சத்திய ஞான சபை வழக்கு முதல்…
இன்று
அரசு வள்ளலார் 200 விழா வரை!
அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்! பதினெட்டு வருடங்கள் எனது சுத்த சன்மார்க்கப் பணி குறித்து “தனிப்பெருங்கருணை இதழ்” வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதழ் குழுவினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றொரு நாள் 2004 ம் வருடம் சென்னையில் இருக்கும் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எனது சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சியிலிருந்து, அக்கரகாரம் எங்கள் வீட்டு பக்கத்து தெரு ஹரியிடமிருந்து.
“அண்ணா வணக்கம், நான் ஹரி பேசுறேன், நல்லா இருக்கேளா? அண்ணா, இப்ப மன்னி பிரசவத்திற்கு ஊர் போய் இருக்கிறதா கேள்வி பட்டேன். அண்ணா ஒன்றுமில்லை, எனக்கு சென்னையிலே வேலை கிடைத்துள்ளது, நான் வந்து உங்களுடன் தங்கி கொள்ளட்டுமா? எனக்கு கொஞ்சம் செலவு கம்மியாகும். சரியா அண்ணா ? பிளிஸ். “ என்றான்.
அதற்கு நான் “என்னடா அதுக்கென்ன, வா ஹரி, இதுக்கு போய் பிளிஸ்னு சொல்ற..” என்றேன்.
அவன் வீட்டிற்கு வந்ததில் இருந்து தினம் காலையில் எழுந்திருந்து பூசை நமஸ்காரம் தியானம்னு செய்ய ஆரம்பித்து விடுவான். நான் எழுத ஆரம்பித்து விடுவேன். நாட்கள் கடந்தன.
ஒரு நாள், நான் எழுதியதை பார்த்த ஹரி, “அண்ணா சூப்பர், நல்ல சிந்தனை. ஒரு புதிய கோணத்தில் எழுதியுள்ளீர்கள்” என்றான். “ஆம், அன்று நான் சிந்தித்தது, உலகில் எத்தனை எத்தனை சமயங்கள், மதங்கள்,மார்க்கங்கள் உள்ளது. இதனால் பல பிரச்சனைகள் தான் ஏற்பட்டு, மக்கள் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டு, ஒரு பொதுவான மார்க்கம் இருந்தால் நல்லாயிருக்குமே என்று சூரியனை மையமாக கொண்டு ஒரு புதிய மார்க்கத்தை பற்றி எழுதி வந்தேன்.”
ஹரி என்னிடம்; “அண்ணா உங்கள் எண்ணம், குணத்திற்கு வடலூர் இராமலிங்கம் சாமி நெறி தான் சரியாவரும்” என்றான்.
ஹரியிடம்; “ஏல, எனக்கு சடங்கு,சம்பிராதயம் இதன் மேல் நம்பிக்கை கிடையாதே. ஒரு சக்தி உண்டு, ஆனால் இவர்கள் சொல்லும் கடவுளரிடத்தில் எனக்கு நம்பிக்கை வரமாட்டேன்கிறது, ஆனா, ஒரு பவர் உண்டு, அது எல்லோரையும் சமமாக பார்க்கும், உலகத்தில் உள்ள எல்லா உண்மை குறித்தும் நான் அந்த பவரிடம் கேட்க வேண்டும் என்ற சிந்தனை தான் என்னிடம் … இதற்கு …..” என்றேன்.
அவன்; “இல்லைன்னா… அந்த மகான் சொல்றது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும், எனக்கும் வடலூர் போக ஆசையா உள்ளது..” என்றான்.
அந்த சமயத்தில் எனது உடன்பிறந்த சகோதரரின் வீட்டு விசேஷம். சென்னை கிண்டி நேரு சிலை அருகிலுள்ள ஹோட்டலில் நடைப்பெற்றது. என்னுடன் ஹரி வந்திருந்தான். விழா முடிந்து கீழே வந்து நின்றோம். எங்கள் அருகில் கும்பகோணம் பஸ் நின்றுகொண்டு இருந்தது.
