💐தனிப்பெருங்கருணை தினம்💐

தனிப்பெருங்கருணை தின நல்வாழ்த்துகள்!

திருவருள் பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற 200 வது ஆண்டு திருநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகக் கொண்டாடி வருகின்றோம்.
வள்ளற்பெருமானார் வருவிக்கவுற்ற அக்டோபர் ஐந்தாம் நாளினை ஐநாசபை உலக ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

இயற்கையின் தனிப்பெருங்கருணையால் நடந்துள்ளதாக இதனை உணரலாம். நம் வள்ளற்பெருமானார் உலக மகா ஞான குரு என்பதற்கான தனிப்பட்ட வெளிப்பாடாகும் இது.
வள்ளற்பெருமானார். வருவிக்கவுற்ற நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்த தமிழ்நாடு அரசிற்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியும் வந்தனமும்.

நம் மாத இதழும் தனிப்பெருங்கருணை என்ற பெயருடன் வெளிவருவது ஒரு தனிச்சிறப்பே. இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது.
“தனி” என்ற சொல்லானது மற்றவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொள்வதை சுட்டும் சொல்லாகும். ஈடு சொல்ல இயலாதது, சிறப்பானது என்றும் பொருள் கொள்ளலாம்.

தனிப்பெருங்கருணை என்ற சொல்லில் சிறப்பானதாக, ஈடு சொல்ல இயலாததாக, மற்றவற்றிலிருந்து தனித்து அடையாளப்படுத்திக் கொள்வதாக கூறுவதற்கு என்ன இருக்கின்றது?
சுத்த சன்மார்க்கத்தில் தனிப்பெருங்கருணை என்பது ஒரு ஜீவன், தன் இருப்பை தான் விளங்கிக் கொண்ட அளவில் விளக்கம் செய்யும்பொழுது அந்த ஜீவனுக்கு முன்வினை முடிகின்றது; பின்வினை தொடர்வதில்லை.
இந்த இடத்தில் அறிவுக்குள் அறிவாக இருக்கின்ற அந்தப் பேரறிவு, பெருந்தயவு அந்த ஜீவனுக்கு உரிய முறையில் வழிகாட்டி ஏறாநிலைமிசை ஏற்றி அருளுகின்றது. மற்ற மார்க்கங்களில் மதங்களில் சமயங்களில் எல்லோருக்கும் பொதுவானதாகவே இவ்வழியை (முக்தி) வைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கு, சுத்த சன்மார்க்கத்தில் இந்த தனிப்பெரும் வழியானது தனிப்பெருங் கருணையாகி(சித்தி ) விளங்குகின்றது.

சுத்த சன்மார்க்கம் என்பது இயற்கைத் தொன்மை. அதாவது ஆதியில் ஓர் அணு தோன்றிய பொழுது தோன்றிய அந்த ஓர் அணு, அணுவாக இருந்தது என்று கூறலாம்.
அருட்பெருஞ்ஜோதி என்று கூறலாம்,
ஒப்பற்ற பெரிய தயவுடைய பேரறிவு என்று கூறலாம்,
சுத்த சன்மார்க்கம் என்றும் கூறலாம்.

அந்த ஆதி அணு தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்பது தான் விளங்கிக் கொண்டிருப்பதை விளங்க செய்ய பிரபஞ்சமாக, பேரண்டமாக, உயிர்களாக, உலகமாக, மற்று அனைத்துமான பரிணாம வளர்ச்சியாக நாம் கண்டு வருகின்றோம். ஒவ்வோர் அணுவும் ஆதி அணுவின் ஒரு கூறே. எல்லா அணுக்களும் அந்த ஆதியே தான் விளங்க விளங்கும் பெரிய தயவாக பேரறிவாக இருக்கின்றது. இதனை அறிய வேண்டியே அற்புதமான அறிவு ஆற்றலுடன் பரிணாம வளர்ச்சியில் மனிதத்தேகம் எடுத்த உயிர் ஜீவன் ஆனது. இந்த உயிர் ஆன்மா எனப்படும் பொழுது நான் எனும் ஒரு குற்றத்தை உடையதாக இருக்கின்றது. ஜீவன் என அறியப்படும் பொழுது மேலும் இரண்டு குற்றங்களுடன் (கன்மம், மாயை) இவற்றுடன் அறியப்படுகின்றது.

இந்த ஜீவன், ஆன்மா தன் ஆதியை அறிய, உணர, அடைய, அனுபவிக்கவே வள்ளற்பெருமானார் தனிப்பெருங்கருணை ஆனார். பெருமானார்க்கு முன் வந்த அருளாளர்கள் மதம், சமயம், மார்க்கம் என்றும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றும் பலவாறு தத்தம் அறிவு விளக்கத்திற்கு ஏற்ப விளக்கி உள்ளார்கள்.

ஆனால் இவை எதுவும் உண்மையான உண்மையை வெளிப்படுத்தவில்லை.
தம் வாழ்க்கைப் பயணத்தில் முடிந்த முடிவான அந்த பேருண்மையை உண்மையான உண்மையை அறிந்தும் உணர்ந்தும் அடைந்தும் அனுபவித்து நிறைவானார் பெருமானார். அதனால் அந்த ஆதியானவர் அவர் இருக்கும் இடம் தேடி வந்து, அவருடன் ஒன்றாகி அருளாட்சியை பெருமானாருக்கு வழங்கினார்.

