகவே இருந்துகொண்டு நிறை இன்ப சித்தி வாழ்வில் நீடு விளங்குகின்றான் என்பது உண்மை. இதனையே இவ்வடிகள் குறிக்கின்றனவாம். ‘பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி’ என்கின்றார். பற்றுகளை எல்லாம் முழுமையாக (பற்று முற்றும் அற்று)ப் போகும்படி தவிர்க்கப்பட்டுவிட்டதாம். அந்தப் பற்றுகளை எல்லாம் தீர்த்துவிட்டதோடு, அற்றமும் நீக்கிவிட்டதாம். அற்றம் என்றால் குற்றம், குறைவு, மறைவு, அழிவு, சோர்வு, துன்பம் என்றெல்லாம் பொருள்படுவதால், அற்றம் நீக்கியதாகச் சொல்லும் போது இவ்வளவும் அடியோடு ஒழித்து விடப்பட்டன என்றாம். இதனால்தான் இவர் அருளம்பலத்தி லிருந்து நிறை இன்ப அருளாட்சி புரிந்து கொண்டுள்ளார் என்பது போதரும்.

அருட்பெருஞ்சோதி அகவல் உரை : அகவல் 147

அகவல்: 147. சார்பு விடுத்த அமயம் தோன்றுவது

293.சமயம் குலமுதற் சார்பெலாம் விடுத்த
294.அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி

( உ – வி ) சமயம், மதம், இரண்டும், கடவுள் அறிவு, கடவுட்கொள்கை என்ற பொதுவான கருத்தில் கொண்டுள்ளனர் மக்கள். அருள் உண்மை விளங்காத போது கற்பனையிற் பெற்ற கடவுள் அறிவும், அதனைச் சார்வதற்கான கொள்கை கோட்பாடுகளும் தவறானவைகளேயாம். இவ்விரு சொற்களின் உட் பொருளை ஆய்ந்து பார்த்தால் விளங்கும் கருத்து சற்று தெளிவு தரும்.

ஆனால் அருட்ஜோதியில்தான் உண்மை முற்றும் உள்ளபடி அறியவும் அடையவும் கூடும். அகப்பொருள் விளக்கம்: சமயம் = ச-மயம், எங்கும் நிறைந்து யாவும் இறைமயமாய் விளங்கும் அறிவாம் உணர்வுதான் சமயமாம். இதுபோல், மதம் -மதியாகிய அறிவு காட்டும் வழிமுறை. அருள் நிறைவில் தான் உண்மை ஞானமும், வழிவகையும் இன்னவை என விளங்குதல் அனுபவம்.

ஆகையால் கற்பனையிற் கிளைத்துள்ள சமயச் சார்புகளையும், குல கோத்திர, ஜாதி, இனம் என்ற பற்றுகளையும் கடந்து, ஒன்றாம் அருட்பெருங் கடவுள்தானே யாவுமாய் விளங்கும் உண்மை கண்டு, அன்பொடு கூடி வாழ வேண்டுவது மக்கள் கடமையாகும். மேற்படிப் புறச்சார்புகளை எல்லாம் விட்டு, அருள் வேட்கையோடு அகநின்று வேண்டும் போதுதான், அந்த அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் ஞானமும், அதனை அடைந்து வாழும் சுத்த சன்மார்க்கமும் நன்கு விளங்கும். நம் வள்ளலார் இப்படியிருந்த அமயம்தான் இந்த அருட்பெருஞ் ஜோதி யுண்மையைக் கண்டு அடைந்ததாக ஈண்டு குறிக்கின்றார். இங்கு அமயம் என்பது பொழுது, தருணம் அல்லது சமயம் ஆம்.

ஆகையால் இந்த அமயமாகிய சமயம் காலத்தை யுணர்த்துவது. முன் குறித்த சமயம் கடவுள் உணர்வைச் சுட்டுவதாம், புறச்சார்புகளில் பற்று கொண்டிருக்கும் வரை, கடவுட் சார்பு கிடைக்காது. ஆனால், கடவுட் சார்பை அடைய புறச்சார்பை நீக்கிக்கொண்டு, பற்றாது இருந்து கொண்டு புறத்தே, தயவுச்செயல் புரிந்துவரல் வேண்டுமே அல்லாது, புறத்தை முற்றும் வெறுத்துத் துறந்து விட்டு அகம் அடைய விரும்பினால், உள்ளொடுங்கி மறைந்து வாழ்வற்றுப் போகநேரும். உண்மையில் கடவுள் ஒருவரே நாம் ஒவ்வொரு வருமாய்க் கூடாதே கூடி உள்ளிருந்து விளங்கலின், நாம் அவராய் அத்து விதமாய்ச் சாராதே சார்ந்து இருந்துகொண்டு, அருட்செயலோடு அவர் வாழ வாழ்கின்றோம் நாமும்.

சகல பற்றுக்களையும் நீக்கிக்கொண்டு, அக நெகிழ் அன்புடன் இருக்கும் அமயம், அந்தரத்திருந் தாடும் அருட் பெருஞ்ஜோதிபதியின் கூட்டுறவு ஆகிய சார்பு கிடைக்கின்றதாம். இதனால் அருளின்பப் பெரு வாழ்வு சித்திக்கின்றதாம்.

–தயவு திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top