மருதூரின்(மருதத்தின்) சிறப்புகள்:
மனித குலத்தின் மாண்பை மருத நிலத்தின் வழியாக உணர்த்தவே மருதூரில் தோன்றினார் நம் வள்ளல் பெருமான். உலகில் உள்ள மற்ற இனங்களும் நாகரிகங்களும் மருத நிலத்தில் தான் தோன்றியது. அதாவது ஆற்றங்கரை நாகரிகமாக. ஆனால் தமிழினம் மட்டும்தான் குறிஞ்சியில் தோன்றியது. குறிஞ்சியில் வாழ்ந்த போது தேன் எடுத்தும், கிழங்கு அகழ்ந்தும், தினை விளைவித்தும் அதனை எல்லாம் உண்டு உயிர் வாழ்ந்தான்.
அதன் பிறகு முல்லை நிலத்துக்கு வந்தான். ஆடுமாடுகளை மேய்த்தும் அதன் பாலை உண்டும்; வரகு, சாமை உண்டும் உயிர்வாழ்ந்தான். இயற்கையின் விளையாட்டால் நீர் வற்றிப்போய் நிலம் வறண்டு பாலையானது. அதில் வாழ வழியில்லை என்பதை அறிந்தான்.
இருவகை (குறிஞ்சி, முல்லை) நிலத்தையும் இழந்த பின்னர் அவன் ஓடியது நெய்தலை நோக்கி. ஆறு மலையில் உருவாகி கடலுக்கு போவது போல அவன் வாழ்வும் இறுதியில் கடலை நோக்கி போகிறது . அங்கு மீன் பிடித்து வாழ்ந்தான். குறிஞ்சி, முல்லை, பாலை. நெய்தல் ஆகிய நான்கு நிலத்திலும் வாழும் போது கிடைத்த காய்களையும், கனிகளையும் உண்டான். அது கிடைக்காத போது வேட்டையாடி உண்டான். அவன் உயிர் வாழ்வதற்கு ஆகாரம் தேவைப்பட்ட காலத்தில் உண்ணும் உணவில் சைவம் என்றும், அசைவம் என்றும் பார்க்கவில்லை. எது கிடைக்கிறதோ அதை உண்டான். இதுதான் மனித சமுதாயத்தின் பழைய கற்கால வாழ்க்கை.
நெருப்பையும், சக்கரத்தையும் கண்டறிந்த பின் புதிய கற்காலம் உருவானது. நாடோடி வாழ்க்கைக்கு முடிவு கட்டினான். நிலையான வாழ்க்கையையும், நிம்மதியான வாழ்க்கையையும் தேடி கண்டறிந்தான். பகுத்தறிவு பிறந்தது. மருதநிலம் மலர்ந்தது. உழவுத்தொழில் உதித்தது. தன் உழவுக்கும் தன் உழைப்புக்கும் உறுதுணையாய் விலங்குகளைப் பழக்கினான். அவற்றை பாதுகாக்க விரும்பினான். ஏர் உழுதலுக்கும், வண்டி இழுப்பதற்கும் காளை மாடுகள் பயன்பட்டன . பால், தயிர், மோர். வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்கு பசுமாடுகள் பயன்பட்டன. அவற்றின் சாணம் வயலுக்கு உரமானது.
மாடுகளே மனித சமுதாயத்திற்கு வரமானது. மாடுகள் இல்லை என்றால் மனித சமுதாயத்திற்கு உழவு இல்லை. உணவு இல்லை. உயர்வு இல்லை, அவ்வளவு ஏன் இன்று இந்த உலகமே இல்லை.
தமிழ்ச்சமுதாயம் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. மாடுகள் உழவர்களின் நண்பனாக விளங்கியது. தமிழர்கள் மாடுகளை உயிராக பார்த்தார்கள். ஒருபோதும் உணவாக பார்த்ததில்லை. நாளடைவில் மாடுகளை தெய்வமாக்கினான். எல்லா உயிர்களையும் நேசிக்கும் பகுத்தறிவு பிறந்ததும் அவற்றை தன்னுயிர்போல் நேசித்தான். படிப்படியாக அசைவ உணவு உண்பதைக் குறைத்துக்கொண்டான்.
மனிதன் கண்ட ஐந்தாம் (மருதம்) திணையில்தான் அவன் ஆறாம் அறிவு வளர்ச்சி பெற்றது. ஒரு மனிதன் உயர்திணை என்னும் உன்னத நிலையை எட்டியது மருத நிலத்தில்தான். காரணம் அவனுக்கு உழவு உறுதுணையாய் இருந்தது. தான் உயிர் வாழ்வதற்கும் தன்னால் பிற உயிர்கள் வாழ்வதற்கும் உழவே காரணமாக இருந்தது.
பண்டைய தமிழர்கள் கண்டது ஐந்து திணை. பகுத்தறிவு பெற்ற தமிழன் கண்டது ஒரே திணை மருதத்திணை. அந்த மருதத்திணையில் வாழும் மக்களுக்கு மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு கிட்டும். எவ்வுயிரையும் கொல்லாத நிலையும் எவ்வுயிர்க்கும் பசி இல்லாத நிலையும் மனிதனுக்கு உணர்த்தியது மருதநிலம். அப்படிப்பட்ட மருத நிலத்தின் சிறப்பை மனித சமுதாயத்திற்கு உணர்த்தவே வள்ளல் பெருமான் மருதூரில் (மருதம்+ஊர்) பிறந்தார்.
(தயவு ஆ.தி பகலன் எழுதிய “வள்ளலார் கண்ட தருமச்சாலை” என்னும் நாலில் இருந்து)

