அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
(ஒளி – ஒலி – வெளி – ஆகிய முதல்வனை வாழ்த்துதல்)
- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: பரிபூரண அகண்டாகார காரண அகர வடிவத்தை மூல எழுத்துக்கள் முதலாகக் கொண்டுள்ளன. அவ்வாறே பரசிவ உலகம் முதலான அனைத்து உலகங்களும் இயற்கைப் பேரறக் கடவுளையே முதன்மையாக உடையன. - கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
பொருள்: உலகில் சாகா அருளியல் கல்வி கற்றதன் பயன்பாடு தூய பேரிறையாம் அருட்பெருஞ்சோதி அடியிணைகளைத் தொழுது எழுதற்கேயாம். - கமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்: சுத்த ஆன்ம அறிவாகிய உள்ளமாம் பீடத்தில் என்றும் மாறா இயல்புடன் எழுந்தருளி உள்ள ஆண்டவனின் அடி மலர்களைச் சார்ந்தார் அருட்பெரு வளாகத்தில் அளவற்ற நெடுங்காலம் அமைவுற்று வாழ்வார். - வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்: எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்ட ஒருவருக்குப் பேரின்பப் பேரொளியாகிய இறைவன் ஒளிர்வான். அவன் திருவடி சேர்ந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை. - இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருள்: அசுத்த மாயை, சுத்த மாயை ஆகியவைகளால் உண்டாகும் வினைபோகம் இறைவனின் மெய் உணர்வாம் துதியை மேற்கொள்வாரிடத்து இல்லை. - பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்: ஆணவம், கன்மம், மாயை, திரோதனம், மகாமாயை என்னும் பஞ்சமலத்தின் மாத்திரைகளை விட்டவர்கள் மரணத்தை வென்று என்றும் நிலைபேறு எய்துவர். - தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பொருள்: ஈடு இணையில்லா பேரருள் இறைவனின், துரியாதீத சுயம் ஜோதி ஆகியவருக்கே மனமாயைகளை, மலங்களை வெல்லுதல் கூடும். - அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
பொருள்: எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தன் உயிராகி விளங்கும் ஆண்டவனின் அடி இணைகளைத் தலைக்கு ஓர் அணியாகச் சூடினார் தூலம் சூக்குமம் காரணம் முதலிய பிறவி அல்லல்கள் யாவும் கடந்து இன்ப நிலை பெறுவர். - கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள்: ஜீவகாருணிய செந்நெறித் தலைவனின் ஒளியெனவும் வெளியெனவும் விளங்கும் உபய திருவடிகளைச் சூடிப் பிரகாசிக்காத தலை, நுணுக்க அறிவுடன் அமைந்தும் அது இயங்காப் பொறியே யாகும். - பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்: அருட்ஜோதி கிரணங்களாக விளங்கும் இறைவனின் திருவடி மலர்கள் காரணப் பிறப்பென்னும் மாயாதீதக் கடலையே கால் அளவு நீராக்கிக் கடப்பிக்கும்.