உடன் ஹரி; “அண்ணா இந்த பஸ் வடலூர் வழி செல்லும், போவோமா அண்ணா” என்றான். உடன் இருவரும் பஸ்ஸில் ஏறிவிட்டோம். நேரே சத்திய தருமசாலைக்கு அழைத்துச் சென்றான். அங்கு திரு தொண்டர்குல பெருமாள் அவர்கள் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார்கள். அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்க சொன்னார். நான் அவரிடம்; “வள்ளலார் என்றால் ஜீவகாருண்யம் என்கிறீர்கள். ஆனால் வள்ளலாருக்கு முன்பே இரக்கம், அன்பு, கருணை இவை வெளிப்பட்டியிருக்கும் போது, வள்ளலார் எதை புதியதாக சொன்னார்?” என்றேன். எங்களை சிறிது நேரம் காத்திருக்க சொன்னார். சொற்பொழிவு முடிந்த பின்பு எங்களை அவர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
அன்று இரவு முழுவதும் எங்களுக்கு வள்ளலாரின் இரக்க கோட்பாட்டை விளக்கினார். என்னமோ தெரியல என்னிடம் முழு உயிர் இரக்க ஒழுக்கம் இல்லாததனால் சத்திய ஞான சபை பார்க்காமல் வந்து விட்டேன். வருத்தம் கொண்டேன். அதற்கு ஹரி ; “அண்ணா கண்டிப்பாக வள்ளலார் உங்களை அழைப்பார். கவலைப்படாதீர்கள்” என்றான். எனது நன்றியை ஹரியிடம் தெரிவித்தேன்.
அன்று முதல் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பார்க்கும் உணர்வை வருவித்து கொண்டேன். அங்கிருந்து நேராக மனைவியை காண ஊருக்கு சென்றேன். ஹரி சென்னை திரும்பினார். மனைவியிடமும் எனது பெரிய பெண்ணிடமும் வள்ளலாரை பற்றி சொல்லி மகிழ்ந்தேன். இனி நான் ஒரு ஜீவகாருண்யரானேன் என்றேன். அன்று நடுஇரவு இருக்கும், என் மனைவி தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து என்னிடம் “நானும் இனி புலால் உண்ணமாட்டேன்” என்று சொல்லி விட்டு, உடன் உறக்கம் கொண்டாள். அதை தொடர்ந்து, எனது மூத்த மகள், மனைவி செய்தது போல் தூக்கத்திலிருந்து எழுந்து, கண் விழியாமல் பேசினாள் “அப்பா, நான் புலால் உணவு இனி சாப்பிடமாட்டேன், இதுவரை புலால் உணவு சாப்பிட்டதற்கு கடவுள் என்னை மன்னிப்பாரா?” என்று கேட்டு விட்டு தூங்கி விட்டாள். இதை கண்ட நான் அதிர்ச்சி அடைந்தேன் என்பதை விட பயந்து விட்டேன் எனலாம்.
அன்று முதல் என் குடும்பத்தினர் வள்ளலாரின் வழியில் ஒரே இரவில் எங்களை மாற்றி ஏற்றுக்கொண்டோம். இல்லை இல்லை , எங்களை வள்ளலார் ஏற்றுக்கொண்டார். இதுவே உண்மை!
வள்ளலார், என்னை, என் சிந்தனையை அவர் வழி நடத்தினார் என்ற உண்மையை ஸ்அன்று நான் தெரிந்திருக்கவில்லை.
அடுத்ததடவை நான் வடலூர் சென்ற பின்புதான், சத்திய ஞான சபையை பார்க்கும் உரிமையை நான் பெற்றேன். எனக்கு அது முதல் நாள், எனக்கு சத்திய ஞான சபை பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டே என்னை திரு பெருமாள் அய்யா மற்றும் குறிஞ்சிப்பாடி திரு சுப்பிரமணியன் இவர்கள் அழைத்துச் சென்றனர். அன்று மாத பூசம். சபைக்கு முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனத்துக்கு காத்துக் கொண்டியிருந்த்தனர்.
