தினை அரிசி இட்லி:
தினை அரிசி மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு சிறு தானியம் ஆகும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாகச் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இரும்புச் சத்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைப்பதாகக் கூறுகிறார்கள். கூடுதலாக ஒரு செய்தி என்னவென்றால் நிறீutமீஸீ என்று சொல்லக்கூடிய அந்த பிசு பிசுப்பு தன்மையுடைய பொருள் இதில் இல்லை என்று கூறப் படுகிறது. எனவே இது பல தரப்பட்ட மக்களுக்கும் பயன் தரக்கூடிய வகையில் உள்ள ஒரு தானியமாகும். இந்தத் தினை பறவைகளுக்கும் சிறந்த உணவாகக் காணப்படுகிறது.
இந்தத் தினை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாவரமாகும். இதற்கு அதிக அளவு நீர் தேவைப் படாது. இதிலிருந்து பல விதமான உணவுப் பொருள்கள் தயாரிக்கலாம். அதில் ஒன்று இட்லி. பெரியவர் முதல் சிறியவர் வரை அதாவது அனைத்துத் தரப்பினரும் இந்த இட்லியைச் சாப்பிடலாம்.
தேவையானப் பொருள்கள்:
1. 2 கப் தினை
2. 1 கப் உளுந்து
3. 2 தேக்கரண்டி வெந்தயம்
4. தேவையான அளவு உப்பு
செய்முறை:
தினையையும் உளுந்தையும் தனித்தனியாகக் கழுவி மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு இரண்டையும் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு கலந்து கரைத்து வைத்துவிட வேண்டும். இந்த மாவு எட்டு மணி நேரம் புளிக்க வேண்டும். புளித்த பிறகு இந்த மாவை எடுத்து இட்லியாகச் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு பொருத்தமான தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி மற்றும் பூண்டுச் சட்னி போன்றவற்றைச் செய்து சாப்பிட்டால் குழந்தைகளும் இந்த இட்லியை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
—தயவுடன் வைரம் சக்கரவர்த்தி.
