நலம் சூழ்க!
மதங்கள் வாச்சியார்த்தமாகவும்
சமயங்கள் இலட்சியார்த்தமாகவும்
மார்க்கங்கள் அனுபவமாகவும் வழங்குகின்றன.
சன்மார்க்கம் என்பது மதங்களிலும் உண்டு; சமயங்களிலும் உண்டு.
சமரசமாகி மேலும் முன்னேறி சமரச சன்மார்க்கமாகவும் அதற்கு மேலும் முன்னேறி சமரச சுத்த சன்மார்க்கமாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்றது.
சமரச சுத்த சன்மார்க்கம் ஒன்றே சாகா நிலையை அனுபவம் செய்யும்.
அந்த சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர் வள்ளற் பெருமானார்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஒப்பற்ற பெரிய தயவுடைய பேரறிவாளர்.
எல்லாம் ஆனவர், எல்லாம் உடையவர், எல்லாம் வல்லவர்.
அவருடைய அனுபவம் தனிப்பெருங்கருணையாக உள்ளது.
தனிப்பெருங்கருணை என்பது சாகா நிலைக்கான அனுபவம் ஆகின்றது.
அந்த அனுபவத்தை அடைவதற்கு ஆதாரமாக உள்ள உடல், சுத்த உடலாக நீடிக்க வேண்டும். அதற்குத் தக்க ஆகாரம் வழங்கப்பட வேண்டும்.
சுத்த சன்மார்க்கத்தில் சாதகர்கள் என்றும் சாத்தியர்கள் என்றும் இரண்டு வகையினர் உள்ளனர். முதல் வகையில் உள்ள சாதகர்களுக்கு உரிய உணவு குறித்து நித்திய ஒழுக்கத்தில் பெருமானார் விரிவாகத் தெரிவித்துள்ளார். சாத்தியர்களுக்கு புழுக்காத உணவு என்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.
நாம் முதலில் சாதகராக ஆக வேண்டும். இவர்களே சுத்த சன்மார்க்கத்திற்குரிய பயிர்கள். இந்தப் பயிர்களை வாடவிடுவது என்பது சுத்த சன்மார்க்கத்தின் முடிந்த முடிவாகிய சாகாநிலையை அடைவதற்குத் தடையாக இருக்கும்.
ஒரு பயிருக்கு ஒரு விதை போட்டால் அது விளைவாகும் பொழுது பல தானியங்களாகக் கிடைக்கும். முடிந்த முடிவான சுத்த சன்மார்க்கம் விளங்கி, விளங்கும் முயற்சியில் இருக்கும் சன்மார்க்க சாதகர்களே வாடிக்கொண்டிருக்கும் பயிர்கள்.
அந்தப் பயிர்கள் வாடுவதைக் கண்டு, கேட்டு இருக்கப்படாது. ஏதாவது செய்து அவர்களையும் உயர்நிலைக்கு உயர்த்த வேண்டும். அந்த செயலை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செய்கின்றார். அதுவே அவரது தனிப்பெருங்கருணயாக விளங்குகின்றது.
பெருமானாரைக் கண்டு கொள்ளும்பொழுது உண்மை அனுபவம் தனிப்பெருங்கருணையாக உள்ளதை அறிவோம்.
அப்படி அறியும் பொழுது, அந்த அறிவு விளங்குகின்றபொழுது சாகாக்கலை குறித்து முயன்று கொண்டிருக்கும் சன்மார்க்க சாதகர்களுக்கு விளக்கம் பெற்றவர்கள் அத்தகையவர்களைக் கண்டு ஏதாவது செய்து வருவார்கள். இது இதுவரை காரியப்பாட்டிற்கு வரவில்லை.
பொதுவெளியில் உயிர் இரக்கமுடன் ஜீவ காருண்யப் பணியை செய்து வரும் சன்மார்க்கத்தில் உள்ளவர்கள். இதில் கவனம் செலுத்தவில்லை.
ஏனென்றால் சுத்த சன்மார்க்க சாத்வீக உணவை விரும்புகின்றவர்கள் குறைவாகவும் கடைப்பிடிப்பவர்கள் மிகக்குறைவாகவும் இருக்கின்றார்கள்.
முயற்சிப்பவர்களுக்கு உதவுபவர்களும் குறைவாகவே உள்ளார்கள்.
இந்த நிலையில் சுத்த சன்மார்க்கத்தில் சாகா நிலை குறித்து முயன்று கொண்டிருக்கும் சாதகர்களுக்கு சாத்வீக உணவு வழங்கி அவர்களுக்கு உதவுவது தனிப்பெருங்கருணையாகும்.
தனிப்பெருங்கருணையே முடிவான ஆனந்த இன்பத்தை தரும்.
சன்மார்க்கிகளுக்கு முதன்மையானது சன்மார்க்க சாதகர்களுக்கு எந்த வகையிலாவது சன்மார்க்க சாத்வீக உணவு முதலானவை வழங்கி அவர்களது முயற்சிக்கு, பயிற்சிக்கு உதவுவதே ஆகும்.
தனிப் பெருங்கருணைக்குரியவர்கள் ஆவோமாக! நலம் நிறைக!
—தயவுடன் சுயம்