ஆனால், சபை வெளிப்புற வரண்டா இடது புறம் சென்று வலப்பக்கமாக சுற்றி வரும்போது நான் கண்ட காட்சியே எனது 17 வருட சட்டப்போரட்டத்திற்கு காரணமாகியது.
முன்முகப்பு ஜோதி காட்டப்படும் திருவாசலுக்கு முன் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு இருபது முதல் முப்பது வரை நபர்கள் சூழ்ந்திருந்தனர். ஸ்லோக மந்திர சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நான் பெருமாள் அய்யாவிடம் இது குறித்துக் கேட்டேன். அதற்கு அய்யா; “ இந்த அநியாயத்தை கேட்காதீர்கள், அங்கு செல்ல வேண்டாம், வாருங்கள்” என்றார்.
ஆனால், நான் அவர் சொல் மீறி அக்கூட்டத்தை விலக்கி உள்ளே நடப்பதை பார்த்தேன். அதிர்ந்து போனேன். என்ன அநியாயம் இது. திருவருட்பிரகாச வள்ளலாருக்கு அவர் தம் முடிவான நெறிக்கு முற்றிலும் முரணான வகையில், விக்கிரகங்கள் பல வைத்து, வேத சுலோகங்கள் ஓதி, ஒரு சமய கோயில் சடங்குகளை ஒருவர் செய்துக்கொண்டியிருந்தார். நான் அக்கரகாரத்திலேயே பிறந்து வளர்ந்ததால், உரிமையுடன் அந்தப் பூசை செய்தவரிடம் நேரிடையாகவே கேட்டேன்; “ என்ன மாமா இப்படி பண்றேளே, இது நன்னா இருக்குதா ? இது தவறு இல்லையா?” என்றேன். உடன் அவர்; “அவன் சொன்னானா? போடா.. போ.. ஒன்னும் பண்ணமுடியாது..” என்று சொல்லி அவர் மந்திரம் சொல்ல ஆரம்பித்து விட்டார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பார்த்தனர். நான் அவரிடம்; “ சாதி, சமய, மதம் இவை எவையும் சாராது, தனித்தன்மையோடு உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நெறி ஒன்றை தான் வள்ளலார் கண்டார்கள். அதை விரும்பிதான் நான் இங்கு வந்தேன். ஒய் மாமா.. உங்கள நீங்க மாத்திக்கணும் இல்லைனா சட்டப்படி நடவடிக்கை எடுத்து மாத்துவேன்” என்றேன். அதற்கு மந்திரம் சொல்லியே கையாலேயே போ..போ.. என்றார். நண்பர் சுப்பிரமணியன் என்னை வந்து அழைத்துச் சென்றார்.
அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கமில்லை முழு இரவும் முழித்து அதிகாலையில் திரு பெருமாள் அய்யா அவர்களிடம், “இந்த முரானான பூசை கூடாது, இவை அப்புறப்படுத்தி வள்ளலாரின் வழிகாட்டுதல்படி ஜோதி தரிசனம் நடைப்பெற வைக்க வேண்டும். உங்கள் கருத்து என்ன?” என்றேன். அதற்கு அவர் “அய்யா இதை பல வருடங்கள் கண்டு, மனம் கொதித்து போய் உள்ளோம். இதை நீக்க நான் தயாராக உள்ளேன் என்றார். அய்யா உங்கள் நடவடிக்கையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார் சுப்பிரமணியன். இவர்கள் தவிர பலர், இதை அகற்ற முன் வந்த என்னை மிகவும் மரியாதையாக பார்ப்பதை நான் உணர முடிந்தது. அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு ஊர் சென்றேன். கை குழந்தையுடன் கதவு திறந்த என் மனைவியை அழைத்து கொண்டு தீபம் முன் சென்றேன். அவள் காலில் விழுந்தேன். அதை கண்ட என் மனைவி பதறி கொண்டு.. “என்ன … என்ன.. ? எதற்காக என் காலில் விழுகிறீர்கள் … எனக்கு பயமாக உள்ளது.. என்ன நடந்தது உடனே சொல்லுங்கள்” என்று மிகவும் பதட்டம் அடைந்தாள்.