தான்பட்ட பெரும்பாட்டினை தன்னுடன் இருந்தவர்கள் இனிவருபவர்கள் படக்கூடாது என்று தான் கண்டு அனுபவித்தவற்றை வெளிப்படுத்தினார் பெருமான். ஆனால் அவருடன் இருந்தவர்களோ பிறகு வந்த நம்மவர்களோ நாமோ இன்னமும் கண்டுக் கொண்டோமில்லை. நாம் கண்டுகொண்டு நம்மை நாம் ஏறாநிலைமிசை ஏற்றிக்கொள்ள, பெருமானார் பட்ட பாட்டையும் அவரது அருள் வெளிப்பாட்டையும் நாம் அறிய, உணர வேண்டும். அவர் நம் மீது கொண்டுள்ள அன்பே தனிப்பெருங்கருணை ஆகின்றது.

ஏனென்றால் பெருமானாருக்கு முன் வந்த அருளாளர்கள், ஞானிகள் அனைவரும் “பிறப்பு என்றால் இறப்பு உண்டு. பிறவிகள்தோறும் அனுபவித்தே உண்மையை அறிந்து இறையுடன் ஒன்றாக வேண்டும்” என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால் பெருமான் அவர்கள் மட்டும் இந்த பிறவிலேயே பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்று வாழலாம்;
கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம்;
அருளாட்சி செய்யலாம் – என வழி வகுத்து தந்துள்ளார்.
அவ்விதம் வழங்கியுள்ளதே தனிப்பெருங்கருணை ஆகும்.

பெருமானாரின் தனிப்பெருங்கருணையை நாம் உணர்ந்தோம் இல்லை.
பெருமானார் தான் கண்ட சுத்த சன்மார்க்க நெறியை தனிப்பெரும் நெறி என்றும் தான் வெளிப்படுத்திய அன்பை தனி அன்பு என்றும் தான் கண்ட ஆண்டவரை தனித் தலைமை பெரும்பதி என்றும் வெளிப்படுத்தியது போன்று ஆண்டவர் தமக்கு வழங்கிய மரணமிலாப் பெருவாழ்வினை எல்லோருக்கும் வழங்க திருவுள்ளம் கொண்டு நம்மில் ஒன்றாகி தன்வழி அதனை வெளிப்படுத்தி உள்ளதும் தானே அதற்கு ஆக்கமாக இருக்கின்றதும் தனிப்பெருங்கருணை ஆகின்றது. இந்த தனிப்பெருங்கருணையை எப்படி நாம் அறிவது, உணர்வது, அடைவது அனுபவிப்பது ?
சத்தியஞானதீப வழிபாட்டை ஞானசரியையில் கண்டபடி வழிபாடு செய்து வருவதால் இவை கூடும்.
அது எப்படி?
வெளிப்படையாகத் தெரியும் இரண்டு உண்மைகள்:
1. முக்தி அடையும் வரை நம் உடலை நாம் பொன் போல் போற்றி வாழ வேண்டும்
2. நமது அறிவு விளக்கத்திற்கு ஏற்ப நம் வாழ்க்கை செயல்களை மட்டும் செய்து விளங்கி வர வேண்டும்.

இந்த இரண்டு செயல்களை நாம் சரியாக செய்து வரும் பொழுது முன் வினை முடியும். பின்வினை தொடராது. நடுத்தயவு விளங்கும். நடுத்தயவு என்பது ஒரு வகையில் சாருலக வாதனையை தவிர்ப்பதாகும். சாருலக வாதனைகளை தவிர்ப்பதால் நம்மில் சத்தியமாக இருந்து வரும் உத்தம சற்குரு நமக்கான செயல்பாட்டை அறிவில் உணர்த்தி,
ஏறாநிலைமிசை ஏற்றி மரணமிலாப்பெருவாழ்வு பேரின்ப சித்திப் பெருவாழ்வை வழங்கி அருளுவார்.
இதுவே தனிப்பெருங்கருணை!
நமது அனுபவத்தில் நாம் விளங்கிக்கொண்டதற்கு ஏற்ப இயல்பாய் நாம் விளங்கும்பொழுது நமது செயல் உண்மைத் தயவாக ஆகின்றது.
ஆண்டவர் அனுபவத்தில் இதுவே தனிப்பெருங்கருணையாக இருக்கின்றது.
இதனை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது பெருமானார் நம்மீது வைத்துள்ள தனிப்பெருங்கருணை ஆகின்றது.

ஆண்டவரின் அறிவு விளக்கமான அனைத்தும் தனிப்பெருங்கருணை அனுபவமாக அண்ட சராசரம் அனைத்திலும் அருளாட்சி செய்து இருப்பதுபோல நாமும் பெருமானார் வெளிப்படுத்திய சுத்த சன்மார்க்க நெறியை தனிப்பெருங்கருணையாகக் கொண்டு அருள் ஆட்சியில் ஓர் அங்கமாக இருப்போமாக!

-தயவுடன் சுயம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top