திருக்குறள் சன்மார்க்க உரை புலால் மறுத்தல்
-பெரும்புலவர் சீனி சட்டையப்பர்
- தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
பொருள்: ஆன்மாவை வளர்க்க ஆசைப்படாமல் அழியும் தேகத்தை வளர்க்க வேண்டி அகிம்சைக்கு விரோதமான உணவை உண்ணத் தொடங்கினால் இரக்கம், தயவு, காருணியம், அருள்வளர்ச்சி ஆகியவை பெற இருள் நிலை சூழும். - பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருள்: மெய்ப்பொருள் மேவிடல் ஆன்ற ஆன்ம விளக்கமாகிய இரக்க உணர்வால் கைகூடும். அவ்வாறே ஊன் உண்ணாதிருத்தல் தன் மாத்திரம் முதல் தலைவனின் திருவடிவரை விளக்கம் அடைய உதவும். - படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
பொருள்: இரும்பு பிடித்தவன் கை சும்மா இராது. அவ்வாறே கறி மீன் தின்பவரின் உள்ளம் காருணியமாகப் பழக அறியாது. - அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
பொருள்: நன்றாகும் ஆக்கச் செய்கை யாதெனில் எவ்வுயிரையும் எதற்கும் இம்சித்துக் கொல்லாமை. அத்துடன் அதன் உடலை உண்டு உயிர் ஓம்புதல் மானிட வாழ்வியலாகாது. - உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
பொருள்: நமது ஜீவனும் ஆன்மவிளக்கம் பெற உருவாகி உதவுவது ஊன் உண்ணாமை. அதனை அலட்சியப்படுத்தினால் எக்காலத்தும் விளக்கமில்லா ஆன்மாவே பதியும்; பிறப்பு உண்டாக்கும். - தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
பொருள்: எல்லோரும் காருணிய சேவகர் ஆகிவிட்டால் மாமிசத்தை யார் விலை கூற முடியும்? - உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
பொருள்: மாமிசத்தை மறுத்தே ஆதல் வேண்டும். காரணம் அது ஆபாச அபராத இரணத்திரள் ஆகும். - செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
பொருள்: மனித நேய மாண்பினர் மாமிசம் உண்ணார். அதன் வழி அலைவுகட்கும் உட்படார். - அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
பொருள்: மெய்ப்பொருள் வேள்வி, மெய் ஞான வேள்வி செய்வதினும் சீர்மை உடையது யாதெனில் மேன்மை உடைய மாமிசம் மறுப்பதே ஆகும். - கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
பொருள்: தன்னை மரணத்திற்கு எடுத்துச் செல்லாதவனும், தனது தேகத்தை சுத்தப் பிரணவ ஞான தேகமாக மாற்றிக் கொள்பவனுமாகிய ஒருவனை அனைத் துயிர்களும் தலை மேல் வைத்துக் கொண்டாடும்.
–ஆன்மநேயப் பெரும்புலவர் தயவு சீனி சட்டையப்பர்