நான் அவளிடம் நடந்த விசயங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தேன். அதற்கு அவள்; “என்ன செய்ய போறீங்க “ என்றாள். அவள் கைப்பிடித்து; “எனக்கு நீ உதவ வேண்டும். நீ எனக்கு பணம் செலவிக்க அனுமதி தரனும். அடுத்து இதை, ஒத்த கருத்துக்கள் உடையவர்களுடன் சேர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றேன்.” அவள் சம்மதத்தை பெற்ற அன்றே நான் எனது நண்பர் வழக்கறிஞர் திரு எம். சரவணக்குமாரை வீட்டிற்கு அழைத்தேன். நீண்ட நேரம் இது குறித்து பேசினோம். மறுநாள் வடலூர் திரு பெருமாள் அய்யாவை மதுரைக்கு வரச்சொல்லி அழைத்தேன். உடன் திரு சுப்பிரமணியன் அவர்களையும் அழைத்து வரச்சொன்னேன். இருவரும் கிளம்பிவிட்டதாக தகவல் வந்தது. …
(தொடரும்…… )
இன்று (அரசு வள்ளலார் 200);
எனது நண்பர், அரசு வழக்கறிஞர் திரு சுப்பாராஜ், அவர்களுடன் சென்னை வந்திருந்தேன். அவர் அரசு வழக்கறிஞர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக மாண்புமிகு அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது, நீங்களும் வாங்களேன் என்றார். அவர் அழைப்பை தவிர்க்க முடியவில்லை. அவருடன் சென்றேன். அவரிடம் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு அவரின் வாழ்த்துக்களை நண்பர் பெற்றுக்கொண்டார். அவருடன் புகைப்படம் எடுக்கும் போது என்னையும் அழைத்துக் கொண்டு நிற்க செய்தார் அவர்.
இன்று வரை எனது இறைப்பணிக்கும் சரி வேறு எதற்கும் நான் எவரிடமும் பணமோ அல்லது வேறு எதையும் பெற்றது கிடையாது. ஆனால் எனக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பல நண்பர்களை பெற்றிருந்தேன். அதில் சிலர் வள்ளலாரின் சட்டப் போராட்டத்திற்கு எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் என்னுடன் உடன் இருந்து வந்தனர். மனைவி முன்னின்று அனைத்தையும் கவனித்து வந்ததால் எனது அலுவக பணியும் தடை ஏற்படாமல் வந்தாலும், வள்ளலாரின் கொள்கை பணியில் என்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆறு வருடத்திற்கு முன்பே எனது பணியை துறந்து வந்து விட்டேன்.
இது கேள்விப்பட்டு எல்லோரும் அதிர்ந்து போயினர். எனது பணியில் ஒழுக்கத்தை கண்ட உயர் அதிகாரிகள் மற்றும் அன்பில் உரிமை கொண்ட நண்பர்கள் என்னை தடுக்க முயற்சித்தாலும், வள்ளலாரின் தனி நெறி உள்ளது உள்ளபடி வெளிப்பட வேண்டும் என்ற எனது கடந்தகால பணிகளை நினைந்து, என்றும் எனக்கு வள்ளலார் துணையிருப்பார் என்ற நம்பிக்கையை அவர்கள் பெற்றிருந்ததால் எனது முடிவை தடுக்க முயச்சிக்கவில்லை.
