மாதம் ஒரு சன்மார்க்க சன்மார்க்க சங்கம்-கனடா

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கனடா தோற்றம் :

கனடிய மண்ணில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நம் வள்ளல் பெருமான் அருளாணையினால் சென்ற வருடம் 2022, ஏப்ரல் 16 ஆம் தேதி, சனிக்கிழமை இணையவெளியில் தோற்றுவிக்கப்பட்டது. தயவுத் திரு. உமாபதி ஐயா மற்றும் தயவுத் திரு. வெற்றிவேல் ஐயா தலைமையில் சபை தொடங்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டது. 

அல்பெர்டா மாகாண அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் பெற்று, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கனடா-எட்மான்டன் (INTERNATIONAL SOCIETY OF ANCIENT WISDOM), என்ற பெயரில் சங்கத்தைப் பதிவு செய்து,  தயவு திரு.ஸ்ரீனிவாசன் ராமசாமி அவர்களைத் தலைவராகவும்  தயவு திரு.செல்வகுமார் முனுசாமி அவர்களைத் துணைத்தலைவராகவும், தயவு லட்சுமி பாலசுப்ரமணியன் அம்மா அவர்களைச் செயலாளராகவும் மற்றும் தயவு திரு.தர்மேந்திரா கண்ணன் அவர்களைப் பொருளாளராகவும் அமர்த்தி சங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாதந்தோறும் அன்னதானம்:

கனடிய மண்ணில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தோற்றுவித்த நாள் முதலே மாதந்தோறும் ஒருநாள் அன்னதானம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையினாலும், வள்ளல் பெருமான் தயவாலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

மேலும் சபை அன்பர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடி, உடல் நலம் குன்றிய அன்பர்களுக்காக அகவல் பாராயணம் செய்து அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத்திரும்ப பிரார்த்தனை செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. 

அக்டோபர் 15, 2023 – வள்ளலார் 200:

நமது கனடா சங்கத்தின் அடுத்தகட்ட நிகழ்ச்சியாக, வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வள்ளல் பெருமான் வருவிக்க உற்ற தினத்தை “வள்ளலார் 200” என்று விழா எடுத்துக் கொண்டாட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதன் பொருட்டு உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களான நாம், உலகெங்கும் சன்மார்க்கம் பரவ வேண்டும் என்று  விண்ணப்பம் செய்யுமாறு கனடா சங்கத்தினர் நாம் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் தற்பொழுது அல்பெர்டா மாகாணத்தில் “ஆளும் கட்சியில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள்” விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கையடக்க அகவல் மற்றும் வள்ளல் பெருமானின் புகைப்படத்தைக் கொடுத்து, அனைவரது இல்லத்திலும் வள்ளல் பெருமானையும் அகவலையும் கொண்டு சேர்க்க முயற்சி எடுத்துள் ளார்கள். 

விழாவின் மணிமகுடமாக 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு நான்கு பிரிவுகளாக திருவருட்பா ஒப்பித்தல் போட்டி நடத்தி, முதல் பரிசு பெறும் குழந்தைக்கு தங்கக் காசை பரிசாக அளிக்க உள்ளார்கள். இதன் மூலம் குழந்தைகள் போட்டியில் பங்குபெற உத்வேகமாக இருக்கும். 

வள்ளலார்-200 கொண்டாட்ட நிகழ்வை ஆதரித்து ஊக்கம் அளிக்கும் விதமாக பெண்ணாடம் வள்ளலார் அறநிலைய நிறுவனத் தலைவர் தயவு திரு முத்துஜோதி அவர்களும், பாடகர் மனோ அவர்களும் இணையதளத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரையும் வாழ்த்து கூறி வரவேற்று, சுத்த சன்மார்க்கத்தின் மீது தாம் கொண்டுள்ள மதிப்பையும், தமது அன்பையும் பேராதரவையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

விழாவில் சன்மார்க்க மருத்துவம், சன்மார்க்க வாழ்வியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை நோய் வராமல் காக்கும் வழிமுறை களையும் போதிக்க உள்ளார்கள்.

இறுதியாக சன்மார்க்க உணவு வழங்கி அனைவருக்கும் பசியாற்றல் நடைபெற உள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா மண்ணில் சன்மார்க்கம் தழைத்தோங்க உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களான நாம் அனைவரும் அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து, நம் அன்பை வெளிப்படுத்தி, நமது எண்ணம் போல் உலகெங்கும் சன்மார்க்கம் பரவவேண்டும் என வாழ்த்தி அவர்களை ஆசீர்வதிப்போமாக!

அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! 

வள்ளல் பெருமான் திவ்ய திருவடிகளே சரணம்! சரணம்! 

-தயவுடன் தனிப்பெருங்கருணை ஆசிரியர் குழு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top