அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை (அகவல் 399 – 402)

Arutperumjothi Ahaval

அருட்பெருஞ்சோதி அகவல் உரை

399. மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
400. அண்ணுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி

விளக்கம்: எந்த உயிரும், எந்தப் பொருளும் ஆரம்பத்திலேயே தன் நிறை நிலையோடு தோன்றி விடுவதில்லையாம். இதற்கு விதி விலக்காக உள்ளது ஒன்றே ஒன்று உண்டு! அது தான், பரம்பொருளாம் அருட்பெருங்கடவுள் ஆம். அக்கடவுள் அனாதிகாலமாகவே முழுநிறைவோடு, நிறை அருளோடு எங்கும் பரிபூரணமாக இருக்கின்றது உண்மையாம். உலகியலார்க்கு இந்த மெய்ப்பொருள் பற்றித் தெரிந்துகொள்ள  முடிகின்றதில்லை. இதனால்தான் இவ்வுலகிடை தோன்றிடும் எவ்வுயிரும், எப்பொருளும் நுண்ணிலையிலிருந்து சிறிது சிறிதாகப் பெருகி வளர்ந்து மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றனவாம்.

இம்மண்ணுலகில் தோன்றிடும் உயிரும் பொருளும் மண்ணின் கூறினால் ஏற்பட்ட புறவடிவங்களை ஏற்று வளர்ந்து கொண்டுள்ளனவாம். இந்த மண்ணிலைத் தோற்றங்கள், அபக்குவம், பக்குவாபக்குவம், பக்குவம் என்ற நிலைகளை அடைந்து வருகின்றன என்பது அறியலாகும். ஒரு மலரை எடுத்துக்கொண்டால், அது முதலில் சிற்றரும்பாக உள்ள நிலை அபக்குவமாம்; அது பேரரும்பாகி மொட்டாகி முகிழ்த்திருக்கும் நிலை அபக்குவாபக்குவமாம். மேல் மொட்டவிழ்ந்து இதழ்கள் விரிந்து நிறைமணங் கமழ விளங்கும் நிலையே அம்மலரின் பக்குவநிலையாகும். இதுபோல், ஒரு கனியை எடுத்துக்கொண்டு பார்த்தால், அது சிறிய பிஞ்சாக இருந்த நிலை அபக்குவமாயும், பெருத்துக் காயாக இருந்த நிலை அபக்குவாபக்குவமாயும் பழுத்துக் கனிந்த நிலையே பக்குவ நிலையாயும் அறியலாகும்.

இதே போன்று மனிதப்பிறப்பு வடிவை எடுத்துக்கொண்டு நோக்கின், கருவிலேயே அபக்குவம், அபக்குவாபக்குவம், பக்குவம் அடைந்து குழந்தையாய்த் தோற்றுவதும், இந்தக் குழந்தை நிலையையே அபக்குவமாகவும் பின்னர் அறியாத சிறுபிள்ளைப்பருவம் அபக்குவாபக்குவமாகவும், நல்ல வயதுவந்த முதிர்ச்சிப்பருவம் பக்குவ நிலையாகவும் விளங்கும். இதுவுமல்லாமல், மனிதன் பொறிபுலன் இச்சைவழியில் வாழ்ந்துவரும் நிலை அபக்குவமாகவும், பகுத்தறிவு கொண்டு நல்லொழுக்க வாழ்வு மேற்கொண்டு விளங்கும் காலம் அபக்குவாபக்குவநிலை எனவும், முடிவில் மெய்யறிவும் மெய்யன்பும் கொண்டு மெய்யின்பம் பெருக வாழ்கின்ற பருவமே பக்குவமான நிறை மனித நிலை என்று அறியலாகும்.

மேற்படி, அபக்குவம், பக்குவாபக்குவம், பக்குவம் ஆகிய மூன்று நிலைகளிலும் அகத்தும் புறத்தும் பலவித மாற்றங்களும் செயல்களும், பயன்களும் உண்டாக்கிக் கொண்டுள்ளனவாம். இப்படி உண்டாகும் நிலைகளில் பெரும்பயன் எதுவெனில், மனிதன் சுத்தசன்மார்க்க பக்குவநிலை எய்தும் சுத்த சுகானந்தப் பேரின்பப்பெருநிலை வாழ்வே ஆகும். இவ் அருட்பெரும் வாழ்வு மனிதனுக்கு வழங்குவித்தற்பொருட்டே இந்த மண்ணிடைப் பக்குவநிலைகளை எல்லாம் வகுத்து அதற்கதற்கான பயன்களையும் விளைவித்து, முடிவில் அப் பெரும்பயன் தரும் நிறை அருட்பெருஞ்ஜோதியையே அண்ணுற அமைத்துக் கண்டடையும் பக்குவநிலையையும் ஏற்படுத்தியுள்ளார் இப்பொழுது. இதனால், இந்த இறை அருட்பெரும்பயன் பெறத்தக்க முறையில் மனிதன், தன் அகத்தே அக்கடவுட் பூரணத்தைச் சார்ந்து நின்று நீங்காது அனகவாழ்வு மேற்கொண்டு ஒழுகவேண்டும். இம்மாதிரி பக்குவ நிலையே சுத்தசன்மார்க்கத்தினர் அடையவேண்டிய நிலையாம். இதுகொண்டு உலகமெல்லாம் அருளன்பில் ஓங்கும்.