ஒருநாள் காலை பதினோரு மணியிருக்கும் எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையிலிருந்து பேசுகிறோம். உங்களை அரசு சிறப்பு குழுவில் சேர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து உள்ளோம். உங்களின் ஒப்புதல் வேண்டும் என்றார் அந்த உயர் அதிகாரி அவர்கள். அதற்கு நான் ; “நன்றி மேடம், ஆனால் நான் உங்கள் துறை எதிர்த்து பல வழக்குகள் போட்டவன்” என்றேன். அதற்கு அவர்கள் “எல்லாம் தெரியும்., உங்களை பற்றி விசாரித்த பிறகே உங்களை தேர்வு செய்து உள்ளோம்” என்றார்கள். நான் யோசித்து சொல்கிறேன் என்றேன். சிறிது நேரம் கழித்து ஒரு உயர் பதவி வகிக்கும் ஒரு அய்யாவின் போன் அழைப்பு வேறு விசயமாக வந்தது. அவரிடம் இது குறித்து சொன்னேன். அதற்கு அவர்கள் பல பணிகள் வள்ளலாருக்காக செய்த நீங்கள், இன்று அரசே வள்ளலாருக்கு விழா எடுக்கிறது. அதன் சிறப்பு குழுவில் நீங்கள் சேர்ந்து மேலும் தொண்டு ஆற்ற நல்ல வாய்ப்பு தானே என்றார்கள். பின்பு மீண்டும் அழைப்பு இந்து சமய அறநிலையத்துறை இடமிருந்து வந்தது. நான் ஒப்புக்கொண்டேன்.
சிறப்பு குழுவின் முதல் கூட்டம். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்கள் அனைவரையும் மாண்புமிகு முதல்வரிடம் அழைத்து சென்றார்கள். குழுவில் உரையாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்கள்; “ வள்ளலாரின் உண்மை பொது நெறி உலகம் முழுவதும் பரவ வேண்டும். வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக வடலூரில் சர்வ தேச மையம் மற்றும் 52 வாரங்கள் முக்கிய மாவட்ட நகரங்களில் அரசு சார்பில் முப்பெரும் விழா, இன்னும் பல திட்டங்களை வள்ளலாருக்கு மற்றும் அவர்தம் சுத்த சன்மார்க்க நெறிக்கு தான் செய்ய தயாராக உள்ளதை அவர் சொல்லும் போது, அவர் மேல் நான் வைத்திருந்த மரியாதை மேலும் பன்மடங்கு பெருகியது”. மிக்க நன்றியை அவருக்கு நாங்கள் சொன்னோம்.
உயர்திரு அமைச்சர் அவர்கள் எங்களிடம்; இக்குழுவில் நல்ல ஆலோசனைகளை வழங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரத்தை நம் மாண்புமிகு முதல்வர் வழங்கி உள்ளதை சுட்டிக் காட்டி, உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டார்கள்.
வள்ளலாரின் முப்பெரும் விழாவில் பயன்படுத்த, மேலும் வள்ளலாருக்கான ஒரு அரசு லோகோவை செய்ய திட்டமிட்டுள்ளது. அதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றார்கள். அதற்கான சில வள்ளலாரின் படங்கள் திரையிட்டு காட்டப்பட்டது.
ஆனால், திரையிடப்பட்ட வள்ளலார் படங்கள் அனைத்தும் சைவ சமய அடையாளம் விபூதி பூசிய படங்கள். எனக்கு ஒன்றும் ஓடவில்லை. வள்ளலாருக்கு எந்தொரு சமய அடையாளம் கூடாதே, இதை எப்படி சொல்ல? எனக் குழம்பிய போது, அப்பொழுது மாண்புமிகு முதல்வரின் பேச்சு எனக்கு ஞாபாகம் வந்ததது. “ சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லுங்கள் “ என்ற வார்த்தை தான் என்னை எழுந்து நிற்க செய்தது.
“வள்ளலாரின் படங்களுக்கு எந்தொரு அடையாளம் கூடாது.” -என்றேன். எல்லோரும் என்னை திரும்பிப் பார்த்தனர்.
“2005 முதல் 2023 வரை“ -என் கடமை!
(தொடரும்…… )
—தயவுடன் அருள் நா.இளங்கோ. BCom.BL.LLM..

