திருக்குறள் சன்மார்க்க உரை-கடவுள் வாழ்த்து

அறத்துப்பால்
கடவுள் வாழ்த்து
(ஒளி – ஒலி – வெளி – ஆகிய முதல்வனை வாழ்த்துதல்)

  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
    பொருள்: பரிபூரண அகண்டாகார காரண அகர வடிவத்தை மூல எழுத்துக்கள் முதலாகக் கொண்டுள்ளன. அவ்வாறே பரசிவ உலகம் முதலான அனைத்து உலகங்களும் இயற்கைப் பேரறக் கடவுளையே முதன்மையாக உடையன.
  2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றான் தொழாஅர் எனின்.
    பொருள்: உலகில் சாகா அருளியல் கல்வி கற்றதன் பயன்பாடு தூய பேரிறையாம் அருட்பெருஞ்சோதி அடியிணைகளைத் தொழுது எழுதற்கேயாம்.
  3. கமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
    பொருள்: சுத்த ஆன்ம அறிவாகிய உள்ளமாம் பீடத்தில் என்றும் மாறா இயல்புடன் எழுந்தருளி உள்ள ஆண்டவனின் அடி மலர்களைச் சார்ந்தார் அருட்பெரு வளாகத்தில் அளவற்ற நெடுங்காலம் அமைவுற்று வாழ்வார்.
  4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
    பொருள்: எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்ட ஒருவருக்குப் பேரின்பப் பேரொளியாகிய இறைவன் ஒளிர்வான். அவன் திருவடி சேர்ந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை.
  5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    பொருள்: அசுத்த மாயை, சுத்த மாயை ஆகியவைகளால் உண்டாகும் வினைபோகம் இறைவனின் மெய் உணர்வாம் துதியை மேற்கொள்வாரிடத்து இல்லை.
  6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    பொருள்: ஆணவம், கன்மம், மாயை, திரோதனம், மகாமாயை என்னும் பஞ்சமலத்தின் மாத்திரைகளை விட்டவர்கள் மரணத்தை வென்று என்றும் நிலைபேறு எய்துவர்.
  7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
    பொருள்: ஈடு இணையில்லா பேரருள் இறைவனின், துரியாதீத சுயம் ஜோதி ஆகியவருக்கே மனமாயைகளை, மலங்களை வெல்லுதல் கூடும்.
  8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.
    பொருள்: எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தன் உயிராகி விளங்கும் ஆண்டவனின் அடி இணைகளைத் தலைக்கு ஓர் அணியாகச் சூடினார் தூலம் சூக்குமம் காரணம் முதலிய பிறவி அல்லல்கள் யாவும் கடந்து இன்ப நிலை பெறுவர்.
  9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
    பொருள்: ஜீவகாருணிய செந்நெறித் தலைவனின் ஒளியெனவும் வெளியெனவும் விளங்கும் உபய திருவடிகளைச் சூடிப் பிரகாசிக்காத தலை, நுணுக்க அறிவுடன் அமைந்தும் அது இயங்காப் பொறியே யாகும்.
  10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    பொருள்: அருட்ஜோதி கிரணங்களாக விளங்கும் இறைவனின் திருவடி மலர்கள் காரணப் பிறப்பென்னும் மாயாதீதக் கடலையே கால் அளவு நீராக்கிக் கடப்பிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top