அருட்பெருஞ்சோதி அகவல் உரை

401. மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
402. அண்ணுற வமைத்த அருட்பெருஞ்ஜோதி

(விளக்கம்) மண்ணின் இயல் விளக்க, இப்படிப் பதினெண் இணையடிகள் கொண்டு குறித்துள்ளவர், ஈண்டு தொகுத்துரைக்கின்றதோடு, மேல்விரி நிலைக்கும் வித்திடுகின்றார் இங்கு. மண்ணியல் விரி என்ற தலைப்பில்,

1. மண்ணினில் திண்மையும் கிடக்கையும்,
2. மண்ணில் பொன்மையும் ஐம்மையும்,
3. மண்ணின் ஐம்பூவும் ஐந்திறமும்,
4. மண்ணிற் பலவகை நாற்றமும்,
5. மண்ணிற் பலவகை கருநிலையும்,
6. மண்ணில் ஐந்தியலும் பயனும்,
7. மண்ணில் அடிநிலையும் பன்னிலையும்,
8. மண்ணில் ஐந்தைந்து வகைக் கலப்பும்,
9. மண்ணியற் சக்தியும், மண்செயற்சத்தியும்,
10. மண் உரு, மண்கலை சக்தியும்,
11. மண் ஒளிச்சக்தி மண் கருச்சக்தியும்,
11. மண் ஒளிச்சக்தி மண் கருச்சக்தியும்,
12. மண்ணகச்சத்திகள் பலவகை,
12. மண்ணகச்சத்திகள் பலவகை,
13. மண்ணிலை சத்தர்கள் பலவகை. 
14. மண்கரு வுயிர்த்தொகை வகை விரியும்,
15. மண்ணினிற் பொருள் பல வகை விரியும்,
16. மண்ணுறு நிலையும் செயலும்,
17. மண்ணிடைப் பக்குவமும் பயனும்,
18. மண்ணியல் பலபலவும் பிறவும் ஆக

மண்ணியலை விரித்துக் காட்டியுள்ளதையீண்டு அறிகின்றோம்.

மண்ணியலைப்பற்றி இவ்வளவு விரித்துக் கூறியும், இவை மட்டுமல்ல இன்னும் விரிவு உள்ளது என்ற குறிப்பை, பிறவும் என்ற சொல்லாற் சுட்டியுள்ளார். அப்படி மற்ற விரிவுகள் ஏதேனும் உளவாயினும், அல்லது இனிமேற்கொண்டு புதிதாகத் தோற்றுவதாயினும் கூட அவை எல்லாமும் அருள் அனுபவத்திற்கே உரியனவாய் அண்ணுற அமைத்துள்ளதாம் அருட்பெருஞ்ஜோதி. ஆண்டவர் நிறை பரம்பொருளாக என்றும் இருத்தலின், அதனிடத்து இல்லாதது என்று ஒன்றும் இருக்கமுடியாது; ஒருவேளை வெளிப்படாமல் இருக்கலாம். அப்போது குறிப்பிட்ட ஒன்று, இல்லாதது போலிருக்கலாம். பின்னர் வெளியாகும் போது புதிய தோற்றமாய்க் கொள்ளக்கூடும்.

இந்த மண்ணியலில் “ஹீலியம்” என்ற தாது (Helium) இல்லாதிருந்ததும் பின்னர் அவ்வுலோகத்தாது ஞாயிற்றினிடத்திலிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. சூரியனை “ஹீலியாஸ்” (Helios) என்ற ஜெர்மானியச் சொல்லால் குறிக்கப்படுவதிலிருந்து, அச்சூரியனிடமிருந்து கிடைக்கப்பெற்ற உலோகத்திற்கு ஹீலியம் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கின்றதாம். இதுபோல் இன்னும் புதிய புதிய தாதுப்பொருட்களும் பிறவும், சந்திர மண்டலம் அல்லது மற்ற கோள்களிலிருந்து  பெறப்படலாம் அல்லது வேற்றுத் தொலைதூரத்து விண்மீன்களிலிருந்து பல மண்ணியற்பொருள்கள் கிடைக்கப்பெறலாம். இவையெல்லாம் கூட நம் அகநிலையுண்மைக்குள் அடங்கியதாய், அருளியல் வாழ்வுக்கு உதவுவதாய்த் தெரிந்துகொள்ளுவோம். இம்மண்ணியல் விரிவு பெரியது, ஆகையால் இவ்வளவு அதிகமாகக் குறிக்க நேர்ந்துள்ளது. மற்றவைகளின் விரிவு ஓரளவு குறைவாய் இருக்கும், என்றாலும் ஒவ்வொன்றும் வழங்கவுள்ள பயன் பெரிதேயாம்.

– தயவு திண்டுக்கல் சரவணானந்தா சுவாமிகள்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top