திருக்குறள் சன்மார்க்க உரை – புலால் மறுத்தல்

Thirukural-Sanmarga-urai

திருக்குறள் சன்மார்க்க உரை புலால் மறுத்தல்
-பெரும்புலவர் சீனி சட்டையப்பர்

  1. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.

    பொருள்: ஆன்மாவை வளர்க்க ஆசைப்படாமல் அழியும் தேகத்தை வளர்க்க வேண்டி அகிம்சைக்கு விரோதமான உணவை உண்ணத் தொடங்கினால் இரக்கம், தயவு, காருணியம், அருள்வளர்ச்சி ஆகியவை பெற இருள் நிலை சூழும்.
  2. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

    பொருள்: மெய்ப்பொருள் மேவிடல் ஆன்ற ஆன்ம விளக்கமாகிய இரக்க உணர்வால் கைகூடும். அவ்வாறே ஊன் உண்ணாதிருத்தல் தன் மாத்திரம் முதல் தலைவனின் திருவடிவரை விளக்கம் அடைய உதவும்.
  3. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.

    பொருள்: இரும்பு பிடித்தவன் கை சும்மா இராது. அவ்வாறே கறி மீன் தின்பவரின் உள்ளம் காருணியமாகப் பழக அறியாது.
  4. அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல்.

    பொருள்: நன்றாகும் ஆக்கச் செய்கை யாதெனில் எவ்வுயிரையும் எதற்கும் இம்சித்துக் கொல்லாமை. அத்துடன் அதன் உடலை உண்டு உயிர் ஓம்புதல் மானிட வாழ்வியலாகாது.
  5. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.

    பொருள்: நமது ஜீவனும் ஆன்மவிளக்கம் பெற உருவாகி உதவுவது ஊன் உண்ணாமை. அதனை அலட்சியப்படுத்தினால் எக்காலத்தும் விளக்கமில்லா ஆன்மாவே பதியும்; பிறப்பு உண்டாக்கும்.
  6. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
    யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
    பொருள்:
    எல்லோரும் காருணிய சேவகர் ஆகிவிட்டால் மாமிசத்தை யார் விலை கூற முடியும்?
  7. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின்.

    பொருள்: மாமிசத்தை மறுத்தே ஆதல் வேண்டும். காரணம் அது ஆபாச அபராத இரணத்திரள் ஆகும்.
  8. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

    பொருள்: மனித நேய மாண்பினர் மாமிசம் உண்ணார். அதன் வழி அலைவுகட்கும் உட்படார்.
  9. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.

    பொருள்: மெய்ப்பொருள் வேள்வி, மெய் ஞான வேள்வி செய்வதினும் சீர்மை உடையது யாதெனில் மேன்மை உடைய மாமிசம் மறுப்பதே ஆகும்.
  10. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிரும் தொழும்.

    பொருள்: தன்னை மரணத்திற்கு எடுத்துச் செல்லாதவனும், தனது தேகத்தை சுத்தப் பிரணவ ஞான தேகமாக மாற்றிக் கொள்பவனுமாகிய ஒருவனை அனைத் துயிர்களும் தலை மேல் வைத்துக் கொண்டாடும்.

ஆன்மநேயப் பெரும்புலவர் தயவு சீனி சட்டையப்பர்

ஆன்மநேயப் பெரும்புலவர் தயவு சீனி சட்டையப்பர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top